பதிவு செய்த நாள்
14
செப்
2024
03:09
கும்பம்: அவிட்டம் 3, 4 ம் பாதம்; அமைதியாக செயல்படும் உங்களுக்கும் ஒரு சில சங்கடங்களுக்கு ஆளாகி வரும் நிலையில், பிறக்கும் புரட்டாசி மாதம் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை நிகழ்த்தும் மாதம். சூரியன், கேது சஞ்சரிப்பதால் சிக்கல், நெருக்கடி ஏற்படும் என நீங்கள் பயப்பட வேண்டாம். குரு பகவானின் பார்வையால் அனைத்து சிக்கலில் இருந்து வெளிவருவீர்கள். குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தையை உணருவீர்கள். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். நீங்கள் யார் என்பதை உலகம் காணும். அதே நேரத்தில் பணிபுரியும் இடத்தில் வேலைபளு என்பது கூடுதலாகவே இருக்கும். அதில் ஆதாயமும் இருக்கும். சுக்கிரனின் சஞ்சாரத்தினால் எதிர்பார்ப்பு நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் உங்களுக்கு கிடைக்கும். செய்து வரும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் பலிக்கும். இருப்பினும், வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருப்பதும், அரசு பணியில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக பணியாற்றுவதும் நல்லது. நியாயமான வருமானத்திற்கு மேற்பட்ட எந்த வருமானத்திற்கும் இந்த மாதத்தில் ஆசைப்பட வேண்டாம். அதனால் நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புத பகவானின் சஞ்சாரத்தினால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் உயரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். கேட்ட இடத்திலிருந்து கேட்ட உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: அக். 1, 2.
அதிர்ஷ்ட நாள்: செப். 17, 18, 26, 27. அக். 8, 9, 17.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் கூடும்.
சதயம்: நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திரநாதன், கேது, சூரியன். குரு. செவ்வாய் ஆகியோரின் சஞ்சாரத்தினால் உங்கள் மனக்குழப்பம் அதிகரிக்கும். இது உங்களுக்கு சோதனைக் காலம். குலதெய்வத்தின் அருளால் பொறுமையுடன் இருந்து சாதனை படைப்பீர்கள். கோயில் வழிபாட்டினால் நிம்மதியும் திருப்தியும் உண்டாகும். குரு பகவானின் பார்வை அஷ்டம ஸ்தானத்திற்கும், ஜீவன ஸ்தானத்திற்கும் கிடைப்பதால் மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்படும். உங்கள் திறமை பிறரால் அறியப்படும். தொழிலில் இருந்த தடை விலகும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நினைத்த வேலைகளை நினைத்தபடி செய்து முடித்திடக்கூடிய அளவிற்கு செல்வாக்கு உயரும். செலவு செய்து ஒரு சிலர் தங்கள் பெருமையை நிலைநாட்டிக்கொள்வீர். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலமும், வர்த்தகம் புரிவோருக்கு பணியாளர்கள் துணையும் உண்டாகும். இந்த நேரத்தில் புத பகவானின் சஞ்சாரமும், சுக்கிர பகவானின் சஞ்சாரமும் உங்களுக்கு சாதகமாகவே இருப்பதால் சட்ட விவகாரங்கள், அனுகூலமாகும். வீண் வம்பு வழக்குகள் காணாமல் போகும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரம் விருத்தியாகும். தொழில் முன்னேற்றமடையும். பொருளாதார நிலை உயரும். ஒரு சிலருக்கு புதிய இடம் வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் அனுகூலம், மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: செப். 2, 3.
அதிர்ஷ்ட நாள்: செப். 17, 22, 26, அக். 4, 8, 13, 17.
பரிகாரம்: வராகி வழிபாடு வளம் சேர்க்கும்.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: நாளை நடப்பதை அறியக்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக செயல்படக்கூடிய மாதம். குருபகவான் பார்வை உங்களுக்கு யோகத்தை உண்டாக்கும். உங்கள் நிலை உயரும். எந்தவிதமான நெருக்கடியானாலும் அதை மாற்றும் சக்தி உங்களுக்கு உண்டாகும். அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானங்களுக்கு குரு பகவானின் பார்வைகள் உண்டாவதால் வம்பு வழக்குகள் சாதகமாகும். உடல்நிலை சீராகும். தடைபட்ட வேலை மீண்டும் நடைபெறும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். வருவாய் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். இணக்கமான நிலை ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர். வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் உண்டாகும். பெண்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் தோன்றும். விவசாயிகள் கவனமாக செயல்படுவதும், காவல்துறையில் இருப்பவர்கள் கடமையுணர்வுடன் பணியாற்றுவதும் அவசியம். இல்லையெனில் வேலையில் சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். புதனின் அருளால் மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: அக். 3.
அதிர்ஷ்ட நாள்: செப். 17, 21, 26, 30. அக். 8, 12, 17.
பரிகாரம்: நவக்கிரக குரு பகவானை வழிபட நன்மை உண்டாகும்.