பதிவு செய்த நாள்
15
ஜூலை
2025
02:07
துமகூரு மாவட்டம், குனிலில் உள்ளது பெட்டத ரங்கநாத சுவாமி கோவில் எனும் உடமுடி ரங்கநாத சுவாமி கோவில். பல நுாறு ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்ரீரங்கபட்டணாவை சேர்ந்த ரங்கப்பா என்பவர் இங்கு வந்தார். இங்கு தியானத்தில் மூழ்கியிருந்தார். இங்குள்ள மக்களுக்கு நல்ல, கெட்டதை கூறி வந்தார். அவரும் இங்கேயே ஜீவசமாதி அடைந்தார். இங்கு அவரது பிருந்தாவனம் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மீது 5 அடி கல் வைக்கப்பட்டிருந்தது. சில நாட்களில் கல்லில் விஷ்ணு தோன்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இங்கு கோவில் கட்டி பக்தர்கள் வழிபட துவங்கினர்.
மலை அடிவாரத்தில் இருந்து இந்த கல்லை மேலே கொண்டுவர மிகவும் சிரமமாக இருந்தது. அப்போது எங்கிருந்தோ வந்த பாம்பும், உடும்பும் இந்த கல்லை மலை உச்சிக்கு கொண்டு செல்ல உதவியதாக கூறப்படுகிறது. அதனாலேயே, ‘உடமுடி ரங்கநாதசுவாமி’ என்றும் அழைக்கின்றனர். இங்கு விசேஷம் என்னவென்றால், வழக்கமாக நாகத்தின் மீது வலதுபுறம் கைவைத்தபடி சயன கோலத்தில் விஷ்ணு அருள்பாலிப்பார். ஆனால், இக்கோவிலில் மட்டும் இந்த கல்லின் கீழ் பகுதியில் நாகத்தின் மீது இடதுபுறம் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
வழக்கமாக கோவில்களில் சுவாமி தரிசனம் முடிந்த பின், கோடை நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கதவுகளே இல்லை என்பது சிறப்பது. சுவாமியை தரிசிக்க தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒரு நாள் வெகு தொலைவில் இருந்து பக்தர்கள் வந்தபோது, நடை சாத்தப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதை பார்த்த விஷ்ணு, கதவை, தனது காலால் எட்டி உதைத்ததாகவும், அந்த கதவு, குனிகல்லில் உள்ள ஏரியில் விழுந்ததாகவும் நம்பப்படுகிறது. பக்தர்கள் எப்போது இங்கு வந்தாலும், எந்த தடையும் இல்லாமல், சுவாமியை தரிசிக்கும் வகையில் கதவுகள் அமைக்கப்படவில்லை.
பக்தர்கள் எண்ணிய காரியங்கள் ஈடேற அருள்பாலிக்கிறார். தினமும் காலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். இரு சக்கர வாகனம், காரில் வருவோர், மலை உச்சி வரை செல்லலாம். அதற்கான தார்சாலை போடப்பட்டு உள்ளது. அதுபோன்று படிக்கட்டுகள் வழியாகவும் செல்லலாம். அடிவாரத்தில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்து உள்ளது. படிக்கட்டு வழியாக மலையேறும் பக்தர்கள், ஆஞ்சநேயரை தரிசித்து விட்டு ஏறலாம்.
பக்தர்கள் வசதிக்காக, மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரையிலும் மேலே தடுப்புகள் போட்டுள்ளனர். இதனால் வெயிலிலும், மழையினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுக்க சிமென்ட் நாற்காலிகள் போடப்பட்டு உள்ளன.