பதிவு செய்த நாள்
22
ஏப்
2025
10:04
பழமையான கிராமத்தில் பழங்குடியினர் வசிக்கும் இடத்தில் வித்தியாசமாகவும், விநோதமான வழிபாடுகளுடன், கோவில் முழுதும் மரச்சிலைகளால் காட்சி அளிக்கும் அபூர்வ கோவிலை தரிசிப்போமா?
உடுப்பி மாவட்டம், பர்கூர் பகுதிக்கு அருகில் மெக்கேக்கட்டு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அதிக ஆடம்பரம் இல்லாமல், யாருக்கும் தெரியாமல் ஒரு பழமையான சிவனின் வாகனமான நந்திகேஸ்வரா கோவில் உள்ளது. இக்கோவில் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகவும், விநோதமாகவும் காட்சி அளிக்கிறது.
தென்னிந்திய கலை
உடுப்பியிலிருந்து 27 கி.மீ., தொலைவில் உள்ளது. இக்கோவில் பாரம்பரிய தென்னிந்திய கட்டட கலையில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலில் உயர்ந்த கோபுரங்களும், பெரிய அளவிலான மதில் சுவர்களும் காட்சி அளிக்கின்றன.
இக்கோவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் கட்டப்பட்டது எனவும், பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு குறுநில மன்னர் ஆலுபாவால் கட்டப்பட்டதாகவும், முன்னொரு காலத்தில் சிவபெருமானின் தெய்வீக தரிசனத்தால் ஈர்க்கப்பட்ட கிராம மக்கள் சிலர், அவரை வழிபாடு செய்வதற்காக கோவிலை கட்டியதாகவும் கூறப்படுகிறது.
எனவே, கோவில் எந்த ஆண்டு கட்டப்பட்டது, யாரால் கட்டடப்பட்டது என்பது குறித்த சரியான தகவல் இல்லை.
இக்கோவில் மற்ற கோவில்களில் இருந்து மிகுந்த வித்தியாசமாக காணப்படுகிறது. கோவிலின் முக்கிய தெய்வமாக சிவபெருமானின் வாகனமான நந்தி பகவான் உள்ளார்.
காஷா நந்தி
நந்தி பகவானுக்கு பெரிய அளவிலான சிலை உள்ளது. அந்த நந்தியை ‘காஷா நந்தி’ என அழைக்கின்றனர். இதற்கு காரணம் சிவபெருமான் எங்கும் நிறைந்திருப்பதாக நம்பப்படுகிறது. இக்கோவிலில் சிறப்பு தெய்வமாக துர்கா தேவியும் உள்ளார்.
வழக்கமாக சிங்கம் மீது அமர்ந்திருக்கும் துர்கா தேவி, இங்கு ஐந்து முகங்கள் கொண்ட காளையின் மீது அமர்ந்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கோவிலில் உள்ள 156 சிலைகளும் மரத்தினால் செய்யப்பட்டதே. இவற்றில் சில சிலைகள், 10 அடிக்கும் மேல் உயரம் உள்ளன. இச்சிலைகள் அனைத்தும் சிவபெருமானின் படைகளாக கூறப்படுகிறது.
இதுபோன்ற மரச்சிலைகளின் வழிபாடு, இப்பகுதியில் உள்ள பிற கோவில்களில் இல்லை. சிலைகள் மரத்தால் செய்யப்பட்டு உள்ளதால், பெரும்பாலான சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
இந்த மெக்கேகட்டு கிராமமே பூர்வீக நம்பிக்கைகள், பழங்குடியின மக்களின் பழக்கவழக்கங்களால் நிறைந்துள்ளது. இங்கு இறை வழிபாடு மட்டுமின்றி இயற்கை, விலங்குகள், மனித ஆவிகள் வழிபாடும் விநோத வழக்கமும் உள்ளது.
கோவிலில் ஆண்டு பூஜைகளில் மாரி பூஜை, தக்கே பாலி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக துலாபாரம் அளித்து காணிக்கை செலுத்துகின்றனர்.
இக்கோவிலுக்கு பக்தர்களின் வருகை சமீப காலமாக அதிகரித்துள்ளது. கோவிலில் உள்ள மரச்சிலைகளை கோவில் நிர்வாகத்துடன் சேர்ந்து கிராம மக்களும் பாதுகாத்து வருகின்றனர்.
இத்தனை சிறப்புமிக்க, யாரும் அறியாத கோவிலை வாழ்வில் ஒரு முறையாவது சென்று பார்வையிடலாமா?
எப்படி செல்வது?
பஸ்: மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மூலம் உடுப்பி பஸ் நிலையத்திற்கு செல்லலாம். அங்கிருந்து டாக்சி மூலம் கோவிலுக்கு பயணிக்கலாம்.ரயில்: யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 16595 எண் ரயில் மூலம் உடுப்பி ரயில் நிலையத்தை அடையலாம். அங்கிருந்து டாக்சி மூலம் கோவிலை அடையலாம்.