விவசாயி வில்சன் நாணயம் தவறாத மனிதர். வயலில் ஒரு முறை அவர் உழுத போது துளையிட்ட நாணயம் கிடைத்தது. அதை அதிர்ஷ்டமாக எண்ணி, மனைவியிடம் கொடுத்து பெட்டியில் பாதுகாக்க சொன்னார். அன்று முதல் விளைச்சல் பெருகியது. ‘எல்லாம் நாணயம் கிடைத்த நேரம்’ என எண்ணினார்.
ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் மனைவியிடம், அந்த நாணயத்தை எடுத்து வரச் சொன்னார். அவருக்கோ அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அதில் துளை இல்லை. அப்போது அவரது மனைவி, ‘என்னை மன்னியுங்கள். பெட்டியை சுத்தம் செய்யும் போது நாணயம் காணாமல் போனது. பயத்தால் வேறொரு நாணயத்தை பெட்டியில் வைத்தேன்’ என்றாள். காணாமல் போனது எப்போது எனக் கேட்டதற்கு ‘மூன்று ஆண்டுக்கு முன்பு’ என்றாள்.
அமைதியாக சிந்தித்த வில்சனுக்கு உண்மை புரிந்தது. ‘வாழ்வில் அதிர்ஷ்டம் வந்தது நாணயத்தால் அல்ல. உழைப்பாலும் நேர்மையாலும் தான் என்பதை உணர்ந்தார்.