பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
01:04
சிம்மம்: மகம்.. மனதில் தைரியமும் நினைத்ததை சாதிக்கும் வலிமையும் கொண்ட உங்களுக்கு, சித்திரை கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். கேது ஏப். 26 வரை தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருக்கு குரு பார்வை இருப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் எந்த சங்கடமும் உங்களை நெருங்காது. பொன், பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். ஏப்.26 ராகு கேது பெயர்ச்சியில், கேது ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் மன உளைச்சல், வீண் பிரச்னை, தேவையற்ற நெருக்கடி, அவமானம் ஏற்படும் என்பதால் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. ஏப்.30 வரை புதன் உங்களுக்கு யோகப் பலன்களை வழங்குவதுடன், மே11 வரை குருவின் பார்வைகள் 2, 4, 6 ம் இடங்களுக்கு இருப்பதால் அனைத்தையும் சமாளிக்கும் சக்தி உங்களிடம் இருக்கும். எதிர்ப்பு தோன்றினாலும் அதை வெற்றி பெறுவீர்கள். உடல் பாதிப்பு விலகும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். பாக்கிய ஸ்தான சூரியனால் தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். உங்களுக்குள் இனம்புரியாத பயம் ஏற்படும் என்றாலும், மேற்கல்வி முயற்சி சாதகமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியுடன் ராகுவும் இணைவதால் அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி அதிகரிக்கும். ஒன்றாக இருந்தவர்களும் எதிரணிக்கு செல்லும் நிலை ஏற்படும். கூட்டுத்தொழிலில் விரிசல் ஏற்படும் என்பதால் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஏப்.25.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.16,19,25,28,மே1,7,10.
பரிகாரம்: துர்கையை வழிபட சங்கடங்கள் தீரும்.
பூரம்: நினைத்ததை சாதிப்பதற்காக போராடும் உங்களுக்கு, முயற்சியால் முன்னேற்றம் காண வேண்டிய மாதமாக சித்திரை இருக்கும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமான பலன்களை தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். ஏப்.30 வரை புதன் மறைவு ஸ்தானத்தில் சஞ்சரித்து நிறைவான பலன்களை வழங்குவார். எதிர்பார்த்த வேலைகள் நடந்தேறும். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். அதிர்ஷ்ட வாய்ப்பு கூடும். மாதம் முழுவதும் உங்கள் ராசியாதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் அடைவதால் தந்தையின் உடல்நிலையில் சங்கடம் தோன்றும். பிறரை அனுசரித்துச் செல்லும் நிலை உண்டாகும்.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். ஏப்.26 முதல் ராகு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியுடன் இணையும் நிலையில், கேது ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் அந்நியரால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். தவறானவர்களின் நட்பால் கணவன் மனைவிக்குள் இணக்கம் குறையுமு். சிலர் சட்ட சிக்கல்களுக்கும் ஆளாகலாம். உங்கள் மனம் குழப்பம் அடையும். வீண் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். விரய ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் செலவுகளை அதிகரிப்பார். சிலர் இருக்கும் இடத்தை விற்று அவசர கடனை அடைக்கும் நிலைக்கு ஆளாவீர்கள். குருபார்வை மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் எந்த பிரச்சனை வந்தாலும் உங்களால் சமாளிக்க முடியும். மாத கடைசியில் லாப ஸ்தானத்திற்கு குரு பெயர்ச்சியாவதால் நெருக்கடி குறையும். அடை மழையில் நனைபவருக்கு குடை கிடைத்தது போல் பாதுகாப்பு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஏப்.26.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.15,19,24,28,மே1,6,10
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டால் நன்மைகள் நடக்கும்.
உத்திரம்: எந்த ஒன்றிலும் முதன்மையாக வரும் உங்களுக்கு சித்திரை மாதம் நிறைய அனுபவத்தை கற்றுத் தரும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். சிலர் தீர்த்த யாத்திரை செல்வீர்கள். வழிபாட்டை நாடுவீர்கள். தந்தைவழி உறவுகளால் சங்கடம் தோன்றும். தந்தையின் உடல் நிலை பாதிக்கலாம். பூர்வீக சொத்தில் பிரச்னைகள் தோன்றும் சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். மாதம் முழுவதும் குரு பகவானின் பார்வைகள் குடும்பத்தில் ஒற்றுமையை உண்டாக்கும். வரவை ஏற்படுத்தும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடி விலகும். போட்டியாளர்கள் பலம் இழப்பர். வழக்குகளின் முடிவு சாதகமாகும். உடல்நிலை சீராகும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு இறங்குமுகமாக இருக்கும். தலைமையை அனுசரிப்பது, நிதானமாக செயல்படுவது அவசியம். ஏப்.30 க்குள் விரும்பிய சொத்தை வாங்குவீர்கள். கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் வரும். பணியாளர்கள் வீண் பிரச்னைக்கு ஆளாகாமல் வேலையில் கவனமாக இருப்பது நன்மையாகும். பெண்கள் புதிய நட்புகளை முடிந்தவரை தவிருங்கள். இல்லையெனில் அவர்களால் அவப்பெயர் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஏப்.27
அதிர்ஷ்ட நாள்: ஏப்.19,28,மே1,10
பரிகாரம்: அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.