பதிவு செய்த நாள்
16
டிச
2025
11:12
ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகரின் பெல்லுார் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட குப்பிகா கிராமத்தில் அமைந்து உள்ளது குலி குலி சங்கரா கோவில். கோவிலை சுற்றிலும் வனப்பகுதியும், காப்பி தோட்டமும் காணப்படுகிறது. விசாலமான திறந்த நிலையில் வளாகம் அமைந்து உள்ளது. இக்கோவிலுக்கு ராஜகோபுரம் எதுவும் இல்லை. சாதாரணமாக சிறிய நுழைவு வாயில் உள்ளது. சுற்றுச்சுவர்களும் மூன்று அடி மட்டுமே அமைத்து உள்ளனர்.
கோவிலுக்குள் நுழைந்ததும், சிறிது துாரம் சென்றால், இடதுபுறம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலும், எதிரே குலி குலி சங்கரா கோவிலும் அமைந்து உள்ளது. ஜடா தீர்த்தம் வலதுபுறத்தில் வில்வ மரம் வளர்ந்து உள்ளது. இந்த மரத்தில் இலைகளை பறிக்க வேண்டாம் என்று அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர். இதனை கடந்து சென்றால், ‘ஜடா தீர்த்தம்’ என்ற சிறிய தெப்பகுளம் உள்ளது.
இந்த ஜடா தீர்த்தம் தோன்றியதற்கான காரணம், சிவனும் – பார்வதியும் இங்கு ஓய்வெடுத்து கொண்டிருந்தனர். அப்போது, பார்வதிக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. குடிக்க தண்ணீர் வேண்டும் என்று சிவனிடம் கேட்டார். சிவனும், தன் தலையில் உள்ள கங்கையை கீழே இறங்கி, இங்கே தண்ணீர் வரவழைத்தார்.
அப்போது சிவன், ‘இங்கேயே தங்கி, மக்களுக்கு நல்லது செய்’ என்று கங்கைக்கு உத்தரவிட்டார். அதற்கு கங்கை ஒரு நிபந்தனை விதித்தார். ‘நான் இங்கேயே இருக்க வேண்டுமானால், நீங்களும் இங்கேயே இருக்க வேண்டும். நீங்கள் இருந்தால், நானும் இங்கேயே இருக்கிறேன்’ என்று நிபந்தனை விதித்தார். இதை சிவனும் ஏற்றுக் கொண்டு, அங்கேயே தங்கினார்.
மூழ்காத வில்வ இலை அதுமட்டுமின்றி, இந்த நீரில் எந்த இலையை வீசினாலும் மூழ்குவதில்லை. ஆனால் வில்வ இலை மட்டுமே நீரில் மூழ்கும் அதிசயம் இங்கு நடக்கிறது. சுவாமியை வேண்டி நம் கோரிக்கையை நினைத்து, வில்வ இலையை இந்த ஜடா தீர்த்ததில் போட வேண்டும். அந்த இலை நீரில் மூழ்கி, 20 நிமிடங்களுக்கு பின் மேலே வந்தால், நாம் விடுத்த கோரிக்கை நிறைவேறுவதாக நம்பப்படுகிறது. பக்தர்கள் வேண்டிய கோரிக்கைகள் நிறைவேறியதாகவு ம் கூறுகின்றனர்.
வெளியே வரும் வில்வ இலையை, அருகில் உள்ள சிவலிங்கத்தின் மீது வைத்தால், குடும்பத்தின் பாவம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். இது தவிர, இந்த நீர் சுத்தமாக காட்சியளிக்கிறது. நாம் தற்போது குடிக்கும் நீரைவிட பல மடங்கு சுத்தமானது என்று ஆய்வில் தெரியவந்து உள்ளது. மேலே இருந்து பார்த்தால் பாசி படர்ந்தது போன்று காட்சி அளிக்கும். ஆனால், தீர்த்தத்துக்குள் சென்று பார்த்தால், கண்ணாடி போன்று தெரியும். உள்ளே சிவ லிங்கம் அமைந்து உள்ளது. சிவலிங்கத்தை சுற்றிலும் நுாற்றுக்கணக்கான செடிகள் வளர்ந்துள்ளன. இதை சிவனின் முடி என்று கூறப்படுகிறது.
இந்த தீர்த்தம் அங்கேயே உற்பத்தி ஆகிறது. இதில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. இந்த தீர்த்தத்தில் இருந்து தண்ணீர் வெளியேற குழாய் அமைத்துள்ளனர். இந்த குழாயில் தண்ணீர் வெளியேறி கொண்டே இருக்கிறது. ஆனால், தெப்பகுளத்தில் தண்ணீர் வடிவதே இல்லை. இந்த நீரில் குளித்தால் தோல் நோய் குணமாகிறது என்றும்; குடித்தால் நம் பாவம் போவதாகவும் கூறப்படுகிறது. கோவிலுக்குள் அர்ச்சனை, பூஜைகள், வில்வ இலைகள் விற்கப்படுகின்றன. வில்வ இலைக்கு 20 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.