பதிவு செய்த நாள்
31
டிச
2024
12:12
விசாகம்: வாழ்வில் முன்னேற்றம்
ஞான, தனகாரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2,3 ம் பாதங்களான துலாமில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4 ம் பாதமான விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர்.
2025 ம் வருடத்தில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும் வருடமாக இருக்கும். நினைத்தது நடந்தேறும். முயற்சி வெற்றி பெறும். வேலை வாய்ப்பு, புதிய தொழில், திருமணம், குழந்தை என கனவுகள் நனவாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு திட்டமிட்டு செயல்பட வேண்டிய வருடமாக இருக்கும். வருடத்தின் முற்பகுதியில் ஆதாயம் கூடும். பிற்பகுதியில் உழைப்பு அதிகரிக்கும். முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும்.
சனி சஞ்சாரம்: விசாகம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பூர்வீக சொத்துகளில் பிரச்னைகளை ஏற்படுத்துவார். பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இடைவெளியை உண்டாக்குவார். குடும்பத்தில் பிரச்னைகள், கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாட்டை அதிகரிப்பார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அர்த்தாஷ்டமச்சனியாக, உடல்நலமின்மை, வீடு, சொத்து, வாகனத்தால் தொல்லையை ஏற்படுத்துவார். தொழிலிலும் உத்தியோகத்திலும் நெருக்கடியை அதிகரிப்பார். தாயாரின் நலனில் பாதிப்பை ஏற்படுத்துவார் என்றாலும், சுய ஜாதகம் பலம் பெற்றவர்களுக்கு இந்நிலையில் மாற்றம் ஏற்படும். பிப். 13 - மார்ச். 29, ஜூலை 23 - நவ. 18 ஆகிய அஸ்தமன, வக்கிர காலங்களில் இப்பலன் மாறுபடும். நினைப்பதை சாதித்து முடிப்பீர்கள்.
ராகு, கேது சஞ்சாரம்: மே 25 வரை, ராகு 6 ம் இடத்திலும், கேது 12 ம் இடத்திலும் சஞ்சரிப்பதால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 வரை 6 ம் இட ராகு முன்னேற்றத்தை வழங்குவார். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். உடல்பாதிப்பு விலகும். இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும். மே 26 முதல் 11 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். சொத்து சேரும். நட்புகளால் ஆதாயம் உண்டாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே25 வரை 11 ம் இட கேது வசதி வாய்ப்பை அதிகரிப்பார். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மே26 முதல் ராகு 4 ம் இடத்திலும், கேது 10 ம் இடத்திலும் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். தொழில், உத்தியோகத்தில் கூடுதல் அக்கறை தேவை.
குரு சஞ்சாரம்: பிப்.10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் ரிஷபத்திலேயே வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே 11 முதல் மிதுன ராசிக்குள் பிரவேசிப்பவர் அக். 8 முதல் கடகத்தில் சஞ்சரிப்பார். இதனால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 10 வரை தன் பார்வைகளாலும், அதன் பின் ஸ்தான பலத்தாலும் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி, வரவு அதிகரிக்கும். வழக்கில் வெற்றியுண்டாகும். தொழிலில் முன்னேற்றம், உடல்நிலையில் உற்சாகம் ஏற்படும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதியில் செல்வாக்கு, அந்தஸ்து அதிகரிக்கும். கல்வி, வேலை, திருமணம், குழந்தை, சொந்த வீடு, வாகனம் என கனவுகள் நனவாகும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும். பிற்பகுதியில் செலவிற்கேற்ற வரவு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
சூரிய சஞ்சாரம்: விசாகம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஜன. 1 - 16, மார்ச் 15 - ஏப். 14, ஜூலை. 17 - செப். 16 காலங்களிலும், டிச. 16 - 31 காலத்திலும் 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன. 14 - பிப். 12, ஏப். 14 - மே 14 காலங்களிலும், ஆக.17 - அக். 17 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் முன்னேற்றத்தை உண்டாக்குவார். முயற்சி வெற்றி பெறும். நினைத்ததை நடத்தி வைப்பார். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகளை நீக்குவார். ஆரோக்கியம் வழக்கில் வெற்றியை தருவார். தொழில், உத்தியோகத்தில் ஆதாயத்தை அதிகரிப்பார்.
பொதுப்பலன்: வாழ்க்கை, தொழில், உத்தியோகம், வேலை என அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். முயற்சிக்கேற்ற பலன் இல்லையே என்ற நிலை மாறும். திறமை வெளிப்படும். உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். சொத்து சேரும். திருமணம், குழந்தை பாக்கியம் என கனவு நனவாகும். சமூக மதிப்பு உயரும்.
தொழில்: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள், போட்டிகள் விலகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சிலர் புதிய தொழில்கள் தொடங்குவர். கம்ப்யூட்டர், பங்கு சந்தை, கமிஷன் ஏஜன்சி, வருவாய் உயரும். விவசாய உற்பத்தி பொருட்கள், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், ஜூவல்லரி, அழகு சாதனப்பொருட்கள் தொழில்கள் முன்னேற்றம் அடையும்.
பணியாளர்கள்: பணியாளர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றம், பதவி உயர்வு இப்போது கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு முதலாளிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய பொறுப்பும், ஊதிய உயர்வால் முன்னேற்றம் ஏற்படும்.
பெண்கள்: குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். உடல் பாதிப்பு விலகும். பணிபுரியும் இடத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். திறமை வெளிப்படும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்குவர்.
கல்வி: படிப்பில் அக்கறை தேவை. பொழுது போக்கிற்கு இடம் கொடுக்காமல் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் மேற்படிப்பு கனவு நனவாகும்.
உடல்நிலை: பரம்பரை நோய், தொற்று நோய் பாதிப்பு இயற்கை மருத்துவத்தால் குணமாகும். மூச்சுத்திணறல் இருப்பவர்கள் தொடர்ந்து உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.
குடும்பம்: குடும்பத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். தம்பதியரிடம் ஒற்றுமை உண்டாகும். உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகளின் மேற்கல்வி, திருமண முயற்சி வெற்றி பெறும்.
பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.
அனுஷம்: உழைப்பால் உயர்வீர்கள்
செவ்வாய், சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2025 ம் வருடம் முயற்சியால் முன்னேறக்கூடிய வருடமாக இருக்கும். ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். சிலருக்கு வெளிநாட்டு வாழ்க்கை அமையும். குடும்பத்தில் நெருக்கடி விலகும். வருட முற்பகுதியில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பிற்பகுதியில் குடும்பத்தில் நிம்மதியும், செயலில் வெற்றி உண்டாகும்.
சனி சஞ்சாரம்: ராசிக்கு 4ல் அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான், உழைப்பை அதிகரிப்பார். ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டிய நிலையை உண்டாக்குவார். உடலில் சோர்வை வழங்குவார். வீடு, சொத்து, வாகன விஷயங்களில் நிம்மதியற்ற நிலையை தருவார். தாயாரின் நலனில் பாதிப்பு ஏற்படலாம். என்றாலும் பிப். 13 - மார்ச். 29, ஜூலை 23 - நவ. 18 ஆகிய அஸ்தமன, வக்கிர காலங்களில் இப்பலன்கள் மாறுபடும். சங்கடங்கள் நீங்கும்.
ராகு, கேது சஞ்சாரம்: மே 25 வரை ராகு 5 ம் இடத்திலும், கேது 11 ம் இடத்திலும் சஞ்சரிப்பதால், மே 25 வரை 11 ம் இட கேது, பொருளாதார நிலையை உயர்த்துவார். தொழில் வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். மே 26 முதல் ராகு 4 ம் இடத்திலும், கேது 10 ம் இடத்திலும் சஞ்சரிப்பதால் தொழிலில் கூடுதல் அக்கறை தேவை. உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும்.
குரு சஞ்சாரம்: பிப்.10 வரை 7 ம் இடமான ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் ரிஷபத்திலேயே வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே 11 முதல் 8 ம் இடமான மிதுன ராசிக்குள் அஷ்டம குருவாக பிரவேசிப்பவர் அக். 8 முதல் 9 ம் இடமான கடகத்தில் பாக்கிய குருவாக சஞ்சரிப்பார். இதனால் மே 11 வரை செல்வாக்கு, அந்தஸ்து அதிகரிக்கும். கல்வி, வேலை, திருமணம், குழந்தை, வீடு, வாகனம் என்ற கனவுகள் நனவாகும். மே.11 முதல் குடும்பத்தில் நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். 4 ம் இட சனி, ராகுவின் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும்.
சூரிய சஞ்சாரம்: ஜன.14 - பிப். 12, ஏப். 14 - மே 14 காலங்களிலும், ஆக.17 - அக். 17 காலத்திலும் சூரியன் வெற்றியை ஏற்படுத்துவார். முயற்சி வெற்றி பெறும். தொழில் வியாபாரத்தில் தடைகளை நீக்குவார். உத்தியோகத்தில் முன்னேற்றம் தருவார். வேலைக்காக முயற்சித்தவர்களின் கனவை நனவாக்குவார். உடலில் ஆரோக்கியத்தையும் வழக்கில் வெற்றியையும் தருவார். புதிய தொழில் தொடங்க வைப்பார். அரசு வழியில் கிடைக்க வேண்டிய அனுமதிகளைக் கிடைக்க வைப்பார்.
பொதுப்பலன்: 2025 ம் ஆண்டு அக்கறையுடன் செயல்பட வேண்டிய ஆண்டாக இருக்கும். முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். மன உறுதி கூடும். திறமை வெளிப்படும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். சிறு சங்கடங்கள் வந்தாலும் அவற்றில் இருந்து வெளியில் வர முடியும். அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம், குழந்தை பாக்கியம் என கனவு நனவாகும்.
தொழில்: தொழில் முன்னேற்றமடையும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மார்க்கெட்டிங், உணவகம், ரசாயனம், மருந்தகம், ஆயில் ஸ்டோர்ஸ், கமிஷன் ஏஜன்சி, இயந்திரத் தொழிற்சாலைகள், கம்ப்யூட்டர், பங்கு சந்தை, ஆன்லைன் தொழில்களில் ஆதாயம் கூடும். விவசாயம் முன்னேற்றம் அடையும்.
பணியாளர்கள்: அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு புதிய பொறுப்பும், ஊதிய உயர்வும் கிடைத்து முன்னேற்றம் ஏற்படும்.
பெண்கள்: துணிச்சலுடன் செயல்பட்டு எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவர். படிப்பு, திருமணம், குழந்தை என வாழ்க்கைக்குரிய அடிப்படைகளை அடைவீர்கள். சுய தொழில் லாபம் தரும். பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். திறமை வெளிப்படும். கணவரின் ஆதரவு அதிகரிக்கும்.
கல்வி: படிப்பில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள். விரும்பிய கல்லுாரியில் மேற்படிப்பிற்கு இடம் கிடைக்கும்.
உடல்நிலை: உடல்நிலையில் கவனம் தேவை. 4ல் சனி சஞ்சரிக்கும் நிலையில் வருடத்தின் பிற்பகுதியில் ராகுவும் இணைவதால் ஏதேனும் தொந்தரவு இருந்தபடி இருக்கும். பரம்பரை நோய், தொற்று நோய் இக்காலத்தில் மீண்டும் வெளிப்படும்.
குடும்பம்: குடும்ப பிரச்னை ஏற்பட்டாலும் அவை சரியாகும். உலகைப் புரிந்து கொண்டு, தன் குடும்பம், தன் பிள்ளைகள் என செயல்படுவீர்கள். உழைப்பிலும் சேமிப்பிலும் அக்கறை ஏற்படும். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் கல்வி, திருமண முயற்சி வெற்றியாகும். பொன், பொருள் சேரும். விரும்பிய வாகனம் வாங்குவீர். சிலர் சொந்த வீடு கட்டி குடியேறுவீர்கள்.
பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்க்கை வளமாகும்.
கேட்டை: எச்சரிக்கை அவசியம்
செவ்வாய், புதன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2025 ம் வருடம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய ஆண்டாக இருக்கும். வருடத்தின் முற்பகுதியில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த உயர்வு, விரும்பிய மாற்றம் ஏற்படும். திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு உண்டாகும் என்றாலும், பிற்பகுதியில் அனைத்திலும் நிதானமுடன் செயல்படுவது நன்மையாகும்.
சனி சஞ்சாரம்: வருடம் முழுவதும் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான், உழைப்பிற்கேற்ற பலனை வழங்குவார். உடனடியாக முடிய வேண்டிய வேலைகளிலும் இழுபறியை ஏற்படுத்துவார். உடல்நிலையில் பாதிப்பை வழங்குவார். வீடு, சொத்து, வாகன விஷயங்களில் செலவுகள் தோன்றும். சிலர் வசிக்கும் வீட்டை மாற்றி அமைப்பீர்கள். தாயாரின் உடல்நிலையில் சங்கடம் தோன்றும் என்றாலும், பிப். 13 - மார்ச். 29, ஜூலை 23 - நவ. 18 ஆகிய, அஸ்தமன, வக்கிர காலங்களில் பாதிப்பு இல்லாமல் போகும். நன்மைகள் நடந்தேறும்.
ராகு, கேது சஞ்சாரம்: மே 25 வரை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவும், லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் கேதுவால் வருவாய் அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றமடையும். கடன் அடைபடும். மே 26 முதல் சுக ஸ்தானத்தில் ராகுவும், ஜீவன ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால், உழைப்பு அதிகரிக்கும். முயற்சிக்கேற்ற வருவாய் வரும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் கூடுதல் அக்கறை தேவைப்படும்.
குரு சஞ்சாரம்: பிப். 10 வரை 7 ம் இடமான ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் ரிஷபத்திலேயே வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே 11 முதல் 8 ம் இடமான மிதுன ராசிக்குள் அஷ்டம குருவாக பிரவேசிப்பவர் அக். 8 முதல் 9 ம் இடமான கடகத்தில் பாக்கிய குருவாக சஞ்சரிப்பார். இதனால் மே 11 வரை எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். கல்வி, வேலை, திருமணம், குழந்தை, சொந்த வீடு, வாகனம் என்ற கனவுகள் நனவாகும். செல்வாக்கும், அந்தஸ்தும் உயரும். நெருக்கடி விலகும். மே11 முதல் வருமானம் அதிகரிக்கும். 4 ம் இடத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் அங்கு சஞ்சரிக்கும் சனி, ராகுவின் பாதிப்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
சூரிய சஞ்சாரம்: ஜன. 14 - பிப். 12, ஏப். 14 - மே14 காலங்களிலும், ஆக.17 - அக். 17 காலத்திலும் உங்கள் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்துவார் சூரியன். முடங்கிய வேலைகள் முடிவிற்கு வரும். உடலில் இருந்த சங்கடம், எதிர்ப்பு, போட்டி, பகை எல்லாம் விலகும். வழக்கு சாதகமாகும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். புதிய தொழில் தொடங்குவதற்கு அரசு வழியில் கிடைக்க வேண்டிய அனுமதி, உதவி கிடைக்கும்.
பொதுப்பலன்: 2025 ம் ஆண்டு திட்டமிட்டு செயல்பட வேண்டிய ஆண்டாக இருக்கும். உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் உண்டாகும். நீண்டநாள் பிரச்னைகளுக்கு முடிவு காண்பீர்கள். வாழ்க்கையின் அடிப்படைத் தேவை பூர்த்தியாகும். அரசியல்வாதிகள், கலைஞர்கள் செயல்களில் நிதானம் வேண்டும். சூழ்நிலையறிந்து செயல்படுவது நல்லது. மேற்படிப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், வேலை என்ற கனவு நனவாகும்.
தொழில்: கடந்தகால நெருக்கடி நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த அனுமதி, கடன் கிடைக்கும். நிதி நிறுவனம், நோட்டு, புத்தகம் விற்பனை, ஷேர் மார்க்கெட், ஆன்லைன் வர்த்தகம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், ரசாயனம், மருந்தகம், ஆயில் ஸ்டோர்ஸ், கமிஷன் ஏஜன்சி, இயந்திரத் தொழிற்சாலைகள், கம்ப்யூட்டர் தொழில்களில் ஆதாயம் கூடும். விவசாயம் லாபம் தரும்.
பணியாளர்கள்: திறமைக்கேற்ற ஊதியமில்லை என வருந்துவோரின் குறை தீரும். முதலாளிகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பர். ஊதியம் அதிகரிக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம், உயர்வு கிடைக்கும்.
பெண்கள்: படிப்பு, வேலை, திருமணம், குழந்தை என்ற அடிப்படைத்தேவை பூர்த்தியாகும். பணியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரை வழிநடத்தும் சக்தி உண்டாகும். வாழ்க்கைத்துணையின் உதவியால் செல்வாக்கு உயரும்.
கல்வி: படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பொதுத்தேர்வில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று செயல்பட்டால் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் சேர முடியும்.
உடல்நிலை: உடல்நிலையில் கவனம் தேவை. 4 ம் இட சனியுடன், வருடத்தின் பிற்பகுதியில் ராகுவும் இணைவதால் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். வாகனப் பயணத்தில், இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம். பரம்பரை நோய், தொற்று நோய், மூட்டுவலி, இடுப்புவலி என தொந்தரவு இருக்கும். மருத்துவச் செலவு கூடும்.
குடும்பம்: உழைப்பால் குடும்பத்தின் நிலையை உயர்த்துவீர்கள். குடும்பம், தன் பிள்ளைகள் என செயல்படுவீர்கள். சொத்து வாங்குவதிலும், சேமிப்பதிலும் அக்கறை உண்டாகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு செய்ய வேண்டியதை செய்து நிம்மதி அடைவீர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பொன், பொருள் சேரும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர்கள்.
பரிகாரம்: விஷ்ணு துர்கையை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.