பதிவு செய்த நாள்
13
மே
2024
03:05
மகம்: கேது, சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெய்வ அருளும் ஈடற்ற சக்தியும் இருக்கும். வைகாசி மாதம் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை தரும் மாதமாக இருக்கும். சக்கர வியூகத்தில் சிக்கிக் கொண்டு தடுமாறுவது போல், 2ல் கேது, 8ல் ராகு, 7ல் சனி, 10ல் குரு என நான்கு பக்கமும் கிரகங்கள் உங்களை சுற்றி வளைத்துக் கொண்டுள்ள நிலையில் ராசிநாதன் சூரியன் 10ல் சஞ்சரித்து உங்களை வெளியில் கொண்டுவர உள்ளார். உங்கள் ராசி நாதனின் சஞ்சார நிலை உங்கள் நிலையை உயர்த்தும். வியாபாரம், தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். வெளியூரில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள் என்றாலும், பணியாளர்கள் கவனமாக செயல்படுவது அவசியம். வியாபாரம், தொழிலில் கூடுதல் கவனம் தேவை. புதிய முதலீடு செய்யும் முன் பலமுறை யோசிக்க வேண்டும். சனி 7 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் நட்பு வட்டத்தில் வீண் பிரச்னைகள் உருவாகும். கூட்டுத்தொழிலில் நெருக்கடி உண்டாகும். இக்காலத்தில் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதன் வழியாக உங்கள் சங்கடங்கள் தீரும். பொன், பொருள் சேரும். பணவரவு திருப்தி தரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பெண்கள் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது நன்மையாகும். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வதால் நெருக்கடி தீரும். வார்த்தைகளில் கவனம் தேவை. இல்லையெனில் பேச்சு மூலம் வீண் பிரச்னைகள் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும். விவசாயிகளின் சங்கடங்கள் விலகும். விளைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். அரசியல்வாதிகளின் முயற்சிகள் தள்ளிப் போகும். இக்காலத்தில் ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் நீண்ட முயற்சிக்குப் பின் விரும்பிய கல்லுாரியில் சேருவர்.
சந்திராஷ்டமம்: ஜூன் 2, 3.
அதிர்ஷ்ட நாள்: மே16,19,25,28, ஜூன்1, 7, 10
பரிகாரம்: கேதுவை தினமும் வழிபட நன்மைகள் உண்டாகும்.
பூரம்; சுக்கிரன், சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எதிலும் வெற்றி பெறும் ஆற்றல் இருக்கும். எதிர்பார்த்த நன்மையை அடையும் மாதமாக வைகாசி இருக்கும். நட்சத்திர நாதன் மாதத்தின் முற்பகுதியிலும், ராசிநாதன் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் நெருக்கடி விலகும். முயற்சி வெற்றியாகும். வெளியூர் பயணம் லாபத்தில் முடியும் என்றாலும் பணியாளர்கள் தங்கள் பணியில் கவனமாக இருப்பது அவசியம். சிலர் அதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாக நேரும். 10ல் குரு சஞ்சரிப்பதால் வேலையில் நெருக்கடி அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னை தோன்றும். 8 ல் ராகு இருப்பதால் எதிர்பாராத பிரச்னை தேடி வரும். பணியாளர்கள் இக்காலத்தில் கவனமாக செயல்படுவதால் சிக்கல்களில் இருந்து விடுபடலாம். கும்ப சனியால் குடும்பம், நண்பர்கள் இடத்தில் சங்கடம் தோன்றும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். பெண்களுக்கு மாதத்தின் முற்பகுதி சாதகமாகும். பிற்பகுதியில் பொருளாதார நெருக்கடி தோன்றும் என்றாலும் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். நோய்கள் சிகிச்சையால் சரியாகும். அரசியல்வாதிகள் மற்றவர்களை அனுசரிப்பதுடன் எதிர்மறை சிந்தனைக்கு இடம் தர வேண்டாம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். கலைஞர்களுக்கு மாத முற்பகுதி யோகமாக இருக்கும். மாணவர்கள் மேற்கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 3, 4
அதிர்ஷ்ட நாள்: மே 15, 19, 24, 28, ஜூன் 1, 6, 10
பரிகாரம்: வராகியை வழிபட சங்கடம் அனைத்தும் விலகும்.
உத்திரம் 1 ம் பாதம்; சூரியனின் நட்சத்திரத்திலும் ராசியிலும் பிறந்த நீங்கள் அனைத்திலும் முதன்மையாக இருப்பீர்கள். வைகாசியில் உங்கள் நட்சத்திர, ராசிநாதன் 10 ல் சஞ்சரிப்பதால் நெருக்கடி விலக ஆரம்பிக்கும். தொழிலை விரிவு செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். பணியாளர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். சனி, ராகு, கேது, குருவின் சஞ்சார நிலைகள் சாதகமாக இல்லை என்பதால் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். என்றாலும் குருவின் பார்வைகள் உங்கள், குடும்ப, சுக, சத்ரு ஸ்தானங்களில் பதிவதால் குடும்பத்தில் அமைதி இருக்கும். பண வரவு உண்டாகும். சந்தோஷம் அதிகரிக்கும், நோய்களும், எதிர்ப்பும் விலகும். போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். அரசியல்வாதிகளுக்கு இதுவரையில் இருந்த செல்வாக்கில் மாற்றம் ஏற்படும். பெண்கள் எந்தச் செயலிலும் அமைதி காப்பது அவசியம். இக்காலத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடும் முன் யோசிப்பது நல்லது. பணியாளர்கள் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரும். உடன் பணிபுரிபவர்ளும் எதிராக மாறுவார்கள் என்பதால் எச்சரிக்கை தேவை. விவசாயிகளின் விலை பொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும். மேற்படிப்பிற்காக மாணவர்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 4, 5
அதிர்ஷ்ட நாள்: மே 19, 28, ஜூன் 1, 10
பரிகாரம்: சூரிய வழிபாடு மனநிம்மதியை உண்டாக்கும்.