43. பாரப்பா ஆகாயஞ் செல்லும் போது பாலகனே சக்கரந்தான் சுற்றி யாட ஆரப்பா சக்கரத்தைப் பிசகொட்ட டாமல் அதன்மேலே யேறியுந்தா னப்பாற் சென்றேன்: நேரப்பா நெடுந்தூரம் போகும் போது நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்; வீரப்பா அக்கினிபோல் படர்ந்து நிற்கும் வெளியொன்றுந்த தெரியாம லிருக்குந் தானே.
44. இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம் என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா! உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்; ஓகோகோ அவள் முகத்தைப் பார்க்கும் போது பெருக்கமுடன் முன்பார்த்தாற் புருட ரூபம் புத்திரனே பின்பார்த்தாற் பெண்போல் ரூபம் மருக்கமுடன் யான்றானுங் கம்பத் தூடே வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே.
45. பாரப்பா இப்படியே அனந்த காலம் பராபரத்தி னூடே தா னிருந்து வாழ்ந்தேன்; ஆரப்பா பிரமமுந்தான் மனமிரங்கி அகண்டமதைப் படைப்பதற்கே அருளும்போது வீரப்பா கம்பத்தி லிருந்த பெண்ணும் விமலரென்றும் உமையென்றும் மிகவே தோன்றிச் சீரப்பா சக்கரத்தி லிருந்து கொண்டு திரு மலைத் தானழைக்கத் தீர்க்கம் பாரே.
46. பாரப்பா திருமாலுங் கமலந் தன்னில் பல்லாயிரங் கோடி அண்ட வுயிர்க ளெல்லாம் நேரப்பா அழைத்துமுக் குணத்தைக் காட்டி நிலையான சமுத்திரங்கள் பூமி தானும் சேரப்பா ரவியோடு திங்கள் தானுஞ் சிறந்தெழுந்த மலைகாடு சீவ செந்து விரப்பா நவக்கிரகம் நட்சத் ரங்கள் வெற்றியுடன் நால்வேதம் வகுத்த வாறே.
59. பாரென்று சொல்லியமெய்ஞ் ஞான மூர்த்தி பரத்தினுடை அடிமுடியும் பகுந்து சொல்லும் சீரென்று சொப்பனங்க ளதிக மாகத் திடப்படவே காணுமிடந் தீர்க்கஞ் சொல்லும் காரென்று மணம்பிறந்த இடந்தான் சொல்லும் கதிர்மதியுஞ் சுற்றிவரு மார்க்கஞ் சொல்லும் வீரென்றே உயிர் பிறந்த இடந்தான் சொல்லும் வெற்றிபெற இந்தவகை விளம்பு வாயே.
60. வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு: மகத்தான பிரமத்தின் பாதந் தன்னில் ஓயாமல் முன்சொன்ன நரம்பு பின்னி உத்தமனே ரவிமதியுஞ் சுற்றி யாடும்: மாயாமல் வாசியுந்தன் நடுவே நின்று மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனந்தான் சென்றால் காயான சுழுத்தியென் றிதற்கு நாமம் கண்டுபார் கண்டுகொள்ளாப் போதந் தானே.
61. தானென்ற பலரூப மதிகங் காணுந் தன்னுடைய தேவதைபோற் பின்னும் காட்டும் ஊனென்ற பெண்ணைப்போ லுன்னைக் கூடி உத்தமனே சையோகஞ் செய்தாற் போலே தேனென்று மயக்கி வைக்குஞ் சுழுத்தி யாலே தித்திப்புப் போலேதான் ருசியைக் காட்டும் கோனென்ற குருவருளைப் பணிந்து கொண்டு குறிப்பறிந்து பூரணத்தின் நிலையைப் பாரே.
66. காணப்பா சாதிகுலம் எங்கட் கில்லை; கருத்துடனே என்குலஞ்சுக் குலந்தான் மைந்தா! தோணப்பா தோணாமற் சாதி பேதஞ் சொல்லுவான் சுருக்கமாக சுருண்டு போவான்; வீணப்பா பிரமத்தில் ஆதி காலம் வீரமுடன் பிறந்ததடா உயிர்க ளெல்லாம்: நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே: நன்றாக வுதித்தவிடம் நாடி னேனே.