பதிவு செய்த நாள்
16
டிச
2025
11:12
ராகவேந்திர சுவாமி என்று கூறினாலே, முதலில் பக்தர்களுக்கு நினைவுக்கு வருவது கர்நாடகா –- ஆந்திரா எல்லையில் உள்ள மந்த்ராலயா தான். மைசூரின் நஞ்சன்கூடிலும் தெய்வீக சக்தி நிறைந்த, ஸ்ரீராகவேந்திர சுவாமி மடம் உள்ளது. பொதுவாக மடங்கள், கோவில்களில் ராகவேந்திர சுவாமியின் புகைப்படத்தை வைத்து வழிபடுவர்.
உலகிலேயே ராகவேந்திர சுவாமியை, சிலை வடிவில் வழிபடும் ஒரே இடம் இந்த மடம் மட்டுமே. இந்த மடத்தில் உள்ள ராகவேந்திர சுவாமியின் சிலை, செதுக்கப்பட்ட சிற்பம் இல்லை. மாறாக ராகவேந்திர சுவாமி தனது விருப்பப்படி காவிரி ஆற்றில் இருந்து வெளிவந்த உருவமே இங்கு சிலையாக உள்ளது. இந்த மடம், பிரதிகா சன்னிதானம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
கடந்த 1836 முதல் 1861 வரை ஸ்ரீராகவேந்திர சுவாமி மடத்தின் தலைவராக சுக்னேந்திர தீர்த்தர் இருந்தார். தனது இறுதி நாட்களை அவர் எண்ணி கொண்டு இருந்த போது, மந்த்ராலயா சென்று ராகவேந்திர சுவாமியை தரிசிக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்தார். அப்போது சுக்னேந்திர தீர்த்தர் கனவில் தோன்றிய, ராகவேந்திர சுவாமி, ‘நீங்கள் என்னை தேடி மந்த்ராலயம் வர வேண்டாம்; நானே உங்கள் இடத்திற்கு வந்து வசிக்கிறேன்’ என்று கூறி உள்ளார்.
சுக்னேந்திர தீர்த்தர் கனவில் மட்டுமின்றி, துணி துவைக்கும் சலவை தொழிலாளி, பிராமணர் ஒருவர், மன்னர் மும்முடி கிருஷ்ணராஜ உடையார் கனவில் தோன்றியும் நஞ்சன்கூடுவுக்கு வர உள்ளது பற்றி கூறி ராகவேந்திர சுவாமி கூறியுள்ளார். அதன்படி காவிரி ஆற்றில் சலவை தொழிலாளி ஆகாசன் துணி துவைத்து கொண்டு இருந்த போது, ஒரு கல்லில் இருந்து ஓம் என்ற சத்தம் எழுவதை கேட்கிறான்.
இந்த சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு, கல்லில் பார்த்த போது அதில் ராகவேந்திர சுவாமி உருவம் தெரிகிறது. அந்த கல்லை எடுத்து ஆற்றங்கரையில் வைத்து செல்கிறார். காவிரி ஆற்றுக்கு வந்த பிராமணர், கல்லை எடுத்து சென்று சுக்னேந்திர தீர்த்தரிடம் கொடுத்து விடுகிறார். மன்னர் மும்முடி கிருஷ்ணராஜ உடையார் கனவில், ராகவேந்திர சுவாமி தோன்றிய போது, எனது சிலையை நிறுவ சுக்னேந்திர தீர்த்தருக்கு தேவையான உதவி செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறார்.
இந்த கட்டளையை மன்னரும் நிறைவேற்றி இருக்கிறார் என்று வரலாறுகள் கூறுகின்றன. தற்போது நீங்கள் மைசூரு சென்றால் நஞ்சன்கூடில் உள்ள நஞ்சுண்டேஸ்வரை தரிசனம் செய்து விட்டு, ராகவேந்திர சுவாமி மடத்திற்கும் சென்று வந்தால், வாழ்வில் ஏற்பட்ட அனைத்து பிரச்னையும் நீங்கும் என்று நம்பப்படுகிறது.