41. கேட்கையிலே மதியினிட மமிர்தஞ் சிந்துங் கெடியான துவாசமுர் தங் கடந்து தோன்றும் வாழ்க்கையிலே யாசையறும் நினைவும் போகும் வாரிதிபோ லண்ணாக்கி லமிர்த மோடும் தாக்கையிலே ரவிகோடி காந்தி காணும் சச்சிதா னந்தவொளி தானே தோன்றும் முட்கையிலே மேலமிர்த லகரி மீறும் மூன்றுகமும் கணமாகு மூட்டிப் பாரே.
42. மூட்டையிலே யுலககிரி கொண்டு மூட்டு முதிர்ந்த பின்பு விண்ணுள் கிரி வந்து காக்கும் கூட்டையிலே மகாரத்தை யறிந்து கூட்டுங் கும்மென்ற நாதத்தில் கூடியேறும் மாட்டையிலே யறிவோடு மனத்தை மாட்டும் மறுகாலும் நாதத்தைக் கூர்ந்து கேளே ஓட்டையிலே யொருவழியா யோடிற் றானால் உத்தமனே யச்சின்ன முத்தியையா!
72. அறிந்து கொள்ளு மதியளவு பிண்டத் துள்ளே அப்பனே யாறுதலம் அறிந்து காணும்: அறிந்து கொள்ளு விந்து வின் மேல் பாரத்தின் மட்டும் அறிவுக்குள் சக்ரந்தா னப்பா கேளு: அறிந்து கொள்ளு பரத்தின் மேல் போத மட்டும் ஆதார நிர்மலத்தின் வரைகளாறும் அறிந்துகொள்ளு மேலாறுங் காணப் போகா ஆச்சரியம் கொங்கணரை விட்டுக் காணே.
73. காணப்பா தசதீட்சை கடந்த பின்பு கைவிட்ட சூத்திரத்தை யாசான் காட்ட ஊணப்பா அது மவுனம் மற்ற தெல்லாம் உரவார்த்தை அகாரமுத லுகாரமென்பார் வீணப்பா சிரமேல் வேதாந்தக் காட்சி விரைந்ததிலே யும்மென்றே ஊணென் பார்கள் பூணப்பா வும்மென்ற நாத மாமோ போக்கறியான் சொல்லுகிற ஞானந்தானே?
74. தானென்ற விடங்காட்டி நாதங் காட்டிச் சாற்றுகிற மவுனத்தின் சார்பு காட்டி வானென்ற வெளியோடறு தலமுங் காட்டி வாய்மூடி னாதிக்க வகையும் காட்டி ஊனென்ற வுடம்பைவிட்டுக் கேசரியுங் காட்டி ஊமைநின்ற விடங்காட்டி யுரைக்கப் பண்ணிக் கோனென்ற குருவெனும்வாய் பேசலாமோ குறும்பரே குருசொல்ல விரண்டுமாமே.
75. ஆமிந்த வுலகத்தோர் ஞான வீதி அறிந்தேறிக் கூடுவதும் அரிது மெத்த ஓமிந்தக் குண்டலியைத் தொட்ட ரற்ற ஊதுவது கடினமெத்த யோக மார்க்கம் வாமிந்த வாமத்தே நின்று கொண்டு மகத்தான பானமுண்ண வாய்க்கும் ரண்டும் சோமிந்தச் சடைவைத்துச் சின்மயம் காட்டும் சொற்பெரிய பூரணந்தான் சொன்ன வாறே.
77. பலியெடுத்த குருவினிட வாம பாகம் பகுந்துநின்ற என் தாயின் பரிசு கேளு: பொலியெடுத்த அட்டமா சித்தி நிற்கப் புகழ்பெரிய ரத்னவகை யாரம் பூண்டு நலிவில்லா யோகப்பி யாசஞ் செய்து நண்ணுமிரு பதச்சேவை காண்ப தற்கே ஒலியெடுத்த நவகோடி தேவர் சித்தர் ஒன்றாகக் கணநாதா போற்று வாரே.
91. ஆடையிலே விண்ணுக்குட் சித்தர் கோடி அந்தந்த மலைகளினால் தாக்க வோடி ஊடையிலே யண்டத்தில் முனிவர் கோடி உற்றுநின்ற பதமளவும் ரிடிகள் கோடி தேடையிலே சதாநித்தம் வேதம் பாரு சேர்ந்துநின்ற வோசையிலே தெளியச் சொல்வார் நாடையிலே யெந்நேரம் மவுனம் நாடு நரகமாம் வாசனைதான் நன்றாய்க் கேளு:
102. ஆகவப்பா விருப்பத்தோ டஞ்சு நூறும் அறைந்திட்டேன் வாதத்தை யறிந்து கொள்ளு: ஆகவப்பா இதற்குள்ளே ஞானம் நூறு அப்புறத்தே சொன்னதொரு ஞானம் நூறு ஆகவப்பா இருபத்தோ டெழுநூ றுந்தான் அறிந்த மட்டும் சொல்லி வந்தேன் வல்லோ ருண்டோ ஆகவப்பா பார்த்தேயிக பரமுஞ் சித்தி ஆதியென்ற குருவருளால் சொன்ன முற்றே.
பின் ஞானம் நூறு
1. கைலாயப் பரம்பரத்தி லென்னை யாண்ட கடவுளெனுந் தெட்சணா மூர்த்தி பாதங் கைலாயத் தெனையீன்ற ஆயி பாதங் கருணையுடன் போற்றி நித்தம் ஞானம் சொல்வேன்: கைலாய நிர்க்குணநிர் மலமே தேவர் காட்டுகின்றீர் கேசரிசின் மயமாய்க் கையில் கைலாய பரம்பரையாய் வந்த பேர்க்குக் கடைப்பிள்ளை ஞானத்தைப் பாடுவேனே;