பதிவு செய்த நாள்
22
நவ
2013
05:11
சாதாரணமாக குடும்பங்களில், அண்ணன் தம்பிகளுக்குள் பாகப் பிரிவினையின் போது, பகை ஏற்படுவது சகஜம்.தகப்பனார் இருக்கும் போதே அவர், யார், யாருக்கு என்னென்ன என்பதை பங்கு போட்டுக் கொடுத்து விடுவது நல்லது. ஒன்றும் எழுதி வைக்காமல் மண்டையைப் போட்டு விட்டால், பாகப் பிரிவினையின் போது, அண்ணன் தம்பிகளுக்குள் விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு. இதில் யாராவது ஒருவருக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால், விஷயம் சுமூகமாகத் தீர்ந்து விடும். அது போன்ற எண்ணம் இல்லாவிட்டால் அண்ணன், மனைவி, மச்சினன், மாமனார் இவர்கள் ஒரு அணியாகவும், தம்பியின் மனைவி, மாமனார், மச்சினன் போன்றவர்கள் ஒரு அணியாகவும் நின்று, சண்டை போட வாய்ப்பு உண்டு.
இந்தப் பகை தற்காலிகமானதாகவும் இருக்கலாம் அல்லது ஜென்மப் பகையாகவும் மாறலாம். பொறுமையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் இருந்தால், குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். விபவசு என்று ஒரு ரிஷி இருந்தார். அவருக்கு, சுப்ரதீகர் என்ற தம்பி இருந்தார். தம்பி, அண்ணனிடம் பேசும் போதெல்லாம், பாகப் பிரிவினையைப் பற்றியே வற்புறுத்துவது வழக்கமாகி விட்டது. அதற்கு அண்ணன் விபவசு, பெருந்தவமுள்ள தம்பி... பாகப் பிரிவினை என்பது பல பிழைகள் ஏற்படக் காரணமாகக் கூடும். சொத்துகளை பிரித்துக் கொண்ட பிறகும், திருப்தி ஏற்பட்டு விடும் என்று சொல்ல முடியாது. எனக்கு அதைக் கொடுக்காமல் அண்ணன் ஏமாற்றி விட்டான் என்று தம்பி நினைக்கக் கூடும். விலையுயர்ந்ததை தம்பி எடுத்து விட்டானே என்று அண்ணன் நினைக்கக் கூடும். இப்படி, இவர்களுக்குள் அபிப்ராய பேதம் ஏற்பட்டு, அதுவே பகையாகி விடும்.
இந்த சமயம் பார்த்து சந்தர்ப்பவாதிகள் இதில் தலையிட்டு சமாதானம் செய்து வைப்பதாகச் சொல்லி, நண்பர்கள் போல பேசுவர். இப்படி அண்ணனுக்கு நாலு பேர், தம்பிக்கு நாலு பேர் சேர்ந்து, இரண்டு அணிகள் உருவாகி குடும்ப சண்டை, கட்சிச் சண்டையாகி விடும். அதனால், பாகப் பிரிவினையைப் பற்றி அதிகம் பேசாதே... என்றார். இவ்வளவு தூரம் சொல்லியும் சுப்ரதீகர் மகரிஷி மீண்டும் பாகப் பிரிவினை பற்றியே பேசினார். இதனால், கோபம் கொண்ட விபவசு முனிவர் தம்பியைப் பார்த்து, சுப்ரதீகா... நான் எவ்வளவு நல்ல வார்த்தை சொன்னாலும் நீ கேட்கவில்லை. பாகப் பிரிவினையையே விரும்புகிறாய். மதம் பிடித்தவன் போல் பேசுகிறாய். அதனால், நீ யானை ஜன்மத்தை அடைவாயாக... என்று சபித்தார்.
இதைக் கேட்ட தம்பி சுப்ரதீகர், நீயும் கொழுப்பினால் பாகப்பிரிவினைக்குச் சம்மதிக்காததுடன், என்னையும் சபித்து விட்டாய். அதனால், நீ ஆமை ஜன்மத்தை அடைவாயாக... என்று மறு சாபமிட்டார். என்ன இருந்தாலும் முனிவர்கள் சாபமல்லவா, பலிக்காமல் இருக்குமா! இருவருமே அடுத்த ஜென்மத்தில் தம்பி, யானையாகவும், அண்ணன், ஆமையாகவும் பிறந்தனர். இரண்டுமே பெரிய உருவத்துடன், மகாபலம் வாய்ந்தவைகளாக இருந்தன. இப்படி ஆன பிறகும் கூட இவைகளுக்குள் இருந்த விரோதம் தீரவில்லை. ஒன்றை ஒன்று கொன்றுவிட முயன்று, நீண்ட காலம் போராடியது. இந்த சமயம் கருடன் ஒன்று, தன் தகப்பனாரிடம் என் பசியைத் தீர்க்குமளவுக்கு ஆகாரம் எங்கே உள்ளது என்று கேட்க, தகப்பனார் கச்யபரும், இந்த யானை, மற்றும் ஆமையைக் குறிப்பிட்டு சொல்லி, அவற்றைச் சாப்பிட்டு, பசியைத் தீர்த்துக் கொள்ளச் சொன்னார். அதன்படியே, கருடன், ஏரிக்கரைக்குப் போய், இரண்டையும் கபளீகரம் செய்து, ஏப்பம் விட்டது.
பாகப் பிரிவினை என்பது, எங்கே போய் முடிந்தது பாருங்கள்! தகப்பன், பாட்டன் சேர்த்து வைத்த சொத்துக்கு அண்ணன், தம்பிகள் விரோதப்பட்டுக் கொள்வது நியாயமா? யோசிக்க வேண்டும்!