பதிவு செய்த நாள்
08
மார்
2011
05:03
சூதாட்ட வெறி கண்ணை மறைக்க, தன்னிடம் இதுவரை பணிசெய்த பெண்கள் என்று கூட பாராமல், அவர்களையும் வைத்து சூதாட முன்வந்தான் நளன். வழக்கம் போல் பகடை உருள, அவர்களையும் புட்கரனிடம் இழந்து விட்டான் நளன்.நளனின் எல்லாப் பொருட்களும் போய்விட்டன. ஆம்...நாடே போய்விட்டது. அசையாப் பொருள்களுடன் அரண்மனையில் அசைந்தாடிய பெண்களும் பறி போனார்கள். இனி அவர்கள் புட்கரனின் பணியாட்களாக இருப்பார்கள். விளையாட என்ன இருக்கிறது? நளன் திகைத்துப் போய் எழுந்தான். நளனே! ஏன் எழுந்திருக்கிறாய்? கையில் வெண்ணெய் இருக்கிறது. நெய்க்கு அலையலாமா? இன்னும் ஒரு முக்கியப்பொருள் உன்னிடம் இருக்கிறது. அந்தப் பொருள், இங்கே நீ என்னிடம் தோற்ற அத்தனைக்கும் சமம். அந்தப் பொருளை வைத்து நீ விளையாடு. அவ்வாறு விளையாடி ஜெயித்தால், உன் தேசத்தை உன்னிடமே தந்து விட்டு, அப்படியே திரும்பி விடுகிறேன். என்ன விளையாடலாமா? என்றான். தன்னிடம் அப்படி எந்தப் பொருளும் இல்லாதபோது, இவன் எதைப் பற்றிச் சொல்கிறான் என நளன் விழித்தான்.புட்கரன் அட்டகாசமாக சிரித்தான். என்னப்பா இது! ஒரு கணவனுக்கு துயரம் வந்தால் மனைவி என்ன செய்வாள்? அதைத் துடைக்க முயல் வாள். உன்னிடம் ஒரு அழகுப்புயல் இருக்கிறதே! தேவர்கள் கூட அவளை அடைய முயன்று தோற்றார்களே! கருவிழிகள், மயங்க வைக்கும் பார்வை, தாமரைப் பாதங்கள், குறுகிய இடை... என்று இழுத்ததும், சே...பொருளை ஒருவன் இழந்து மதிப்பு மரியாதையின்றி நின்றால், அவனது மனைவிக்கல்லவா முதல் சோதனை வருகிறது.
எந்தத் தகுதியும் இல்லாத இவன், தன் தம்பியின் மனைவி என்று கூட பாராமல், அவளை வைத்து சூதாடச் சொல்கிறானே! இவன் ஒரு மனிதனா? என்று எண்ணி, அதே நேரம் ஏதும் பேச இயலாமல், இனி இந்தக் கொடிய சூதாட்டம் வேண்டாம். போதும், அதுதான் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டாயே! மகிழ்ச்சியாக இரு, என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வேகமாகப் போய்விட்டான்.இந்தத் தொடரை ஆரம்பம் முதல் வாசிக்கும் வாசகர்களுக்குத் தெரியும். வியாச மகரிஷி, மனைவியையே வைத்து சூதாடித்தோற்ற தர்ம மகாராஜாவுக்கு நளனின் கதையைச் சொல்கிறார். நளன் என்பவன் எல்லாப் பொருட்களையும் தோற்றான். ஆனால், தன் மனைவியை மட்டும் வைத்து சூதாட மறுத்துவிட்டான். இழந்த பொருளை சம்பாதித்து விடலாம். ஆனால், மனைவியை சம்பாதிக்க முடியுமா? நளனைப் போல் இல்லாமல், நீ உன் மனைவியைத் தோற்றாயே! என்று தர்மனின் புத்தியில் உரைக்கும்படி சொன்ன கதையே நளபுராணம். அதையே நாம் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம். தன் அன்பு மனைவி தமயந்தியிடம் சென்று நடந்ததைச் சொன்னான். கணவன் இப்படி பொறுப்பற்று நடந்து கொண்டால், இக்காலத்துப் பெண்கள் அவனை உண்டு, இல்லை என பண்ணி விடுவார்கள். ஆனால், அக்காலத்தில் அப்படியில்லை. தன் மணாளனுக்கு இப்படி ஒரு நிலை விதிவசத்தால் வந்ததே என தமயந்தியும் வருத்தப்பட்டாள். தமயந்தி! சூதாடி நாட்டை இழந்து விட்டேன். வா! நாம் வேறு ஊருக்குப் போய் பிழைத்துக் கொள்ளலாம், என்ன சொல்கிறாய்? என்றான். அவள் மறுப்பேதும் சொல்லவில்லை. வருகிறேன் அன்பே, எனச்சொல்லி அவனுடன் கிளம்பி விட்டாள். இதைத்தான் வினைப்பயன் என்பது! சிலர் புலம்புவார்கள்! நான் நல்லவன் தானே! எனக்குத் தெரிந்து யாருக்கும் இப்பிறவியில் எந்தப் பாவமும் செய்யவில்லையே! ஆனாலும், ஏன் எனக்கு சோதனை மேல் சோதனை வருகிறது என்று! நல்லவராக இருந்தாலும், முற்பிறவியில், நாம் யாருக்கு என்ன செய்கிறோமோ, அதன் பலனை இப்பிறவியில் அனுபவித்தே தீர வேண்டும். அதைத் தான் நளதமயந்தி இப்பிறவியில் அனுபவிப்பதாக எண்ணிக் கொண்டனர்.
நளமகாராஜா நாட்டைத் தோற்ற விஷயம் ஊருக்குள் பரவிவிட்டது. தங்கள் மன்னரை வஞ்சகமாக புட்கரன் ஏமாற்றிவிட்டானே என்று அவர்கள் புலம்பினர். மேலும், மன்னர் நாட்டை விட்டு அருகிலுள்ள காட்டுக்குச் செல்லப்போகிறார் என்ற விஷயமும் அவர்களுக்குத் தெரிய வரவே, அவர்கள் கண்ணீர் விட்டனர். நளதமயந்தி அரண்மனையை விட்டு வெளியேறி தெருவில் நடந்தனர்.பணமிருப்பவர்கள் ஆட்டம் போடக்கூடாது. ஏனெனில், திருமகள் ஒரே இடத்தில் நிலைத்திருப்பவள் அல்லள்! எங்கே ஒழுக்கம் தவறுகிறதோ, அந்த இடத்தை விட்டு அவள் வேகமாக வெளியேறி விடுவாள். அதுவே அவள் செல்வத்தில் திளைத்து அட்டகாசம் செய்பவர் களுக்கு வழங்கும் தண்டனை. நேற்று வரை ராஜா, ராணியாக இருந்தவர்கள், இன்று அவர்களால் ஆளப்பட்ட குடிமக்களையும் விட கேவலமான நிலைக்குப் போய்விட்டார்கள். அரண்மனை அறையில் இருந்து வாசல் வரை பல்லக்கிலும், வாசலில் இருந்து தேரிலும் பவனி வந்து, தங்கள் கால்களைத் தரைக்கே காட்டாதவர்கள், இன்று நடக்கிறார்கள்... நடக்கிறார்கள்..மக்கள் இதைப் பார்த்து கண்ணீர் பொங்க அழுதார்கள். மகாராஜா! எங்கள் தெய்வமே! வேலேந்தி பகைவர்களை விரட்டியடித்த வேந்தனே! உன் வெற்றிக்கொடி இந்த தேசத்தில் நேற்று வரை பறந்தது. எங்களை நல்ல முறையில் கவனித்துக் கொண்டவர் நீங்கள். உடனே காட்டுக்குப் போக வேண்டாம். எங்களுடன் இன்று ஒருநாளாவது தங்குங்கள், என வேண்டினர். எங்களை தொடர்ந்து ஆளுங்கள், என்று மக்கள் கேட்குமளவுக்கு ஒரு ஆட்சி இருக்க வேண்டும். நளனின் ஆட்சி அப்படித்தான் இருந்தது. மக்களின் வேண்டுதலை ஏற்கலாமா? நளன் தமயந்தியின் பக்கம் திரும்பி, மக்கள் நாம் இங்கு ஒருநாள் தங்க வேண்டுமென விரும்புகிறார்கள். நீ என்ன சொல்கிறாய்? என்றான்.