பதிவு செய்த நாள்
13
ஜூலை
2011
03:07
குறிஞ்சிப்பாட்டு பாடியவர் கபிலர். இது 261 அடிகளைக் கொண்டது. காதலித்தவனை ஒரு பெண் திருமணம் செய்து இல்லறம் நடத்துவது குறித்து இதில் கூறப்படுகிறது. ஆரிய மன்னன் பிரகத்தனுக்கு தமிழின் மேன்மையை உணர்த்துவதற்காகக் கபிலர் இப்பாடலைப் பாடினார். பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு. குறிஞ்சிப்பாட்டின் தலைவி, தனது தோழியுடன் நீராடி மகிழ்கிறாள். பலபூக்களைப் பறித்துப் பாறையில் குவிக்கிறாள். அதில் 99 மலர்கள் இடம்பெறுகின்றன. இம்மலர்கள் 34 அடிகளில் தொடர்ச்சியாக வர்ணிக்கப்படுகின்றன. அப்பூக்களின் பெயர்கள் இதோ! காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை(செங்கழுநீர்ப்பூ), குறிஞ்சி, வெட்சி, செங்கோடுவேரி, தேமா, மணிச்சிகை(செம்மணிப்பூ), உந்தூழ்(பெருமூங்கில்), கூவிளம்(வில்வம்), எறுழம், கள்ளி(மராமரப்பூ), கூவிரம், வடவனம், வாகை, குடசம்(வெட்பாலைப்பூ), எருவை(பஞ்சாய்க்கோரை), செருவிளை(வெண்காக்கனம்), கருவிளை(கருவிளம்பூ), பயினி, வானி, குரவம், பசும்பிடி (பச்சிலைப்பூ), வகுளம்(மகிழம்பூ), காயா(காயாம்பூ), ஆவிரை, வேரல்(சிறுமுங்கில் பூ), சூரல்(சூரைப்பூ), குரீஇப்பூளை (சிறுபூளை, கண்ணுப்பிள்ளை என்னும் கூரைப்பூ), குறுநறுங்கண்ணி(குன்றிப்பூ), குருகிலை(முருக்கிலை), மருதம், கோங்கம், போங்கம்(மஞ்சாடிப்பூ), திலகம், பாதிரி, செருந்தி, அதிரல்(புனலிப்பூ), சண்பகம், கரந்தை(நாறுகரந்தை), குளவி(காட்டுமல்லி), மாம்பூ, தில்லை, பாலை, முல்லை, குல்லை (கஞ்சங்கொல்லை), பிடவம், சிறுமாரோடம்(செங்கருங்காலிப்பூ), வாழை, வள்ளி, நெய்தல், தாழை(தெங்கிற்பாளை), தளவம்(செம்முல்லைப்பூ), தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, சேடல்(பவளக்கான் மல்லி), செம்மல்(சாதிப்பூ), சிறுசெங்குரலி(கருந்தாமக்கொடிப்பூ), கோடல்(வெண்கோடற்பூ), கைதை(தாழம்பூ),வழை(சுரபுன்னை), காஞ்சி, நெய்தல்(கருங்குவளை), பாங்கர்(ஓமை), மராஅம்(மரவம்பூ, வெண்கடம்பு), தணக்கம், ஈங்கை(இண்டம்பூ), இலவம், கொன்றை, அடும்பு(அடும்பம்பூ), ஆத்தி, அவரை, பகன்றை, பலாசம், பிண்டி(அசோகம்பூ), வஞ்சி, பித்திகம்(பிச்சிப்பூ), சிந்துவாரம்(கருநொச்சிப் பூ), தும்பை, துழாஅய்(துளசி), தோன்றி, நந்தி(ந்நதியாவட்டைப்பூ), நறவம்(நறைக்கொடி), புன்னாகம், பாரம்(பருத்திப்பூ), பீரம்(பீர்க்கம்பூ), பைங்குருக்கத்தி(பசிய குருக்கத்திப்பூ), ஆரம்(சந்தனம்), காழ்வை(அகில்), புன்னை, நரந்தம்(நாரத்தம்பூ), நாகம், நள்ளிருள்நாறி(இருவாட்சிப்பூ), குருந்தம், வேங்கை, புழுகு(செம்பூ) என்பவை.
இத்தனை பூக்கள் இந்த மண்ணில் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன. இப்போது ஒரு சிலவே உள்ளன. இவற்றின் பெயர்களைத் தொகுத்துத் தந்த கபிலரை இயற்கையை வர்ணிப்பதில் கபிலரே சிறந்தவர் என்று தமிழறிஞர் தனிநாயக அடிகளார் போற்றுகிறார். இவற்றிற்கெல்லாம் மேலாக சிறந்த பூ அன்பு என்கிறார் விவேகானந்தர். இந்த அன்பினால், அள்ளிக்கொடுக்கும் வள்ளலான இறைவனை பூஜித்தால் நமக்கு வேண்டியதைப் பெறலாம்.