எந்த ஒன்றையும் படிப்பினையாக எடுத்துக் கொள்ளும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியான செவ்வாய் பனிரெண்டாம் இடத்தில் சஞ்சரித்தாலும் உச்சமாக சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கும், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் செல்வாக்கும், அந்தஸ்தும் உயரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். ஐந்தாம் இடத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கும் குருவால் உங்கள் கனவுகள் நனவாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வெளியில் நின்ற பணம் வசூலாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும் என்றாலும், ஜன. 29 வரை விரய புதனால் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பது இழுபறியாகும். கொடுக்கல், வாங்கலில் எதிர்பார்ப்புகள் தள்ளிப்போகும். சுய தொழில் செய்து வருவோர் கவனமாக செயல்படுவது நன்மையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியை அனுசரித்து செல்வது அவசியம். புதியவர்கள் வழியே குடும்பத்தில் குழப்பம் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நன்மையாகும். விவசாயிகள் விளைச்சல் அறுவடையாகும் வரை கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வதும், தவறான நட்புகளை விட்டு விலகி இருப்பதும் நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: பிப். 5.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 18, 26, 27., பிப். 8, 9.
பரிகாரம்: யோக நரசிம்மரை வழிபட சங்கடங்கள் விலகும்.
சதயம்
உழைப்பால் உயர்வடையும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதும், ராசி நாதன் சனி ஆட்சியாக சஞ்சரிப்பதும் ஒரே நேரத்தில் இரண்டு திசையில் பயணம் செய்வதுபோல் உங்கள் நிலை மாறும். இதைப் பார்த்தால் அது இல்லை அதைப் பார்த்தால் இது இல்லை என்றாகி விடும். இந்த நேரத்தில் ஒவ்வொரு வேலையிலும் நிதானம் வேண்டும். உடல் நிலையிலும் சின்னச் சின்ன சங்கடங்கள் தோன்றி மறையும். வீண் அலைச்சல் செலவு அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நெருக்கடிகள் கூடும். சிலர் மேல் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகநேரும். என்னதான் உழைத்தாலும் அதற்குரிய மரியாதை என்பதும் கிடைக்காமல் போகும். வியாபாரத்திலும் உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பங்கு வர்த்தகம் சங்கடத்தை உண்டாக்கும். திடீர் வரவு வந்தாலும் அடுத்த நிமிடமே அதற்குரிய செலவும் காத்துக்கொண்டிருக்கும். மாதம் முழுவதும் உங்கள் பாக்யாதிபதி சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்கள் தேவைக்கேற்ற வருமானம் வந்து கொண்டிருக்கும். வெளியில் கவுரவமாக நடைபோட முடியும். அதே நேரத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு செலவுகளைக் கட்டுப்படுத்துவார். வியாபாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். எதிர்ப்புகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். அதிர்ஷ்ட வாய்ப்புகளை உண்டாக்குவார் என்றாலும், புதிய நட்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது இந்த நேரத்தில் நன்மையாக இருக்கும். மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். விவசாயிகள் விளைச்சல் வீடு வந்து சேரும் வரை அனைத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சந்திராஷ்டமம்: பிப். 6.
அதிர்ஷ்ட நாள்: ஜன.17, 22, 26, 31., பிப். 4, 8.
பரிகாரம்: வரதராஜப்பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
பூரட்டாதி 1,2,3 ம் பாதம்
எந்த ஒன்றிலும் கவனமாக செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிநாதன் பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் நிதானம் தேவை. புதிய வேலைகளில் ஈடுபடும்முன் அதுபற்றி நன்றாக விசாரித்து அதன் பிறகு முயற்சிப்பது நன்மையை உண்டாக்கும். புதிய முதலீடுகளிலும் கூடுதல் கவனம் தேவை. விரய ஸ்தானத்தில் செவ்வாயும், சூரியனும் கூட்டணி அமைத்திருப்பதால் செலவு அதிகரிக்கும். இடம் வாங்குவது, விற்பது போன்ற விஷயத்தில் நெருக்கடிகள் தோன்றும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதிகள் கிடைப்பதற்கு தாமதமாகும். பூர்வ புண்ணியாதிபதி புதனும் எதிர்மறையாக சஞ்சரிப்பதால் வரவேண்டிய பணம் வருவதிலும் தடை உண்டாகும். வாங்க நினைத்தவற்றை வாங்க முடியாத அளவிற்கு சூழ்நிலைகள் உண்டாகும். இருந்தாலும் வாழ்க்கைக்கு அடிப்படையானவற்றை பாக்யாதிபதி சுக்கிரன் வழங்குவார். வெளியில் பார்ப்பதற்கு எந்தவிதமான குறையும் இல்லாததுபோல் உங்கள் நிலை இருக்கும். ஆனால் உங்களுக்குள் பெரும் போராட்டமும் நெருக்கடியாகவும் இருக்கும், அதையும் சமாளித்திடக்கூடிய சக்தி உங்களுக்கு ஏற்படும். சப்தம ஸ்தானத்தில் ஞானமோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் நண்பர்கள் வழியில் சில அனுபவம், சங்கடங்களை அடைய வேண்டியதாக இருக்கும். எனவே புது நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது மிக அவசியம். மாணவர்கள் இந்த நேரத்தில் தவறான நண்பர்களை விட்டு விலகி படிப்பில் கவனம் செலுத்தினால் உயர் கல்வி கனவு நனவாகும். விவசாயிகள் எல்லாவற்றையும் தங்களுடைய நேரடிப் பார்வையில் செய்து வந்தால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: பிப். 7.
அதிர்ஷ்ட நாள்: 17, 21, 26, 30, பிப். 3, 8, 12.
பரிகாரம்: கள்ளழகரை வழிபட நெருக்கடிகள் நீங்கும்.
மேலும்
தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை) »