ஒரு வார இடைவெளியில் சபரிமலையில் மீண்டும் அதிகரித்த பக்தர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2023 10:12
சபரிமலை; ஒரு வார இடைவெளியில் சபரிமலையில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வாகனங்களை தடுக்கும் நிகழ்வு தொடங்கியுள்ளது. சில இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்களை தேவசம்போர்டு உறுப்பினர் அவராகவே அனுப்பி வைத்தது போலீஸ் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமானதால் 18 மணி நேரம் வரை கியூ நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காடுகளிலும், வழிகளிலும் பக்தர்கள் தடுக்கப்பட்டதால் உணவும் தண்ணீரும் கிடைக்காமல் பக்தர்கள் திரும்பி செல்லும் நிலையும் ஏற்பட்டது. இது கேரளா அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசும் கேரள முதல்வர் பின்னராய் விஜயனுக்கு கடிதம் எழுதினர். இதை தொடர்ந்து கேரளா தேவசம்அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சபரிமலையில் வந்து நிலைமைகளை பார்வையிட்டு எல்லாம் சரி செய்து விட்டதாக கூறி சென்றனர். ஆனால் நேற்று முன்தினம் முதல் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பம்பையில் சில மணி நேரமும் அதைத்தொடர்ந்து நீலிமலை, அப்பாச்சிமேடு,மரக்கூட்டம் வரை பல மணி நேரமும் கியூவில் நின்றால் தான் சன்னிதானம் பெரிய நடை பந்தலுக்கு செல்ல முடிகிறது. மர கூட்டத்திலிருந்து பக்தர்கள் குறுக்கு வழியாக சந்திராங்கதன் ரோட்டுக்கு செல்வதை தடுக்கும் வகையில் தடுப்பு வேலிகளில் பெரிய துணி கட்டப்பட்டுள்ளது.
எருமேலியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பியதால் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. சுமார் நான்குமணி நேரம் எருமேலி போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பக்தர்கள் எருமேலிக்கும் நான்கு ஐந்து கிலோ மீட்டருக்கு முன்பாகவே வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து எருமேலிக்கு வந்து பேட்டை துள்ளினர். இதன் காரணமாக கேரளா அரசு பஸ் போக்குவரத்து கழகத்தின் சர்வீஸ் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சபரிமலையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர் வழக்கறிஞர் அஜித் குமார் சென்று கொண்டிருந்தார். ளாகா மற்றும் பெருநாட்டில் பக்தர்களின் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி இருந்ததை பார்த்து கீழே இறங்கிய அவர் வாகனங்களை தடுத்து நிறுத்தியதற்கான காரணங்களை கேட்டார். அப்போது உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க நிறுத்திவிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வாகனங்களை தடுத்து நிறுத்தும் அளவு பம்பையில் கூட்டம் இல்லை அதனால் வழிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறிய தேவசம்போர்டு உறுப்பினர் அவராகவே வாகனங்களை செல்லும்படி கூறினார். இதை தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றது. இதற்கு பத்தணிம்திட்டை மாவட்ட எஸ்.பி., தனது அதிருப்தியை தேவசம்போர்டிடம் தெரிவித்துள்ளார். இதுவும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இனிவரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சன்னிதானத்தில் இருக்கும் கூட்டத்தை பொறுத்து 15 முதல் 20 நிமிட இடைவெளியில் மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து அனுப்பப்படுவார்கள். தரிசனம் முடிந்த பக்தர்கள் உடனடியாக பம்பைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் ஒரு மணி நேரத்தில் குறைந்தபட்சம் 4,000 பேரை படியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சன்னிதானம் போலீஸ் எஸ் பி சுதர்சனன் தெரிவித்தார்.