Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாம்பாட்டி சித்தர் பாடல் அகப்பேய்ச் சித்தர் அகப்பேய்ச் சித்தர்
முதல் பக்கம் » பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு
இடைக்காட்டுச் சித்தர்
எழுத்தின் அளவு:
இடைக்காட்டுச் சித்தர்

பதிவு செய்த நாள்

23 நவ
2015
03:11

பாடல்-  காப்பு

ஆதி யந்தமில் லாதவ னாதியைத்
தீது றும்பவந் தீப்படு பஞ்சுபோல்
மோது றும்படி முப்பொறி யொத்துறக்
காத லாகக் கருத்திற் கருதுவோம்.

தாண்டவராயக்கோனார் கூற்று:

1. எல்லா உலகமும் எல்லா உயிர்களும்
எல்லாப் பொருள்களும் எண்ணரிய
வல்லாளன் ஆதி பரம சிவனது
சொல்லால் ஆகுமே கோனாரே!

2. வானியல் போல் வயங்கும் பிரமமே
சூனியம் என்றறிந்து ஏத்தாக்கால்
ஊனியல் ஆவிக்கு ஒருகதி இல்லையென்று
ஓர்ந்துகொள் ளுவீர்நீர் கோனாரே!

3. முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது
முத்திக்கு உறுதிகள் செய்யாக்கால்
சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும்
சேரா வாகுமே கோனாரே!

4. தொல்லைப் பிறவியின் தொந்தமுற்று அறவே
சோம்பலற் றுத்தவஞ் செய்யாக்கால்
எல்லையில் கடவுள் எய்தும் பதம்உமக்கு
இல்லையென்று எண்ணுவீர் கோனாரே!

5. ஆரண மூலத்தை அன்புட னேபர
மானந்தக் கோலத்தைப் பண்புடனே
பூரண மாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப்
போதத்தைச் சார்ந்திரும் கோனாரே!

6. காலா காலங் கடந்திடும் சோதியைக்
கற்பனை கடந்த அற்புதத்தை
நூலாற் பெரியவர் சொன்னநுண் பொருளை
நோக்கத்திற் காண்பது கோனாரே!

7. சொல்லருஞ் சகள நிட்களம் ஆனதைச்
சொல்லினாற் சொல்லாமல் கோனாரே!
அல்லும் பகலும் அகத்தில் இருத்திடில்
அந்தகன் கிட்டுமோ கோனாரே!

8. சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடுந்
தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே
நாரிஇ டப்பாகன் தாள்நெஞ்சிற் போற்றியே
நற்கதி சேர்ந்திடும் கோனாரே!

9. மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத
முப்பாழ் கிடந்ததாம் அப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை மையத்தும்
சிந்தையில் வைப்பீரே கோனாரே!

10. பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்
பற்றற்ற நின்றதைப் பற்றி அன்பாய்
நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே
நேசித்துக் கொள்ளுவீர் கோனாரே!

நாராயணக்கோனார் கூற்று

11. சீரார் சிவக்கொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப்
பாராதி வான் பொருளைப் பஞ்சஉரு ஆனஒன்றை
பேரான் விண்ணொளியைப் பேரின்ப வாரிதியை
நேராக எந்நாளும் நெஞ்சு இருத்தி வாழ்வேனே.

12. கண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப்
பெண்ணுருவப் பாதியனைப் பேசரிய முப்பொருளை
விண்ணின் அழுதை விளக்கொளியை வெங்கதிரைத்
தண்ணளியை உள்ளில் வைத்து சாரூபஞ் சாருவனே.

13. மனமென்னும் மாடு அடங்கில் தாண்ட வக்கோனே! முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக் கோனே!

14. சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே! யாவுஞ்
சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே!

15. ஆசையெனும் பகமாளின் தாண்டவக்கோனே! இந்த
அண்டமெல்லாம் கண்டறிவாய் தாண்டவக்கோனே!

16. ஓசையுள் அடங்கு முன்னம் தாண்டவக்கோனே! மூல
ஓங்காரங் கண்டறி நீ தாண்டவக்கோனே!

17. மூலப் பகுதியறத் தாண்டவக்கோனே! உள்ளம்
மூளைத்தவேர் பிடுங்கேடா தாண்டவக்கோனே!

18. சாலக் கடத்தியல்பு தாண்டவக்கோனே! மலச்
சாலென்றே தேர்ந்தறி நீ தாண்டவக்கோனே!

19. பற்றே பிறப்புண்டாக்கும் தாண்டவக்கோனே அதைப்
பற்றாது அறுத்து விடு தாண்டவக்கோனே!

20. சற்றே பிரமத்திச்சை தாண்டவக்கோனே! உன்னுள்
சலியாமல் வைக்கவேண்டும் தாண்டவக்கோனே

21. அவித்தவித்து முளையாதே தாண்டவக்கோனே! பத்தி
அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே!

22. செவிதனிற் கேளாத மறை தாண்டவக்கோனே குரு
செப்பில் வெளியாம் அல்லவோ தாண்டவக்கோனே!

23. மாடும் மனைகளும் மக்களுஞ் சுற்றமும் வான்பொருளும்
வீடும் மணிகளும் வெண்பொன்னுஞ் செம்பொன்னும் வெண் கலமும்
காடுங் கரைகளும் கல்லாம் பணியுங் கரிபரியும்
தேடும்பலபண்டம் நில்லா: சிவகதி சேர்மின்களே!

24.போகம்போம் போக்கியம்போம் போசனம் போம் புன்மை போம்:
மோகம்போம் மூர்க்கம்போம் மோசம்போம் தாகம்போம்:
வேத முதல் ஆகமங்கள் மேலானதென்று பல்கால்
ஓது பிரமத்து உற்றக் கால்.

தாண்டவராயக்கோனார் கூற்று

தாந்தி மித்திமி தந்தக்கோ னாரே!
தீந்திமி மித்திமி திந்தக்கோ னாரே!

ஆநந்தக் கோனாரே! அருள்
ஆநந்தக் கோனாரே!

25. ஆயி ரத்தெட்டு வட்டமுங் கண்டேன்
அந்த வட்டத்துள்ளே நின்றதுங் கண்டேன்:
மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்:
மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன்.  (தாந்)

26. அந்தக் கரணமெ னச்சொன்னால் ஆட்டையும்
அஞ்ஞானம் என்னும் அடர்ந்தவன் காட்டையும்
சந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன்
சாவாது இருந்திடக் கோட்டையுங் கட்டினேன்   (தாந்)

27. மெய்வாய்கண் மூக்குச் செவியெனும் ஐந்தாட்டை
வீறுஞ் சுவையொளி யூறோசை யாங்காட்டை
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்
ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே (தாந்)

28. பற்றிரண் டும் அறப் பண்புற்றேன் நண்புற்றேன்
பாலையும் உட்கொண்டேன் மேலையாங் கட்கண்டேன்
சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன்
சிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ் சார்ந்திட்டேன் (தாந்)

29. அண்ணாக்கை யூடே யடைத்தே அழுதுண்ணேன்
அந்தரத் தரத்தை அப்பொழு தேயெண்ணேன்
விண்ணாளும் மொழியை மேவிப் பூசை பண்ணேன்
மெய்ஞ்ஞானம் ஒன்று அன்றி வேறேஒன்றைநண்ணேன் (தாந்)

30. மண்ணாகி பூதங்கள் ஐந்தையுங் கண்டேனே
மாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே
விண்ணாளி மொழியை மெய்யினுள் கொண்டேனே
மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே (தாந்)

31. வாக்காதி ஐந்தையும் வாகாய்த் தெரிந்தேனே
மாயைசம் பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே
நோக்கரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே
நுவலுமற்று ஐந்தியோக நோக்கம் பரிந்தேனே (தாந்)

32. ஆறாதாரத்தெய் வங்களை நாடு
அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு:
கூறான வட்டஆ னந்தத்திற் கூடு
கோசமைந் துங்கண்டு குன்றேறி ஆடு  (தாந்)

நாராயணக் கோனார் கூற்று

33. ஆதி பகவனையே     பசுவே!
அன்பாய் நினைப்பாயேல்
சோதி பரகதிதான்        பசுவே!
சொந்தமது ஆகாதோ?

34. எங்கும் நிறைபொருளைப்     பசுவே!
எண்ணிப் பணிவாயேல்      பசுவே!
தங்கும் பரகதியில்
சந்ததஞ் சாருவையே.

35. அல்லும் பகலும்நிதம்      பசுவே!
ஆதி பதந்தேடில்
புல்லும் மோட்சநிலை
பூரணங் காண்பாயே.      பசுவே!

36. ஒன்றைப் பிடித்தோர்க்கே     பசுவே!
உண்மை வசப்படுமே:
நின்ற நிலைதனிலே      பசுவே!
நேர்மை அறிவாயே.

37. எல்லாம் இருந்தாலும்      பசுவே!
ஈசர் அருள்இலையேல்
இல்லாத தன்மையென்றே     பசுவே!
எண்ணிப் பணிவாயே.

38. தேவன் உதவியின்றிப்    பசுவே!
தேர்ந்திடில் வேறொன்றில்லை
ஆவிக்கும் ஆவியதாம்     பசுவே!
அத்தன் திருவடியே.

39. தாயினும் அன்பன் அன்றோ    பசுவே!
சத்திக்குள் ளானவன் தான்?
நேயம் உடையவர்பால்    பசுவே!
நீங்காது இருப்பானே.

40. முத்திக்கு வித்தானோன்    பசுவே!
மூலப் பொருளானோன்
சத்திக்கு உறவானோன்    பசுவே!
தன்னைத் துதிப்பாயே.

41. ஐயன் திருப்பாதம்    பசுவே!
அன்புற்று நீ பணிந்தால்
வெய்ய வினைகளெல்லாம்    பசுவே!
விட்டோடுங் கண்டாயே.

42. சந்திர சேகரன் தாள்    பசுவே!
தாழ்ந்து பணிவாயேல்
இந்திரன் மான்முதலோர்    பசுவே!
ஏவல் புரிவாரே.

43. கட்புலன் காண ஒண்ணாப்    பசுவே!
கர்த்தன அடியிணையை
உட்புலன் கொண்டேத்திப்    பசுவே!
உன்னதம் எய்வாயே.

44. சுட்டியுங் காண ஒண்ணாப்    பசுவே!
சூனிய மானவத்தை
ஒட்டிப் பிடிப்பாயேல்    பசுவே!
உன்னை நிகர்ப்பவர் யார்?

45. தன்மனந் தன்னாலே    பசுவே!
தாணுவைச் சாராதார்
வன்மரம் ஒப்பாக பகவே    பசுவே!
வையத்து உறைவாரே.

46. சொல்லென்னும் நற்பொருளாம் பசுவே!
சோதியைப் போற்றாக்கால்
இல்லென்று முத்திநிலை     பசுவே!
எப்பொ ருளுஞ்சொலுமே!

பலரொடு கிளத்தல்

47. கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை
விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே.

48. மனம்வாக்குக் காயம்எனும் வாய்த்தபொறிக்கு எட்டாத
தினகரனை நெஞ்சமதில் சேவித்துப் போற்றீரே.

49. காலமூன் றுங்கடந்த கதிரொளியை உள்ளத்தால்
சாலமின்றிப் பற்றிச் சலிப்பறவே போற்றீரே

50. பாலிற் சுவைபோலும் பழத்தில் மதுப்போலும்
நூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே.

51. மூவர் முதலை முக்கனியைச் சர்க்கரையைத்
தேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே.

52. தூய மறைப்பொருளைச் சுகவா ரிதிஅமிர்தை
நேயமுடன் அருள்நிலை பெறவே போற்றீரே.

53. சராசரத் தைத்தந்த தனிவான மூலம் என்னும்
பராபரத் தைப்பற்றிப் பவமறவே போற்றீரே.

54. மண்ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளைக்
கண்ணாரக் காண்க கருத்திசைந்து போற்றீரே.

55. பொய்ப் பொருளை விட்டுப் புலமறிய ஒண்ணாத
மெய்பொருளை நாளும் விருப்புற்றுப் போற்றீரே.

56. எள்ளில் தைலம்போல எங்கும் நிறைபொருளை
உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே.

நெஞ்சொடு கிளத்தல்

57. பூமியெல்லாம் ஓர்குடைக்கீழ்ப் பொருந்தஅர சாளுதற்குக்
காமியம் வைத்தால் உனக்குக் கதியுளதோ கன்மனமே!

58. பெண்ணாசை யைக்கொண்டு பேணித் திரிந்தக்கால்
விண்ணாசை வைக்க விதியிலையே கன்மனமே!

59. மேயும் பொறிகடமை மேலிடவொட்டார்க்குவினை
தேயும்என்றே நல்வழியில் செல்லுநீ கன் மனமே!

60. பொன்னிச்சை கொண்டு பூமிமுற்றும் திரிந்தால்
மன்னிச்சை நோக்கம் வாய்க்குமோ கன்மனமே!

61. பொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கங் கொள்ளாமல்
மெய்யான ஞானக்கல்வி விரும்புவாய் கன் மனமே!

62. பேய்க்குரங்கு போலப் பேருலகில் இச்சைவைத்து
நாய்நரிகள் போல்அலைந்தால் நன்மையுண்டோ கன்மனமே!

63. இரும்பைஇழுக் குங்காந்தத்து இயற்கைபோல் பல் பொருளை
விரும்பினதால் அவை நிலையோ? விளம்புவாய் கன்மனமே!

64. கற்பநிலை யால் அலவோ கற்பகா லங்கடத்தல்?
சொற்பநிலை மற்றநிலை சூட்சங்காண் கன்மனமே!

65. தேகம் இழப்பதற்குச் செபஞ்செய்தென் தவஞ்செய்தென்?
யோகமட்டுஞ் செய்தால்என்? யோசிப்பாய் கன்மனமே!

66. சாகாது இருப்பதற்குத் தான் கற்ற கல்வியன்றோ
வாகான மெய்க்கல்வி? வகுத்தறிநீ கன்மனமே!

அறிவொடு கிளத்தல்

67. எல்லாப் பொருள்களையும் எண்ணப் படிபடைத்த
வல்லாளன் தன்னை வகுத்தறிநீ புல்லறிவே!

68. கட்புலனுக்கு எவ்வளவுங் காணாது இருந்தெங்கும்
உட்புலனாய் நின்றஒன்றை உய்த்தறிநீ புல்லறிவே!

69.விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும்
செழித்திலங்கும் ஆன் மாவைத் தேர்ந்தறிநீ புல்லறிவே!

70. மெய்யில் ஒரு மெய்யாகி மேலாகிக் காலாகிப்
பொய்யில் ஒரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே!

71. ஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே
கூத்துப் புரிகின்ற கோள்அறிவாய் புல்லறிவே!

72. இருட்டறைக்கு நல்விளக்காய் இருக்கும்உன்றன் வல்லமையை
அருள்துறையில் நிறுத்திவிளக் காகு நீ புல்லறிவே!

73. நல்வழியிற் சென்று நம்பதவி எய்தாமல்
கொல்வழியிற் சென்று குறுகுவதேன் புல்லறிவே!

74. கைவிளக்குக் கொண்டு கடலில்வீழ் வார்போல
மெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே!

75. வாசிக்கு மேலான வான்கதியுன் னுள்ளிருக்க
யோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே!

76. அன்னையைப் போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
முன்னவனைக் கண்டு முத்தியடை புல்லறிவே!

சித்தத்தொடு கிளத்தல்

77. அஞ்ஞானம் போயிற்றுஎன்று தும்பீபற-பர
மானந்தங் கண்டோம் என்று தும்பீபற!
மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபற மலை
மேலேறிக் கொண்டோம் என்று தும்பீபற!

78. அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற-நிறை
ஆணவங்கள் அற்றோம்என்றே தும்பீபற!
தொல்லைவினை நீங்கிற்று என்றே தும்பீபற! பரஞ்
சோதியைக் கண்டோம் எனத் தும்பீபற!

79. ஐம்பொறி அடங்கினவே தும்பீபற-நிறை
அருவே பொருளாம்எனத் தும்பீபற
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற-ஒரு
தெய்வீகங் கண்டோம்என்றே தும்பீபற!

80. மூவாசை விட்டோம் எ ன்றே தும்பீபற-பர
முத்திநிலை சித்தியென்றே தும்பீபற!
தேவாசை வைத்தோம்என்று தும்பீபற இந்தச்
செகத்தை ஒழித்தோம் என்று தும்பீபற

81. பாழ்வெளியைநோக்கியே தும்பீபற மாயைப்
பற்றற்றோம் என்றேநீ தும்பீபற!
வாழ்விடம் என்றெய்தோம் தும்பீபற நிறை
வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற!

82. எப்பொருளுங் கனவென்றே தும்பீபற-உல
கெல்லாம் அழியும்என்றே தும்பீபற!
அப்பிலெழுத் துடல்என்றே தும்பீபற என்றும்
அழிவில்லாதது ஆதியென்று தும்பீபற!

குயிலொடு கிளத்தல்

83. கரணங்கள் ஒருநான்கும் அடங்கினவே-கெட்ட
காமமுதல் ஓராறும் ஒடுங்கினவே;
சரணங்கள் ஒருநான்குங் கண்டனம்என்றே-நிறை
சந்தோஷ மாகவே கூவுகுயிலே!

84. உலகம் ஒக்காளமாம் என்று ஓதுகுயிலே-எங்கள்
உத்தமனைக் காண்பரிதென்று ஓது குயிலே!
பலமதம் பொய்மையே என்று ஓதுகுயிலே எழு
பவம் அகன்றிட்டோம் நாம் என்று ஓதுகுயிலே!

85. சாதனங்கள் செய்தவர்கள் சாவார்குயிலே-எல்லாத்
தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேவார் குயிலே!
மாதவங்கள் போலும்பலன் வாயாகுயிலே-மூல
மந்திரங்கள் தான் மகிமை வாய்க்கும் குயிலே!

86. எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லைகுயிலே-மனம்
ஏகாம னிற்கிற்கதி எய்துங்குயிலே!
நட்டணையைச் சார்ந்தறிந்து கொள்ளுகுயிலே-ஆதி
நாயகனை நினைவில் வைத்து ஓதுகுயிலே!

மயிலொடு கிளத்தல்

87. ஆடுமயிலே நடமாடுமயிலே! எங்கள்
ஆதியணி சேடனைக் கண்டு ஆடுமயிலே!
கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே என்றுங்
குறையாமல் மோன நெறி கொள்ளுமயிலே!

88. இல்லறமே அல்லலாம் என்று ஆடுமயிலே-பத்தி
இல்லவர்க்கு முத்திசித்தி இல்லைமயிலே!
நல்லறமே துறவறங் காணுமயிலே-சுத்த
நாதாந்த வெட்டவெளி நாடுமயிலே!

89. காற்றூணைப் போல்மனத்தைக் காட்டுமயிலே! வரும்
காலனையும் தூரத்தில் ஓட்டுமயிலே!
பாற்றூடுருவவே பாயுமயிலே-அகப்
பற்றுச் சற்றும் இல்லாமற் பண்ணுமயிலே!

அன்னத்தொடு கிளத்தல்

90. சிறுதவளை தான் கலக்கிற் சித்திரத்தின் நிழல் மறையும்
மறுவாயைத் தான் கலக்கின் மதிமயங்கும் மடவனமே!

91. காற்றின் மரமுறியும் காட்சியைப்போல் நல்லறிவு
தூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்போம் மடவனமே!

92. அக்கினியாற் பஞ்சுபொதி அழிந்திட்ட வாறேபோல்
பக்குவநல் அறிவாலே பாவம்போம் மடவனமே!

93. குளவிபுழு வைக்கொணர்ந்து கூட்டில் உருப்படுத்தல்போல்
வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவனமே

94. அப்புடனே அப்புச் சேர்ந் தளவுசரி யானதுபோல்
ஒப்புறவே பிரமமுடன் ஒன்றி நில்லு மடவனமே!

95. காய்ந்த இரும்புநிறங் காட்டுதல்போல் ஆத்துமத்தை
வாய்ந்திலங்கச் செய்து வளம்பெறுநீ மடவனமே!

புல்லாங்குழலூதல்

96. தொல்லைப் பிறவி தொலைக்கார்க்கு முத்திதான்
இல்லை என்று ஊதுகுழல்கோனே!
இல்லையென்று ஊதுகுழல்.

97. இந்திர போகங்கள் எய்தினுந் தொல்லை என்று
அந்தமாய் ஊதுகுழல்கோனே!
அந்தமாய் ஊது குழல்.

98. மோன நிலையினில் முத்தி உண்டாம் என்றே
கானமாய் ஊதுகுழல் கோனே!
கானமாய் ஊது குழல்.

99. நாய்போற் பொறிகளை நாநாவி தம்விட்டோர்
பேயரென்று ஊதுகுழல்கோனே
பேயரென்று ஊதுகுழல்.

100. ஓடித் திரிவோர்க்கு உணர்வுகிட் டும்படி
சாடியே ஊதுகுழல் கோனே!
சாடியே ஊதுகுழல்.

101. ஆட்டுக் கூட்டங்களை அண்டும் புலிகளை
ஓட்டியே ஊதுகுழல்-கோனே
ஓட்டியே ஊது குழல்.

102. மட்டிக் குணமுள்ள மாரீச நாய்களைச்
கட்டிவைத்து ஊதுகுழல்-கோனே!
கட்டிவைத்து ஊதுகுழல்.

103. கட்டாத நாயெல்லாங் காவலுக் கெப்போதும்
கிட்டாவென்று ஊதுகுழல்-கோனே
கிட்டாவென்று ஊதுகுழல்.

104. பெட்டியிற் பாம்பெனப் பேய்மனம் அடங்க
ஓட்டியே ஊதுகுழல்-கோனே!
ஓட்டியே ஊதுகுழல்.

105. எனதென்றும் யானென்றும்
இல்லா திருக்கவே
தனதாக ஊதுகுழல் கோனே!
தனதாக ஊதுகுழல்.

106. அற்ற விடமொன்றே அற்றதோடு உற்றதைக்
கற்றதென்று ஊதுகுழல் கோனே!
கற்றதென்று ஊதுகுழல்.

பால் கறத்தல்

107. சாவாது இருந்திடப் பால்கற- சிரம்
தன்னில் இருந்திடும் பால்கற;
வேவாது இருந்திடப் பால்கற-வெறு
வெட்ட வெளிக்குள்ளே பால்கற:

108. தோயாது இருந்திடும் பால்கற - முனைத்
தொல்லை வினையறப் பால்கற;
வாயால் உமிழ்ந்திடும் பால்கற-வெறு
வயிறார உண்டிடப் பால்கற.

109. நாறா திருந்திடும் பால்கற-நெடு
நாளும் இருந்திடப் பால்கற.
மாறாது ஒழுகிடும் பால்கற-தலை
மண்டையில் வளரும் பால்கற.

110. உலகம் வெறுத்திடும் பால்கற-மிக
ஒக்காளம் ஆகிய பால்கற;
கலசத்தினுள் விழப் பால்கற நிறை
கண்டத்தின் உள்விழப் பால்கற.

111. ஏப்பம் விடாமலே பால்கற-வரும்
ஏமன் விலக்கவே பால்கற;
தீப்பொறி ஓய்ந்திடப் பால்கற-பர
சிவத்துடன் சாரவே பால்கற.

112. அண்ணாவின் மேல்வரும் பால்கறபேர்
அண்டத்தில் ஊறிடும் பால்கற;
விண்ணாட்டில் இல்லாத பால்கற-தொல்லை
வேதனை கெடவே பால்கற.

கிடை கட்டுதல்

113. இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே!-உன்
அடங்குமன மாடொன்றை அடக்கிவிடு கோனே!

114. சாற்றரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார் நாளும்
தவமவமாக் கழிப்பவரே சலனமதில் வருவார்.

115. அகங்கார மாடுகள் மூன்று அகற்றிவிடு கோனே-நாளும்
அவத்தையெனும் மாடதை நீ அடக்கிவிடு கோனே!

116. ஒரு மலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக் கட்டு கோனே! உடன்
உறையுமிரு மலந்தனையும் ஒட்டிக் கட்டு கோனே!

117. மும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக்கட்டுக் கோனே - மிக
முக்கால நேர்மையெல்லாம் முன்பறிவாய் கோனே!

118. இந்திரியத் திரயங்களை இறுக்கிவிடு கோனே! என்றும்
இல்லை என்றே மரணங்குழல் எடுத்து ஊதுகோனே!

119. உபாதியெனும் மூன்றாட்டை ஓட்டுவிடு கோனே! உனக்
குள்ளிருக்குங் கள்ளம் எல்லாம் ஓடிப் போங் கோனே!

120. முக்காய மாடுகளை முன்னங்கட்டுக் கோனே! இனி
மோசமில்லை நாசமில்லை முத்தி உண்டாங் கோனே!

121. கன்ம பல மாடுகளைக் கடைக் கட்டுக் கோனே! மற்றக்
கன்மத்திர யப்பசுவைக் கடையிற்கட்டுக் கோனே!

122. காரணக்கோ மூன்றனையுங் கால்பிணிப்பாய் கோனே! நல்ல
கைவசமாம் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே!

123. பிரமாந்த ரத்திற் பேரொளி காண் எங்கள் கோனே! வாய்
பேசாது இருந்து பெருநிட்டை சார் எங்கள் கோனே!

124. சிரமதிற் கமலச் சேவை தெரிந்தெங்கள் கோனே! முத்தி
சித்திக்குந் தந்திரம் சித்தத் தறியெங்கள் கோனே!

125. விண்நாடி வத்துவை மெய்யறி விற்காணுங் கோனே என்றும்
மெய்யே மெய்யில் கொண்டு மெய்யறிவில் செல்லுங்கோனே!

126. கண்ணாடியின் உள்ளே கண்டு பார்த்துக் கொள்ளு கோனே! ஞானக்
கண்ணன்றிக் கண்ணாடி காண ஒண்ணாதெங்கள் கோனே!

127. சூனிய மானதைச் சுட்டுவார் எங்குண்டு கோனே!-புத்தி
சூக்குமமே அதைச் சுட்டுமென்று எண்ணங்கொள் கோனே!

128. நித்தியமானது நேர்படி லேநிலை கோனே!-என்றும்
நிற்குமென்றே கண்டு நிச்சயங் காண் எங்கள் கோனே!

129. சத்தியும் பரமுந் தன்னுட் கலந்தே கோனே!-நிட்டை
சாதிக்கில் இரண்டுந் தன்னுள்ளே காணலாங் கோனே!

130. மூகைபோல் இருந்து மோனத்தைச் சாதியெங்கோனே-பர
மூல நிலைகண்டு முட்டுப் பிறப்பறு கோனே!

 
மேலும் பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு »
temple news
நினைமின் மனனே! நினைமின் மனனேசிவபெரு மானைச் செம்பொனம் பலவனைநினைமின் மனனே! நினைமின் மனனே!அலகைத் தேரின் ... மேலும்
 
5. திருமால் பயந்த திசைமுகன் அமைத்துவரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்துமலைமகள் கோமான் மலர் அடி ... மேலும்
 

திரு ஏகம்ப மாலை நவம்பர் 06,2015

(திருக்கச்சி ஏகாம்பரநாதரைத் துதித்துப் பாடிய மாலை)1. அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் ... மேலும்
 

திருத் தில்லை நவம்பர் 06,2015

1. காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் ... மேலும்
 
temple news
1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar