பதிவு செய்த நாள்
28
ஜன
2013
05:01
பெங்களூரு புறநகர் ரயில் நிலையம் — நிலையத்தின் படிக்கட்டை ஒட்டி, நிரம்பி வழிந்த நிலையில், ஒரு குப்பைத்தொட்டி. அதனருகே சாப்பிட்டு, பல நாளானதன் காரணமாக, ஒட்டிய வயிறுடன், உயிரை கண்களில் பிடித்தபடி, ஒரு தொழு நோய் பாதித்த இளைஞன், தன் பக்கத்தில் வீசியெறியப்பட்ட, அழுகிய வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட நினைத்து, சிரமப்பட்டு, உடம்பால் நகர்ந்து கொண்டு இருந்தான். இந்த காட்சியை பார்த்த ஆயிரக்கணக்கான பயணிகள், "உச் கொட்டி பரிதாபப்பட்டதோடு சரி, யாரும் பக்கத்தில் போகவில்லை. முதல் காரணம், அவசரம். முக்கிய காரணம், இளைஞனின் உடம்பை உருக்குலைந்து கொண்டிருந்த தொழுநோய் ஏற்படுத்திய அருவருப்பு. இந்த நேரம், ரயிலில் இருந்து இறங்கிய முதுமையான தோற்றம் கொண்ட கிறித்தவ சகோதரி ஒருவர், இளைஞனை பார்த்த மாத்திரத்தில், தன் வயதையும் பொருட்படுத்தாமல், ஓடோடிப்போய், "மை சன் என்று தூக்கி, தன் மடியில் கிடத்திக் கொண்டார். பிறகு பையில் இருந்த உணவை ஊட்டிவிட்டு, குடிக்க தண்ணீர் கொடுத்து, தலையைக் கோதியபடி, "யாரப்பா நீ? என்று விசாரித்தார். கர்நாடக மாநிலம், மதுரகிரியில் பிறந்த, தன் பெயர் ரமேஷ் பாபு என்பதும், தனக்கு தொழுநோய் என்று தெரிந்த உடன், பெற்றோரே வீட்டை விட்டு துரத்திவிட்டதாகவும் அழுது கொண்டே தெரிவித்தார்.
இவருக்கு வீட்டில் துவங்கிய துரத்தல், எல்லா பக்கமும் தொடர்ந்தது; தொழுநோயும் வளர்ந்தது. ஒரு கட்டத்தில், நடமாட முடியாத நிலையில், இந்த ரயில் நிலையத்தின் மூலையில் தற்போது தஞ்சம் அடைந்துள்ள ரமேஷ்பாபு, பெற்ற தாய் கூட தொடத் தயங்கி, துரத்திவிட்ட தன்னை, தூக்கி மடியில் கிடத்தி, உணவு ஊட்டிய கருணை தெய்வத்தின் கைகளை பிடித்து கதறி அழுதார். "நான் வந்துட்டேன்ல, இனி அழக்கூடாது... என்று கூறிய சகோதரி, உடனே எங்கேயோ போன் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் ஒரு வாகனம் வர, இருவரும் அதில் பயணப்பட்டனர்.
சில ஆண்டுகளுக்கு பிறகு...
இப்போது ரமேஷ் பாபு பெங்களூரு மாநகராட்சியில், சுறுசுறுப்பாக பணியாற்றும் உதவியாளர். "ரமேஷ்... ரமேஷ் என்று அலுவலகமே கூப்பிடுகிறது; கொஞ்சுகிறது. "ஒரு காலத்தில், எனக்கு தொழுநோய் இருந்தது என்பதை இப்போது என்னாலயே நம்ப முடியவில்லை. தொழு நோய் முற்றிலும் குணமாகி, மனைவி குழந்தைகள், சொந்த வீடு என்று சந்தோஷமாக இருக்கிறேன்... என்கிறார் ரமேஷ்.
இந்த அதிசயம் எப்படி நடந்தது?
பெங்களூரு பக்கத்தில் உள்ளது சுமன்ன ஹள்ளி இங்கு அரசின் வேண்டுகோளுக்கிணங்க, தொழுநோய் இல்லம் ஒன்று, அங்குள்ள கிறித்தவ தொண்டு நிறுவனத்தால், 77ம் ஆண்டு துவங்கப்பட்டது. தொழு நோய் இல்லம் தயாராகி விட்டது. தொழு நோயாளிகளும் வந்து விட்டனர். ஆனால், அவர்களை பரிவுடன் பார்த்துக்கொள்ள ஒரு அன்புமயமான சகோதரி தேவைப்பட்டார். மாநிலம் முழுவதும் உள்ள சகோதரிகள் அனைவருக்கும் வேண்டுகோள் விடப்பட்டது. அப்போது சிக்மகளூரில் அரசு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருந்த சிஸ்டர் மேரியின் கைக்கும், இந்த வேண்டுகோள் கடிதம் கிடைத்தது. அடுத்த நிமிடமே தான் பார்த்த அரசு வேலையை தூக்கி எறிந்துவிட்டு, இந்த தொழுநோய் இல்லத்தின் பொறுப்பாளராக சேர்ந்தார். இல்லையில்லை அர்ப்பணித்துக் கொண்டார் .அன்று முதல் இன்று வரை கிட்டத்தட்ட, 36 வருடங்களாக இந்த தொழுநோய் இல்லத்தில், கருணையே உருவான தாயாக புன்னகையுடன் வலம் வருகிறார் மேரி. இல்லத்தில் உள்ள தொழுநோயாளிகளை, சரியான மருந்து, மாத்திரை கொடுத்து குணப்படுத்துவதும், குணமான அவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதும், வேலைக்கு தகுதியில்லாதவர் களுக்கு சிறு கடைகள் அமைத்து கொடுப்பதுமாக, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருகிறார். பின், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து, குடும்பம் நடத்தவும் ஏற்பாடு செய்து விடுகிறார். இப்போது ஐநூறு பேர், பெங்களூரில் உள்ள அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கின்றனர், அந்த 500 பேரில், ஒருவர்தான் ரமேஷ் பாபு, 800 பேர் வரை முழுமை யாக குணமாகி, அரசு கொடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். அத்தனை பேர் வீட்டு பூஜை அறைகளிலும், தவறாமல் சிஸ்டர் மேரியின் படம் இடம் பெற்றிருக்கிறது. இப்போது, 75 வயதாகும் மேரிக்கு, பல மாநில மற்றும் தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. உண்மையில் இதன் மூலம் விருதுகள் கவுரவம் தேடிக் கொண்டன. அவரை பொறுத்தவரை, "அம்மா, நான் இப்ப நல்லா இருக்கேம்மா... என்று கைபிடித்து பேசும் முன்னாள் தொழுநோயாளியின் ஆனந்த கண்ணீர்தான் பெரிய விருது. பெங்களூரில் வாழும் அன்னை தெரசாவாக வலம்வரும் சகோதரி மேரியை, வாழ்த்த வயதும், தகுதியும் இல்லாததால் வணங்குவோம். எல். அற்புதராஜ்.