இன்று ஆடி செவ்வாய், ஏகாதசி விரதம்; விளக்கேற்றி அம்மன், பெருமாளை வழிபட வேண்டும் வரம் பெறலாம்.!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2025 10:08
ஆடி மூன்றாம் செவ்வாய், ஏகாதசி விரதமான இன்று வழிபாட்டிற்கான சிறந்த நாள். ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். பக்தர்கள் வழங்கும் ஆயிரக்கணக்கான கண்ணாடி வளையல்களை சரம்சரமாகக் கோர்த்து அம்மனுக்கு அலங்காரம் செய்வர். மூன்று நாட்கள் கழித்து அந்தக் கண்ணாடி வளையல்களை சுமங்கலிகளுக்குப் பிரசாதமாக வழங்குவர். இதனால் சுமங்கலிகள் குடும்பத்தில் நீடூழி சுகமாக வாழ்வர். வளையல்களைப் பிரசாதமாகப் பெறும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் மக்கட்செல்வம் இல்லாதவர்களுக்கு நல்ல அழகான குழந்தை செல்வம் கிட்டும். ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் சந்நிதிமுன் நெய் விளக்கேற்றி வழிபட்டாலும் எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டாலும் தோஷங்கள் விலகும்; சந்தோஷமான வாழ்வுகிட்டும்.ஆடி மூன்றாம் செவ்வாய்யான இன்று அம்மனை வழிபட அனைத்தும் கிடைக்கும்.
பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் ஏகாதசி விரதம். ஏகாதசி விரதம் இருப்போர் அளவில்லா செல்வம், உயரிய நிலையை பெறலாம். விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ஏகாதசி என்று சொன்னாலே பாவம் தீரும் என்றால், பெருமாளை வழிபட எவ்வளவு புண்ணியம் சேரும்..! பெருமாள் மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் தரும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம். ஒவ்வொரு மாதமும் வரும் திருவோணம் பெருமாள் வழிபாட்டிற்கான நாள். பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் நாள் இது. இன்று சிவன், பெருமாளை வழிபட்டு அவர்களின் திருவடியை போற்றுவோம். வீட்டில் விளக்கேற்றி அம்மன், பெருமாளை வழிபட வேண்டும் வரம் பெறலாம்.!