பதிவு செய்த நாள்
23
டிச
2023
06:12
பண்டிகைகள், விரதங்கள் என ஹிந்து மதத்தில் உள்ளன. பண்டிகை என்பது பகவானுக்கு ஆடை, அலங்காரம் அணிவித்து நாமும் புதிய ஆடை, ஆபரணங்கள் அணிந்து பூஜை செய்ய வேண்டும். அன்று அறுசுவை உணவு சாப்பிட்டு மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக தீபாவளியை சொல்லலாம். ஆனால் விரதம் என்பது பகவானின் நினைவிலேயே உபவாஸம் இருப்பது. உதாரணமாக கார்த்திகை, ஷஷ்டி, சதுர்த்தி, பிரதோஷம், ஏகாதசி. இதில் முக்கியமானது ஏகாதசி விரதம். மற்ற விரதநாட்களில் ஒரு வேளை சாப்பிடலாம். ஆனால் ஏகாதசியன்று முழுவதுமாக விரதமிருக்க வேண்டும்.
அன்று பெருமாளை வணங்கி துளசி தீர்த்தத்தை சாப்பிடுங்கள். கோயிலுக்கு செல்லுங்கள். இரவு துாங்காமல் பெருமாளின் கதைகளை படியுங்கள். மறுநாளான துவாதசியன்று அதிகாலையில் நீராடி விட்டு பெருமாளை வணங்கியபிறகு, ஒருவருக்காவது அன்னதானம் செய்யுங்கள். பின் உப்பு, புளிப்பு இல்லாத உணவுடன் சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை சேர்த்து சாப்பிட்டு விரதத்தை முடியுங்கள்.
சுலபமான ஒரேவழி; மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியும், கோயில்களில் நடக்கும் சொர்க்கவாசல் திறப்பும் நமக்கு மோட்சம் அளிக்கும் விழாவாகும். அன்று கோயிலுக்கு சென்றால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். பாண்டவர்களில் ஒருவரான தர்மர் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை அகற்ற சுலபமான வழியைக் கூறுங்கள் என வேதவியாசரிடம் ஒருமுறை கேட்டார். அதற்கு அவர், அதற்கு ஒரே வழி ஏகாதசி உபவாசம்தான். சாஸ்திரங்களும் இதையே வலியுறுத்துகிறது என்றார்.
முக்கியம் வாய்ந்தது; விரதங்களில் உச்ச ஸ்தானத்தில் இருப்பது ஏகாதசி.
ந காயத்ர்யா: பரம் மந்த்ரம் ந மாது:
பர தைவதம் |
ந காச்யா: பரமம் தீர்த்தம் நைகாதச்யா:
ஸமம் வ்ரதம் ||
என ஏகாதசி விரதம் குறித்து ஒரு ஸ்லோகம் கீழ்கண்டவற்றை கூறுகிறது.
காயத்ரிக்கு மேலே மந்திரமில்லை; அம்மாவுக்கு மேலே தெய்வமில்லை; காசிக்கு மேலே தீர்த்தமில்லை என்றும் கடைசியில் ஏகாதசிக்கு சமமான விரதம் எதுவுமில்லை என்கிறது.
தர்மசாஸ்திரமும் இதுகுறித்து சொல்கிறது.
அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய: அபூர்ணாசீதி வத்ஸர:|
ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ:
உபயோ: அபி ||
மனிதராக பிறந்தவர்களில் 8 - 80 வயதிற்கு உட்பட்ட அனைவரும் மாதத்திற்கு இருமுறை வரும் ஏகாதசியில் விரதம் இருக்க வேண்டும் என்கிறது. இயலாதவர்கள் பழங்கள், பால் சாப்பிட்டு பகவானின் நாமங்களை சொல்லலாம். மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் ஏகாதசியன்று பச்சைக் குழந்தைக்குக்கூட பால் கொடுக்காத தாய்மார்கள் முன்பு இருந்திருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளின் வாழ்க்கையும் நன்றாக இருந்திருக்கின்றன. அந்த அளவிற்கு இவ்விரதம் முக்கியம் வாய்ந்தது.
இரண்டு செயல்
ஏகாதச்யாம் து கர்தவ்யம்
ஸர்வேஷாம் போஜந த்வயம்!
சுத்தோபவா: ப்ரதம: ஸத்கதா த்ரவணம் தத:!!
என ஏகாதசி குறித்த ஸ்லோகம் ஒன்று உள்ளது. இந்த ஸ்லோகத்தில் போஜந த்வயம் என்ற சொற்கள் உள்ளது. இதற்கு இருமுறை சாப்பிடுங்கள் என்பது பொருள். ஆனால் ஏகாதசியன்று பட்டினிதானே இருக்க வேண்டும். இருமுறை சாப்பிடுவது எப்படி சாத்தியமாகும் என நினைக்கலாம். அப்படி நினைத்தால் அது தவறு. இதற்கு சரியான பொருளை காஞ்சி மஹாபெரியவர் ஒருமுறை கூறினார். போஜன என்பதை போ + ஜன என பிரித்தால் ஹே. ஜனங்களே என்று அர்த்தம். அதாவது இந்த ஸ்லோகம் சொல்ல வரும் கருத்து இதுதான். மக்களே... ஏகாதசியில் செய்ய வேண்டிய செயல்கள் இரண்டு. ஒன்று பட்டினி இருப்பது. மற்றொன்று பகவானின் திருநாமத்தை கேட்பது. எனவே ஏகாதசி விரதத்தின்போது பெருமாளின் நாமங்களை சொல்லுங்கள். முன்பு செய்த தீய வினைகளுக்கான பரிகாரத்தை தேடிக்கொள்ளுங்கள்.