பதிவு செய்த நாள்
31
டிச
2024
12:12
மகம்; சவாலே... சமாளி
சூரியன், கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2025 ம் ஆண்டு கவனமாக செயல்பட வேண்டிய ஆண்டாக இருக்கும். குடும்பம், தொழில், வேலை, வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. உடல்நிலை, நட்பு வட்டம், வருமானம் என எல்லாவற்றிலும் சவால்களை சந்திக்க நேரிடும். நெருக்கடி சமாளித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் அறிவாற்றல், புத்திசாலித்தனம் நெருக்கடியில் இருந்து பாதுகாக்கும்.
சனி சஞ்சாரம்: சனி பகவான் சப்தம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் ராசியையும் பார்ப்பதால் எதிலும் நிதானம் வேண்டும். நன்றாகப் பழகியவர்களும் உங்களுக்கு எதிராக மாறலாம். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இடைவெளி உண்டாகும். சனி பகவானின் பார்வைகள் மாதுர், பிதுர் ஸ்தானங்களுக்கு உண்டாவதால் தாய் தந்தையரின் உடல் நிலையில் சங்கடம் தோன்றக்கூடும். அவர்களின் சுய ஜாதகத்திற்கு ஏற்ப சங்கடங்களின் நிலை மாறும். பிப். 27 - மார்ச் 29, ஜூலை 23 - நவ. 18 ஆகிய அஸ்தமன, வக்கிர காலங்களில் சப்தம சனியின் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள்.
ராகு, கேது சஞ்சாரம்: மே 25 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது தன, குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் உடல்நிலையில் சங்கடம் தோன்றும். உங்கள் செல்வாக்கிற்கு நெருக்கடி ஏற்படும் வகையில் பிறர் செயல்படுவர். குடும்பத்தில் நெருக்கடியும், பண வரவில் தடைகளும் ஏற்படும். இந்த நிலையில் மே 26 முதல் ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் நிதானம் அவசியம். ஜென்ம கேதுவால் எதிர்பாராத சங்கடம் தோன்றும். 7 ம் இட ராகுவால் தவறான நபர்களின் வழிகாட்டுதலால் குடும்பத்தில் பிரச்னை உண்டாகலாம் கவனம்.
குரு சஞ்சாரம்: பிப்.10 வரை ஜீவன ஸ்தானத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப்.11 முதல் வக்ர நிவர்த்தியாவதால் தொழில், உத்தியோகத்தில் விடாமுயற்சி தேவை. வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. குருவின் பார்வைகள் 2,4,6 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணவரவு திருப்தி தரும். செல்வாக்கு உயரும்.
மே. 11 முதல் மிதுன ராசிக்குள் லாப குருவாக சஞ்சரிப்பவர், வருமானத்தை அதிகரிப்பார். எதிர்பார்த்த ஆதாயம் தருவார். பார்வைகளை 3,5,7 ம் இடங்களின் மீது செலுத்தி தைரியத்தை அதிகரிப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண வயதினருக்கு திருமணம், குழந்தை பாக்கியம் அளிப்பார். அக். 8 முதல் விரய குருவாக சஞ்சரிப்பவர் செலவுகளை அதிகரிப்பார் என்றாலும், உங்கள் விருப்பம், லட்சியத்தை பூர்த்தி செய்வார். வழக்கில் வெற்றி, தொழிலில் முன்னேற்றம், உடல்நிலையில் உற்சாகம் என கனவுகளை நனவாக்குவார்.
சூரிய சஞ்சாரம்: ஜன. 14 - பிப். 12, மே 15 - ஜூலை 16 காலங்களிலும், அக். 18 - நவ. 16 காலத்திலும் உங்கள் வாழ்வில் இருந்த நெருக்கடியை சூரியன் இல்லாமல் செய்வார். செல்வாக்கை உயர்த்துவார். முயற்சி வெற்றி பெறும். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். தொழில், வேலையில் முன்னேற்றம் தருவார். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
பொதுப்பலன்: ராகு, கேது, சனியின் சஞ்சார நிலைகள் உங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினாலும், குருவின் பார்வை, சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். நினைப்பது நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு சொத்து சேரும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும்.
தொழில்: வருடத்தின் முற்பகுதியை விட பிற்பகுதி யோகமாக இருக்கும். கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், கால்நடை, இயந்திரம், மருத்துவம், மெடிக்கல், ஏற்றுமதி இறக்குமதி, ரியல் எஸ்டேட், ஹார்டுவேர், பங்குச்சந்தை, சினிமா தொழில்கள் லாபம் தரும் என்றாலும், உழைப்பும் முயற்சியும் அதிகமாக தேவைப்படும்.
பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் உங்கள் வேலைகளில் மட்டும் கவனமாக இருப்பது அவசியம். வேலையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அனுசரித்துச் செல்வது நன்மையாகும். சின்னச் சின்ன பிரச்னைகளுக்காக இருக்கும் வேலையை விடுவதும், வேறு வேலைக்கு முயற்சிப்பதும் சங்கடத்தை அதிகரிக்கும்.
பெண்கள்: கவனமாக செயல்பட வேண்டிய வருடம். குடும்பத்தினரையும், பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளையும் அனுசரித்துச் செல்வது நல்லது. திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். சுயதொழில் செய்து வருபவர்கள் நிலை உயரும்.
கல்வி: ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்பட வேண்டிய காலம் இது. விளையாட்டு, பொழுதுபோக்கு, தவறான நண்பர்களின் சேர்க்கை, மொபைல் ஆகியவற்றை மே மாதம் வரை தவிர்ப்பதுடன் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்துவது அவசியம்.
உடல்நிலை: வருடத்தின் தொடக்கத்தில் அஷ்டம ராகு, சப்தம சனியின் காலம் என்பதுடன், மே 27 முதல் ராகுவும் சனியுடன் இணைவதால் அடிக்கடி மருத்துவச் செலவு ஏற்படும். சிலருக்கு விபத்தால் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம்.
குடும்பம்: பின் விளைவு பற்றி யோசிக்காமல் எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம். வசதிகளை அதிகரித்துக் கொள்ள கடன் வாங்குவதை தவிர்க்கவும். குடும்ப முன்னேற்றத்தில் அக்கறை அதிகரிக்கும். தம்பதி ஒற்றுமை உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். சுப காரியங்கள் நடந்தேறும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.
பரிகாரம்: பைரவர், சிவபெருமானை வழிபட நன்மை அதிகரிக்கும்.
பூரம்; செயல்களில் சங்கடம்
சூரியன், சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2025 ம் ஆண்டில் ஒரு பக்கம் நெருக்கடி உண்டானாலும் மறு பக்கம் எதிர்பார்த்த நன்மை நடந்தேறும். உழைப்பு, முயற்சிக்கு ஏற்ப ஆதாயம் அடைவீர்கள். சூழ்நிலையை அறிந்து செயல்படுவதால் பிரச்னை இல்லாமல் போகும். குடும்பம், தொழில், வேலை, வியாபாரம் என்று அனைத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது அவசியம். இந்நிலையில் சுய ஜாதகத்தில் திசாபுத்தி சாதகமாக இருந்தால் நன்மை அதிகரிக்கும்.
சனி சஞ்சாரம்: சனிபகவான் கண்டச்சனியாக சஞ்சரிப்பதால் எதிலும் நிதானம் வேண்டும். உடல்நிலையில் பாதிப்பு தோன்றலாம். நண்பர்களும் உங்களுக்கு எதிராக மாறுவர். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் பிரச்னை உருவாகும். சனி பகவானின் 10, 3 ம் பார்வைகள் மாதுர், பிதுர் ஸ்தானங்களுக்கு உண்டாவதால் பெற்றோரின் உடல்நிலையில் அக்கறை தேவை. பிப். 27 - மார்ச் 29, ஜூலை 23 - நவ. 18 ஆகிய அஸ்தமன, வக்கிர காலங்களில் சப்தம சனியின் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். செல்வாக்கு உயரும்.
ராகு, கேது சஞ்சாரம்:
மே. 25 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது தன, குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் உடல்நிலையில் சங்கடம் தோன்றும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையும், பண வரவில் தடையும் ஏற்படும். மே 26 முதல் ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் உடல்நிலை, மன நிலை என அனைத்திலும் எச்சரிக்கை அவசியம். எந்த ஒன்றிலும் பின் விளைவுகளை யோசித்து செயல்படுவது நல்லது.
குரு சஞ்சாரம்: பிப்.10 வரை ஜீவன ஸ்தானத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப்.11 முதல் வக்ர நிவர்த்தியாவதால், தொழில், உத்தியோகத்தில் நெருக்கடி ஏற்படும் என்றாலும், குருவின் பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வரவு திருப்தி தரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். மே. 11 முதல் மிதுன ராசிக்குள் லாப குருவாக சஞ்சரிப்பவர், உங்கள் நிலையை உயர்த்துவார். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகளை நீக்கி லாபத்தை அதிகரிப்பார். எதிர்பார்ப்பை பூர்த்தியாக்குவார். தன் பார்வைகளால், திருமணம், குழந்தை பாக்கியம், பிள்ளைகளால் பெருமையை உண்டாக்குவார். அக். 8 முதல் விரய குருவாக சஞ்சரிப்பவர் செலவுகளை அதிகரிப்பார் என்றாலும், உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்வார். வழக்கில் வெற்றி, தொழிலில் முன்னேற்றம், உடல்நிலையில் உற்சாகம் என உங்கள் கனவுகளை நனவாக்குவார்.
சூரிய சஞ்சாரம்: ஜன. 14 - பிப். 12, மே 15 - ஜூலை 16 காலங்களிலும், அக். 18 - நவ. 16 காலத்திலும் உங்கள் ராசிநாதன் சூரியன் நீங்கள் எதிர்பார்த்திருந்த முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். செல்வாக்கை உயர்த்துவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். வழக்கு விவகாரத்தில் வெற்றியை உண்டாக்குவார். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். அரசுவழி முயற்சியில் வெற்றியை வழங்குவார்.
பொதுப்பலன்: மே மாதம் வரையில் குருவின் பார்வைகளும், மே.10 முதல் சஞ்சார நிலையும் சாதகமாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். எந்தவிதமான சங்கடங்கள் எதிர்வந்தாலும் அவற்றை சமாளிக்கும் சக்தியுண்டாகும். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்கள் எண்ணம் நிறைவேறும்.
தொழில்: ஜூவல்லரி, பேன்சி ஸ்டோர், அழகு சாதன நிலையம், ஜவுளி, கவரிங், வாகனம் விற்பனையில் லாபம் அதிகரிக்கும். அத்தகைய தொழிலில் ஈடுபட்டிருப்போர் முன்னேற்றம் அடைவர். திரைப்பட தயாரிப்பாளர்கள், பணியாளர்கள் நிலை உயரும். உழைப்பிற்கும் முயற்சிக்கும் ஏற்ற ஆதாயம் உண்டாகும்.
பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். என்றாலும், உடன் பணி புரிபவர்களையும், அதிகாரிகளையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர் வேலையை விடவும் வேண்டாம், வேறு முயற்சிகளை மேற்கொள்ளவும் வேண்டாம்.
பெண்கள்: திறமை வெளிப்படும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள். வேலையில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவரின் அன்பு கூடும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.
கல்வி: பொதுத்தேர்விற்காக உங்களை முழுமையாக தயார் படுத்திக் கொள்வது அவசியம். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்று படிப்பில் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
உடல்நிலை: ராகுவும், சனியும் உடல்நிலையில் ஏதேனும் ஒரு சங்கடத்தை உண்டாக்குவர். வயிறு, நெஞ்சு, சிறுநீரகக் கோளாறு என உபாதைகளை உண்டாக்குவர். மருத்துவச் செலவு இருந்து கொண்டே இருக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருப்பதும், மருத்துவரின் ஆலோசனையை ஏற்பதும் நல்லது.
குடும்பம்: குடும்பத்தின் முன்னேற்றத்தில் அக்கறை அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். புதிய வாகனம், நவீன பொருட்கள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
பரிகாரம்: கள்ளழகரை வழிபட நெருக்கடி நீங்கும். வேண்டுதல் பலன் தரும்.
உத்திரம்; நெருக்கடி நீங்கும்
ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
2025 ம் ஆண்டில் உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செயல்களில் நெருக்கடி, வருமானத்தில் தடை, உடல்நிலையில் பாதிப்பு என ஏற்பட்டாலும், உழைப்பிற்கும், முயற்சிக்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும். குடும்பம், தொழில், வேலை, வியாபாரம் எல்லாவற்றிலும் முழுமையான கவனம் தேவைப்படும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். நினைத்த வேலைகள் நடந்தேறும். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். வாழ்வில் வளம் கூடும்.
சனி சஞ்சாரம்: உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் கண்டச்சனியாக, உடல்நிலையில் பாதிப்பு உண்டாக்குவார். நண்பரை எதிரியாக்குவார். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இடைவெளியை ஏற்படுத்துவார். தாய், தந்தையரின் உடல் நிலையில் சங்கடங்களை உண்டாக்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஸ்தானாதிபதியாக, எதிரிகளையும், போட்டியாளர்களையும் பலமிழக்க வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார். உடல் பாதிப்புகளை நீக்குவார். இழுபறியாக இருந்த வழக்குகளை சாதகமாக முடிப்பார்.
ராகு, கேது சஞ்சாரம்: மே 25 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும், மே 26 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிப்பதால், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். உடல்நிலையில் சங்கடம் தோன்றும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையும், பணவரவில் தடைகளும் ஏற்படும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 முதல் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். ஆதாயத்தை அதிகரிப்பார். நினைத்த வேலைகளை நினைத்தபடி முடித்து ஆதாயம் காண வைப்பார்.
குரு சஞ்சாரம்: பிப். 10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப்.11 முதல் ரிஷபத்திலேயே வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே 11 முதல் மிதுன ராசிக்குள் பிரவேசிப்பவர் அக்.8 முதல் கடகத்தில் சஞ்சரிப்பார். இதனால் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே11 வரை தன் பார்வைகளாலும், அதன் பின் லாப குருவாகவும், குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவார். வரவை அதிகரிப்பார். செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவார். வியாபாரம், தொழிலில் தடைகளை நீக்கி லாபத்தை அதிகரிப்பார். எதிர்பார்ப்பை பூர்த்தியாக்குவார். திருமணம், குழந்தை பாக்கியம், பிள்ளைகளால் பெருமையை உண்டாக்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதியில் அனைத்திலும் யோகத்தை வழங்குவார். பணம், பதவி, பட்டம் என விருப்பங்களை பூர்த்தி செய்வார். வழக்கில் வெற்றி, தொழிலில் முன்னேற்றம், உடல்நிலையில் உற்சாகம் என கனவுகளை நனவாக்குவார்.
சூரிய சஞ்சாரம்: உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன. 14 - பிப். 12, மே. 15 - ஜூலை 16 காலங்களிலும், அக். 18 - நவ. 16 காலத்திலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பிப். 13 - மார்ச். 14, ஜூன் 15 - ஆக. 16 காலங்களிலும், நவ. 17 - டிச. 15 காலத்திலும், 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். வழக்குகளில் வெற்றி தருவார். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். தடைபட்டிருந்த வேலைகளை நடத்தி வைப்பார்.
பொதுப்பலன்: உழைப்பிற்கும் முயற்சிக்கும் வெற்றி உண்டாகும். வியாபாரம், தொழிலில் தடைகள் விலகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என கனவு நனவாகும். தொழில் தொடங்க முயற்சித்தவர்கள் எண்ணம் நிறைவேறும்.
தொழில்: தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். வியாபாரிகள் சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். பங்கு வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி, ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், டிரான்ஸ்போர்ட், பப்ளிகேஷன்ஸ், வாகனம் விற்பனையில் லாபம் அதிகரிக்கும். அத்தகைய தொழிலில் ஈடுபட்டிருப்போர் சிறந்த முன்னேற்றம் காண்பர்.
பணியாளர்கள்: கடந்த கால நெருக்கடி விலகும். போராட்ட நிலை மாறும். பணிபுரியும் இடத்தில் திறமைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
பெண்கள்: மனதில் இருந்த குழப்பம் விலகும். திறமை வெளிப்படும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவரின் அன்பு கூடும். பொன், பொருள் சேரும்.
கல்வி: ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நல்லது. படிப்பில் அக்கறை அதிகரிக்கும். மேற்படிப்பு கனவு நனவாகும். மருத்துவம், இன்ஜினியரிங், சாப்ட்வேர் சார்ந்த படிப்புகளில் விருப்பம் நிறைவேறும்.
உடல்நிலை: உடல் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். பரம்பரை நோய், தொற்று நோயால் ஏற்பட்ட தொல்லை விலகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருப்பது நல்லது.
குடும்பம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். சிலர் சொந்த வீடு கட்டி குடியேறுவர். வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். புதிய வாகனம், நவீன பொருட்கள் வாங்குவீர்கள். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைத்து குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
பரிகாரம்: அமாவாசையன்று பிரத்தியங்கிராவை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.