Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நடேசர் கும்மி சிவானந்த போதம்
முதல் பக்கம் » பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு
சங்கரனார் திருவுளம் மகிழ்ந்து உமாமகேஸ்வரிக்கு அருளிச் செய்த ஞானசர நூல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2015
04:12

ஞானசர நூல்

(மூலமும் உரையும்)

காப்பு)        (நேரிசை வெண்பா

வாழ்த்துவாம் உள்ளம் வருவிப்பாம் நெஞ்ச முன் பிற்
சூழ்த்துவாம் மேன்மேல் துதி செய்வாம் தாழ்த்த
பரநூலை முற்றும்பா லித்தருள் கூட்டுஞ்
சரநூலை யோதமுன்னோன் தாள்.

நாமகள் துதி:

உமைமாதுக் கீசன் உரைத்தசர நூலின்
அமையாப் பொருளும் அமையும் எமையாள்
புவிமடந்தை பூமடந்தை போதமெய்ஞ் ஞானக்
கவிமடந்தை யிக்கலைகோர் காப்பு.

அவையடக்கம்:
செய்ய மனந்துணிந்து சீர்முன்னோர் சொற்சர நூல்
ஐயமற வோத அருள்புரியைங்-கையரென்றன்
முன்னிற்பா ரென்று மொழிந்தேன்போற் கற்றுணந்தோர்
மன்னிப்பா ரென்று மனு.

நூற்பயன்)        (எண்சீர் விருத்தம்

சந்திரபா னிலக்கணமுங் கோளும் நாளும்
தயங்கியபக்கங் கரணம் யோகம் வாரம்
வந்துசொல்லுஞ் சோதிடத்தை அறியா தார்கள்
மனநினைவால் அறியும்வகை யுளதோ? என்ன

இந்த உடல் உயிர் நிலையை அறிய தாருக்
கியாமறிய இயம்பும்வகை யாதோ என்னிற்
பைந்தோடியே யாம்சொல்லுஞ் சரநூல் தன்னைப்
பரிந்துநீ பார் என்று பரமன் சொல்வான்.

(இ-ள்) சந்திரன், சூரியன் கோள் நாள், பக்ஷம், கரணம் யோகம் வாரம், இவை முதலாகச் சொல்லப்பட்ட சோதிட இலக்கணத்தை அறியாதவர்கள் தத்தம் மன நினைவினாலே அறிந்துகொள்ளும் மார்க்கம் உள்ளதோ? உண்டாயின்
அருளிச் செய்ய வேண்டும் என்று உமையவள் கேட்க, சங்கரனார். அழகிய வளையல்கள் பூண்ட கைகளையுடைய பெண்ணே யாஞ் சொல்லுஞ் சரநூலாகிய இந்த சாஸ்திரத்தைப் பரிவுடன் பார்ப்பாயாக: பார்க்கில் நன்கு உணர்வை, என்று சொல்லுகிறார்.

சொல்லாரும் நெடுங்கயிற்றின் வருண மான
சுரத்தினாற் றுவக் கெனுமாச் சிரமந் தன்னில்
கல்லாரு மூக்கணாங் கயிறு கோத்து
நலந்தீங்காய் வருகின்ற நஞ்சுட் கொண்டு
பொல்லாத காலப்பாம் புண்டு மிழ்ந்து
பூதலத்திற் பிறந்திறந்து போவ ரேனும்
எல்லாரும் யாஞ்சொல்லுஞ் சரநூல் தன்னை
இகழாதார் சுரர் மூகர் இகழ்வோர் தாமே.

(இ-ள்) சொல்லப்பட்ட நாற்புரி கூடிய நீண்ட கயிற்றைப் போலப் பரம்பரையாய் விருத்தியாகி வருகின்ற பிரம க்ஷத்திரிய, வைசிய, சூத்திராதி வருணாச்சிரமம் பெற்ற இந்த மானிட தேகத்தில் இச்சரம் நாசிகையின் வழியாய் நின்று எருதுக்கு ஒரு மூக்கணாங்கயிறிருந்து ஆட்டுவிப்பது போல நன்மை தீமையென்னும் நஞ்சினையூட்டுவிக்கும். அப்படிப்பட்ட நஞ்சினை ஊட்டக் கொண்டு கொடிய காலனென்னும் பாம்பானது உண்ணவும் உமிழவுந் தாமுட்பட்டு இருவினைக்கிசைந்தவராய்ப் பிறந்தும் இறந்தும் போவார்கள் ஆயினும் நான் சொல்லி வருஞ் சர நூலை இகழாமல் குரு முகாந்திரத்தில் அறிந்து அனுபவித்து, அந்நெறியில் நிற்பவர் யாவரேனும், ஒருங்கே தேவராவர். அப்படி அறியமாட்டாதவர்கள் ஊமைகளுக்குச்  சரியாவார்கள்.

சரம் பார்க்க ஆசன விதி:

மூங்கிற பாய் மிடி: கல்லு நோய், மண் துக்கம்:
முரிபலகை நன்மையிலை: முடைந்த புல்லு
நீங்கிவிடுங் கீர்த்தி தாழை மனந டுக்கம்!
நிகரில்கலைத் தோல்ஞானம் நிறைபு லித்தோல்
ஓங்கியசெல்வம்; வீடு முன்கு சைப்புல்
ஒளிர் தூசு நன்மை உயர் படந்தா னென்று
தூங்கியதூக் கம்போக்கும் நன்மை யாகத்
துலங்கியவா தனத்திருத்து தோகை! சொல்வாம்:

(இ-ள்) மயில் போன்றவளே, மூங்கில் தடுக்கு ஆசனம் வறுமை, கல் வியாதி, மண் (ஆதனமில்லாமல் வெறுமணலில் உட்கார்ந்து கொள்ளுதல்) துக்கம்; உடைந்த அல்லது அறுபட்ட பலகை மணை நன்மையில்லை; கோரைப்பாய் முதலிய புற்பாய்கள், கீர்த்தி நாசம் பச்சிலைத்தழை மன நடுக்கம் மான்தோல் ஞானம், புலித்தோல்  செல்வம் தர்ப்பாசனம் மோக்ஷம் வெள்ளை வஸ்திரம் தீமையில்லை சித்திராசனம் அல்லது இரத்தின கம்பளம் , நன்மை இவைகளில் நன்மையாய் விளங்கும் ஆதனத்திலிருந்து சரம் பார்க்க வேண்டும். மற்றுஞ் சொல்லுகிறோம். கேள்.

சரம் பார்க்கும் மார்க்கம்

சொல்லியவா தனங்கள் பல அவற்றுள் நன்றில்
துய்யபங்க யாதனமாயிருந்து தோன்றும்
அல்லலறுத் தேகமன மாக்கி ஒட்டி
யாணபந்த பிராணாயா மங்கள் பண்ணி,
எல்லையிலுந் தியின் கீழா மெழுத்தைப் பற்றி
எழுபத்தீ ராயிரநா டியிலீ ரைந்து
நல்லனவாம் அதில்மூன்று நாடி யோடும்;
நலந்தரும்பே ரவ்வெழுத்தை நவ்வி! பாரே.

(இ-ள்) மான் போலுங் கண்களையுடைய பெண்ணே முன் கூறப்பட்ட ஆசனங்கள் பலவுண்டு. அவற்றுள் தீங்கில்லா ஆசனத்தில் பதுமாசன மெனப்பட்ட அங்கமாயிருந்து (பார்க்கும்போது) மனத்துக்கு மிகவும் நினைவினால் அல்லல் வரும். அப்படி வரும் அல்லல்களை நீக்கி, வேறு நினைவில்லாமல் ஒரே மனமாக்கி ஒட்டியாணபந்தம் என்று சொல்லும் பிரணாயாமஞ் செய்து அதன் மேற்பார்க்கில் எல்லையில்லாத திருவருளுக்கிடமாகிய உந்தியின் கீழிருக்குமெழுத்தைத் தொடங்கி எழுபத்தீராயிரம் நாடிகள் இந்தத் தேகத்திலுண்டானவை தெரியும். அந்நாடிகளுள் பத்துநாடிகள் நல்லனவரம் அப்பத்து நாடிகளுள் மூன்று நாடி நல்லன. அம் மூன்றின் வழியாய்த்தான் சரம் எளிதிற்காண ஓடும் இவையறியப் பெரிதாகிய நன்மையினை அளிக்கும் அவ்வெழுத்தைப் பார்.

குறிப்பு: இதன் விவரத்துக்கு மற்றும் வருவனவற்றுள் 35-ஆம் கவியைப் பார்க்க:

நவ்விவிழி யாய்! இதய கமலந் தன்னில்
நன்றாக அசுவையுயிர் நடக்கும் போதுஞ்

செவ்வையுடன் மீளும்போ திருபத் தோரா
யிரத்தறுநூ றதுசெப்பி லாருநா ளாகும்.

அவ்வியல்மூ லாதாரஞ் சுவாதிட் டானம்
மணிபுரம் அனாகதம்வி சுத்தி ஆஞ்ஞை

பவ்வமற யாஞ்சொல்லுஞ் சரநூல் தன்னைப்
பார்ப்பவரே பராபரத்தின் பயன்பார்ப் பாரே;

(இ-ள்) மான் போலும் விழிகளையுடைய பெண்ணே, இருதய கமலத்தின் வழி ஊடுருவிக் கொண்டு யாதொரு தீங்குமில்லாமல் அசுவையுயிரனப்பட்ட இச்சரம், நரசிகையின் வழியாய்ப் போகும்போது (4 அங்குலங்கள் போக மற்றவை) செவ்வையாய்த் திரும்பி வரும் போதும் (கணித்துப்பார்க்கில்) இருபத்தோராயிரத்தறுநூறு தரம் நடக்கும். அது 60 நாழிகை சேர்ந்த ஒரு நாளாகும். அப்பரிசெல்லாம் மூலாதாரம் சுவாதிட்டானம், மணிபூரகம் அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்று சொல்லப்பட்ட பரநிலையின் பரிசுதான் (அங்கிருந்து உண்டாயின எனுங்கருத்து) இதனைக் காணும் வழி யாதெனில் யான் சொல்லுஞ் சரநூலை மயக்கமறப்பார்ப்பது தான். அப்படிப் பார்ப்பவர் பரமாகவும் அபரமாகவும் விளங்குகின்ற ஒரு வஸ்துவினாலுண்டாகும். பிரயோசனத்தை அறிந்து கொள்வர்.

சந்திரர், சூரியர் சுழுமுனை இலக்கணமும் யாத்திரைப் பலனும்.

பார்க்கிலிடை யிடமதுவே திங்களாகும்
பகலவனாம் பிங்கலையே வலம தாகும்.

ஏற்கவுரை சுழுமுனைதா னடுவாம் அங்கி:
இடையான சந்திரனே அமுத மாகும்;

தீர்க்கமுடன் பொருள் விளைக்கும் கரிய வண்ணம்
திரராசி யாமவனே செப்புங் காலை:

வேற்றடங்கண் மடமாதே! விரும்பிக் கேளாய்:
விரிவாக இவையனைத்தும் விளங்கச் சொல்வாம்:

(இ-ள்) வேல் போலுங் கண்ணினையுடைய பெண்ணே ஆராய்ந்து பார்க்கில் இடைகலை என்பதுவே இடைப்பக்க நாசியில் வருஞ் சுவாசம்; அதுவே சந்திரகலை எனப்படும். பிங்கலை என்பதுவே வலப்பக்க நாசியில் வருஞ்சுவாசம். இதுவே சூரிய கலை எனப்படும். யாவருக்கும் ஒக்கச் சொல்லுங் காலத்தில் சுழுமுனை என்பது நடுவாகும் அக்கினி எனப்படும். பின்னும் அந்தச் சந்திரனைச் சொல்லுமிடத்தில் அமுதம் தீர்க்கமாக எப்பொருள்களையும் உண்டாக்குவன் நிறங் கறுத்த தன் ராசியில் திர ராசி மற்றுமுண்டாகிய அனைத்தும் பரிஷ்காரமாகச் சொல்ல நீ விருப்பமுற்றுக் கேட்பாயாக.

குறிப்பு: அச்சுழுமுனை இரண்டு நாசிகையிலும் பரவியோடும் அதற்குப் பூரணம் என்பது பெயர்.

இதுவும் அது:

6. சொல்லுங்காற் கதிரவனுஞ் சகவி யாபி.
சுத்தநிறம் வெண்மைசர ராசி யாகும்.

கொல்லுமெலாக் கருமங்கள் கொடிய வன்னி
கூறுங்கால் நிறஞ்சிவப்பாம் உபய ராசி

நல்லவிடை தெரிந்துணரிற் றிங்கள் பெண்ணாம்
நலம்பயில்பிங் கலைகதிரோன் புருட னாகும்.

செல்லுமிகு பதின்காத வழிக்கப் பாலாந்
திசைக்கிடமாய்ச் செல்வலமூர் சேரக் கேளே:

(இ-ள்) சூரியனுடைய குணங்குறிகளைச் சொல்லுமிடத்து அந்தச் சூரியன் உலகத்தில் வியாபகமுற்றவன். பரிசுத்தமான வெண்மை நிறத்தையுடையவன்; ராசியில் சரராசி சுழுமுனை யென்னும் அக்கினியைச் சொல்லவென்றால் சகல கருமங்களையும் அழிக்கும் பொல்லாது நிறம் அக்கினி சிவப்பு ராசியில் மேற்சொல்லிய இரண்டு ராசியுங் கூடியது. இன்னமும் நன்றாய்த் தெரிந்து பார்க்கில் இடைகலையென்று சொல்லப்பட்ட சந்திரன் பெண்பால் பிங்கலையென்று சொல்லப்பட்ட அந்தச் சூரியன் ஆண்பால், சுழுமுனையெனப்பட்ட அந்த உபய ராசியானது அஃறிணைப்பால் அல்லது அவியாகும். அன்றியும் இரு பதின்காத வழிக்கு மேற்பட்ட தொலைவான தேசத்துக்குப் போகும்போது, சந்திர கலை ஓடும்போது புறப்பட்டுச் சூரியகலை ஓடும்போது அத்தேசத்தில் போய்ச் சேர வேண்டும். இன்னமுஞ் சொல்லுகிறேன்; கேள்:

சந்திரனிலக்கணமும் அச்சந்திரன் நடக்கும்போது இன்னவை செய்யலாம் என்பதும்:

7. கேட்கிலிடந் தூதாடை யணிபொன் பூணல்
கிளருமணம் அடிமைகொளல் கீழ்நீர் கிண்டல்

வாழ்க்கைமனை யெடுத்தல்குடி புகுதல் விற்றல்
மன்னவரைக் காணலுண்மை மருவல் சாந்தி

வேட்கை தெய்வப் பதிட்டைசுரம் வெறுப்புத் தீர்த்தல்
வித்தைபெறல் தனம்புதைத்தல் மிகவும் ஈதல்

நாட்கமல மலர்முகத்தாய்! நரகந் தீர்த்தல்
நன்றேயா மிவையெல்லாம் நயந்து பாரே.

(இ-ள்) அன்று மலர்ந்த தாமரைப் பூப்போலு முகத்தினையுடைய பெண்ணே சந்திரகலை இடநாசிகையில் நடக்கும்பொழுது எந்தெந்தக் காரியங்களைச் செய்யலாம்? என்று வினவினால் அந்த இடைகலையில் ஒருவரைத் தூதனுப்புதல், தானே தூதுபோதல் புதிய வஸ்திரந் தரித்தல், ஆபரணாதிகள் பூண்டு கொள்ளல், விவாகஞ் செய்து கொள்ளுதல் (தாலிகட்டல்) ஒருவனை அடிமையாகப் பெற்று கொள்ளல் கிணறு குளம் ஏரி முதலியன  வெட்டுதல், வாழும் வீடு மனை வாங்குதல் ஒரு வீட்டிற் குடி போதல், ஒரு வஸ்துவை விற்றல் நூதனமாய் அரசரைக் காணல் தனக்கு ஒருபடி மேற்பட்டவரானாலுஞ் சரி. தான் உண்மையாகிய வஸ்துவைச் சார்தல், சாந்தி கழித்தல் இஷ்ட தெய்வம் பிரதிஷ்டை செய்தல், சுரந்தீர்த்தல் (ஒருவனைச் சமாதானஞ் செய்தல்) கல்வி கேட்டுக் கொள்ளுதல், தனந்தானிய முதலிய ஆஸ்தி சேர்த்து வைத்தல், தியாகங்கொடுத்தல், பாப விமோசனஞ் செய்தல் ஆகிய இவையெல்லாம் நன்மையாகும். மற்றக் காரியங்கள் மத்திமம் என்றறிக.

குறிப்பு: இன்னமும் இதிற்செயலறியவென்றால், 47 ஆங்கவியையும் 48 ஆங் கவியையும் பார்க்க

சூரியனிலக்கணமும், சூரியன் நடக்கும்போது இன்னவை செயலாகும் என்பதும்:

8. பார்க்கில்வலம் உபதேசம் வித்தை சேவை
படையோட்டல் பயிர்செட்டுக் களவு சூது

போர்க்கவொணா வழக்குக்கரி பரிதே ரூர்தல்
பிறங்குமெழுத் திடுதல்சங் கீதம் பாடல்

வார்த்தைபகை பக்கங்கோள் பசாசு தீர்த்தல்
மந்திரஞ்சா தித்தல்மருந் துணிலு றங்கல்

கோத்தபுன லாடல்கொல் விடங்கள் தீர்த்தல்
கொடும்பிணிதம் பனபோகங் குறிக்குங் காலே.

(இ-ள்) வல நாசிகையில் சரமோடும்போது எவை செய்யத்தக்கவை? என்று விசாரித்துப் பார்க்கும்போது குருவுபதேசம் பெறல், தாமொருவருக்கு உபதேசம் பண்ணல், வித்தை பாராயணஞ் செய்தல் வித்தை ஒருவருக்கோதல் ஒருவனை வணங்கல், எதிரியின் படை துரத்தல், பயிர் விளைத்தல் வியாபாரஞ் செய்தல், திருடல், சூதாடல், ஒருவனாலுந் தீர்த்தற்கரிதாகிய வழக்குப் பேசல் யானை குதிரை, தேர் இவைகளிலேறிச் சவாரி போதல் விளங்கிவரும்படியான எழுத்தெழுதல் சங்கீதம் பாடல் பேசத் தொடங்கல் பகைமையுண்டாக்கல் ஒருவனைப் பங்கம் பண்ணல், கோள் சொல்லுதல் பிசாசு ஓட்டுதல் மந்திர நிட்டை சாதித்தல் மருந்து சாப்பிடுதல் போசனம் புசித்தல், நித்திரை செய்தல், ஸ்நானஞ் செய்தல் கொல்லுதற்கேதுவாகிய விஷயங்களை நிவர்த்தி செய்தல் கொடிய வியாதிகளைத் தீர்த்தல் தம்பனயோக சாதனஞ் செய்தல், இவைகளையெல்லாங் குறித்தனுபவித்துப் பார்க்கில் நன்மையாகும்.

குறிப்பு: மற்றிச் சூரிய சந்திரர் இருவருக்கும் விவரத்திற்கு 46-ஆங் கவியையும் 48-ஆங் கவியையும் பார்க்க

சுழுமுனை பூரண சூனிய பலன்:

9. காலிரண்டு மொத்தக்காற் சமாதி நன்றாம்:
கருதியதொன் றாகாது காணா காணா:

சீலமிகுந் தவமுடையாய்! நன்மை இல்லை:
தீயவா குங்கருமஞ் சேரக் கூடும்;

சாலநிறை பூரணத்தில் வழக்கு வாது
தர்க்கம்போ ரரங்கமன்னர் தம்மைக் காண்டல்

மூலமறுஞ் சூனியத்தி னிறுத்தில் வெல்வன்;
முயல்வதெல்லாங் கயல்விழியாய்! முயல லாமே.

(இ-ள்) சேல் மீன் போலும் கண்களையுடைய பெண்ணே சுழுமுனையாய் இரண்டு சரமும் ஒத்தோடுகையில் என்ன செய்யலாம்? என்றால் சமாதி யோகங் செய்தல் (கருவி கரணங்களோயச் சும்மாவிருத்தல்.) நன்மை; நினைத்த காரியம் ஒன்றேனுமாகாது அப்போது ஒருவன் வந்து இப்பொருள் அகப்படுமா? என்றால் அஃது அகப்படாது சீலம், பொந்திய தவமுடைய பெண்ணே, இந்தச் சுழுமுனை நடக்கும்போது நன்மையே இல்லை; கெட்ட காரியங்களெல்லாம் பலிக்கும். இது இங்ஙனம் நிற்க (சரம்) மூக்கில் எந்தப் புழையில் ஓடுகின்றதோ, அந்தப்பக்கம் பூரணமென்றும். சரம் ஓடாத பக்கம் சூனியமென்றும் பேர் பெறும். இப்படியான குறைவில்லாத பூரண பக்கத்தில் நின்று வழக்குப் பேசுகிறவர்களை தர்க்கம் பண்ணுகிறவர்களை சண்டை பண்ணுகிறவர்களை ஒருவன் போய்க் காணும் அரசனை (அல்லது) தனக்கு மேற்பட்டவனை இவ்வாறு கூறப்பட்டவர்களை இதனால் காணலாமென்று ஒரு சாட்சியும் இல்லாதபடி சரமோடாத பக்கமாகிய சூனிய பக்கத்தில் நிறுத்தினால் பூரண பக்கத்திலிருக்கின்றவன் வெல்வன். அல்லாமலும் ஒருவன் இப்படிப்பட்டவர்களைத் தனக்குச் சரமோடாத சூனிய பக்கத்தில் நிறுத்தினால் அவன் பேச்சே மேலாய் வெல்வன் எவ்வெவ்வற்றை எவ்வெவ்வாறு நாட்டமுற்று அறிய வேண்டுமோ, அவ்வவ்வாறேயறியலாம்.

10. யாத்திரை பிரயாணம் போகும்போது சரம் இசைவு
பிசகாய் இருந்தால் அதற்கு உபசாந்தம்:

முயலுங்காற் பூரணத்தி லிடத்தி ரண்டு
முன்வலமேல் மூன்றடிபோம் மொழியும் யாத்ரை:
கயலுடருங் கண்மடவாய்! கருமம் முற்றும்
கருதுவடக் குங்கிழக்கும் இடத்தே போகில்

இயலுமொரு பகையுண்டாம்; மீள மாட்டார்:
இசைந்தவலந் தெற்குமேற் கேக வென்னிற்

புயலடரும் புனல்புகுந்து மரண மாவார்:
புணர்முலைக்கச் சிறுமிடையாய்! போற்றிக் காணே.

(இ-ள்) கச்சினால் இறுகி நெருங்கிய தனங்களையும் இப்போது தான் அற்றுப் போவதுபோலத் தோன்றுகின்ற இடையினையுமுடைய பெண்ணே பின் 19 ஆங் கவியில் சொல்லியபடி மேற்றிசையும் தென்றிசையும் சந்திரன்றிசை வடக்கும் கிழக்கும் சூரியன்றிசை, இஃது இங்ஙனம் நிற்க சொல்லப்பட்ட யாத்திரை போக நாடியவன். சந்திரனில் சந்திர திசையே போக வேண்டும்.; சூரியனில் சூரிய திசையே போக வேண்டும்; அல்லாமலும் முன் ஏழாங்கவியிற் சொல்லியபடி இருபதின்காத வழிக்கப்புறமான தலங்களுக்கும் சந்திரனில் புறப்பட்டுச் சூரியனில் ஊர் போய்ச் சேர வேண்டும். அப்படிச் சேரத் தருண பேதமாய்ச் சரமும் இசைவு பிசகாய் மாறியோடினால். (அதற்கு உபசாந்தம் யாதெனில்) சூரியகலையிற்  போகவேண்டிய திக்கின் யாத்திரைக்குச் சந்திரகலையாயிருந்தால், அந்தச் சந்திரன் சுவாசத்தை ஏறவுள்ளே இழுத்துப் பூரணமாக்கி இந்தக் கலையே இரண்டு தரம் முன்னிட்டு வைத்துப் பின்பு சுதாவாய் நடந்து வழியில் சிறிது தூரம் நிற்காமல்  போக வேண்டும் (இது சாந்தி) சந்திரன் பலன் கெட்டுப் போகும். தீமையில்லை. சந்திரகலையிற் போக வேண்டிய திசையின் யாத்திரைக்குச் சூரிய கலையாயிருந்தால் சூரியன் சுவாசத்தை ஏற உள்ளேயிழுத்து அக்காலையே மூன்றடி முன்னிட்டு  வைத்துப் பின்பு சுதாவாய் நடந்து வழியில் சிறிது தூரம் நிற்காமல் போக வேண்டும். (இது சாந்தி) சூரிய பலன் கெட்டுப் போகும்.  தீமையில்லை; போகிற காரியம் ஜெயமாகும். இப்படியல்லாமல் வடக்குத் திசையும் கிழக்குத் திசையும் சந்திரன் நடக்கும்போது யாத்திரை போனால் போகிறவிடத்தில் ஒருவருக்கொருவர் விரோதப்பட்டுப் போவர். திரும்பமாட்டார். மேற்குத் திசையும் தெற்குத் திசையும் சூரியகலை பாயும் போது யாத்திரை போனால் சலத்தினால் அல்லது மழையினால் இறந்து போவர் இதை நீ விசுவாசித்துப் பார்.

ஒருவனுக்கு நன்மை தீமை சொல்லும் மார்க்கம்:

11. காணவொரு கருமத்தைக் குறித்து வந்தோன்
கருதியமுன் னும்மிடமும் மேலும் இந்து

பேணுவல முங்கீழும் பின்னும் வெய்யோன்
பேசியசொல் லெழுத்திரட்டை சோம னாகும்;

மாணுமெழுத் தொற்றையேற் கதிரோ னாகும்;
மதிக்குமவன் பூரணத்தில் வந்து கேட்கிற்

பூணவுரைத் தனவெல்லாம் நன்றே யாகும்;
பொல்லாது சூனியத்திற் புகலு வோற்கே.

(இ-ள்) நாம் விழையுங் காரியம் நன்றோ தீதோ, கண்டறிவோம்! என்று வந்தவன். முன் 10-ஆங் கவியிற் சொல்லியபடி சூரியகலை நடக்கும்போது. அவன்அப்பூரண பக்கமாகவே இருந்தானாகில் அவன் பொருந்தச் சொன்ன காரியங்களெல்லாம் அவனுக்குச் சித்திக்கும். அப்படி அல்லாமல் வலப்பக்கத்தில் நின்றாலும் சரம் பார்க்கிறவன் மேலிருக்க வந்தவன் கீழிருந்து கேட்டாலும் நேர்நேரே பின்னிருந்து கேட்டாலும் அச்சூரிய கலைக்குரிய பலிதமே சொல்க. சந்திரகலை நடக்கும்போது அவன் அப்பூரண பக்கமாவேயிருந்து வினவினானாகில், அவன் சொன்ன காரியங்களெல்லாம் அவனுக்குப் பலிக்கும். அப்படியெல்லாம் இடப் பக்கத்தில் நின்றாலும். நேர் நேரே முன்னே நின்றாலும் மேலிடத்திலிருந்தாலும் அச்சந்திர கலைக்குரிய குணமே சொல்க. இது தவிர சரம் ஓடாத சூன்ய பக்கத்தில் நின்று கேட்பானானால் அவன் கேட்ட காரியம். பொல்லாததாகும். பலிக்கமாட்டாதென்க. அல்லாமலும் அவன் முதல் வாய் திறந்து சொன்ன வார்த்தையின் எழுத்தை எண்ணிப்பார்த்து, ஒற்றைப் பங்காகில், சூரியனுடைய குணஞ்சொல்க. இரட்டையாகில் சந்திரனுடைய குணஞ்சொல்க. மேல் கீழ் என்றது, மெத்தை வீட்டையும் கிணறு முதலிய பள்ளக்குழிகளையும் குறித்ததென்றிக. இப்படியாக 5.6 வகையிற் சொல்லியிருக்கின்றதே! இவையெல்லாம் ஏககாலத்தில் ஒத்திருக்க வேண்டும் என்பதில்லை. ஏதாவது ஒன்றைப் பார்த்துச் சொல்லலாம் என்பது கருத்து மற்றும் வருவனவற்றாற் காண்க. இன்னமும் விரித்துச் சொல்லுமளவில் சந்திரனுடைய திசையும் பக்கமும் அது பூரணமானாலுஞ் சரிதான் கிஞ்சித்து மத்திமம் சூரியனுடைய திசையும் பக்கமும் அது சூனியமானாலுங் சரிதான், திரணமாயினும் நன்மையுண்டேயல்லது வியர்த்தமாகாது. இதற்குப் பிரமாணமாக 6-ஆங் கவியிலும் 7-ஆங் கவியிலும் சந்திரனைத் திரராசியென்று செப்பியிருப்பதனையறிக. இக்கவிகளில் உரி. பண்பு அல்லது அடைமொழிகளைச் சேரவிடாமல் பதவுரையாய்ச் சொல்லி லிருவோமென்றால் விரிவுரைக்கு இசைவுபட்டு வருவதரிது. ஆயினும் அவ்வுரிகளை மாத்திரம் சேர்த்துக் கொண்டு வருவோமென்றால் ஒரு பெண்ணானவள் தன் புருஷனுக்கு அமளியிற் சம்போக காலத்தில் கால் கை படுதல் முதலிய கற்புடமை தவறுதல் கூடாதென்று அங்கும் அவைகளை இருக்கக் காண்பிக்கப் புகுவாள். புகுந்தால் அச்சதிபதிகள் கொண்ட கருத்து ஒருமித்துத் தடையின்றி நிறைவேறுமோ? நிறைவேறாதது போல, இங்கும் விகாரமில்லாமல் உரை புணர்வு மாட்டாதாதலால், சமயோசிதமாய் நேர் படுத்தவும் நிராகரிக்கவுமாயிற்று.

இதுவும் அது:

முன் 10-ஆம் கவியிற் சொல்லிய பூரண சூனியங்களின் விகற்பம்:

12. கேடென்றோன் பறிகொடுத்தோன் நஞ்சு தின்றோன்
கிடையினிற் சாவென்றோன் கிளர்நோய் கொண்டோன்

பாடொன்று மில்லை; சூனியத்தே யாகிற்
பலித்துவிடும் பூரணத்திற் பகர்ந்த வெல்லாம்

ஆடும்பை யரவன்ன அலகு லாளே!
அடுத்தொருவன் வந்ததிகை சோம னாகி

நீடுஞ்சொல் இரவியாய் நிற்கு மாகில்
நினைத்த மொழி யாகாது நின்று பாரே.

(இ-ள்) ஆடும் பையரவு அன்ன அல்குலையுடைய பெண்ணே, ஒருவன் வந்து நானின்னதனால் கெட்டுப் போனேன். என்றாலும் நானின்னதைப் பறி கொடுத்தேன் என்றாலும் விடங்கடித்து அல்லது விடமுண்டேன் என்றாலும் இதோ படுக்கையிற்றானே பிராணன் போகின்றது என்றாலும் அல்லது இவை முதலாகச் சொல்லப் பட்ட அபாய குணங்குறிகள் எவையாயினுஞ் சரி. சரம் ஓடாத சூனிய பக்கமாய் வந்து நின்றானாகில் ஒரு வருத்தமில்லை. நிவர்த்தியாகிப் போகும். என்க. அப்படியல்லாமல் சரம் ஓடுகிற பக்கமாகிய பூரண பக்கத்தில் வந்து நின்று சொல்லுவானாகில் வந்தவன் எப்படி எப்படிச் சொன்னானோ அப்படியப்படியே லயித்துப்போகும். பறிபோன பொருள் வாராது. நஞ்சு மீளாது. படுக்கையில் நோயாளி தேறான், அன்றியும் சூனியத்தில் எவனாவது வந்து எதையாவது சொன்னானாகில் அஃது ஒரு காலத்தில் அபத்தமான வார்த்தையானாலுமாகும் பூரணத்திற்சொன்ன சொல் உண்மையாயிருக்கும். இதுவல்லாமலும், வந்தவனுடைய திசையையும் 12-ஆங் கவியிற் சொல்லியபடி எழுத்தையும் எண்ணிப் பார்க்கில் அவன் திசை சந்திரன் கூறாகவும். முதற் சொன்ன சொல் சூரியன் கூறாகவுமிருந்தால், மேற்சொல்லிய காரியங்களுக்குக் கிஞ்சித்து மத்திமமாயினும் முழு மோசமன்று இன்னமுஞ் சொல்லுகிறேன் கேள்.

கருப்பக்குறி:

13.கேட்டவனா ருயிர்தன்னி லேறி நிற்றல்
கிளர்கையி லுயிருளவை பிடித்து நிற்றல்

வாட்டமற வருமதலை யிடத்திற் பெண்ணாம்;
வலமாகி நின்றுரைத்தால் மைந்த னாகும்;

ஈட்டமில்சூ னியத்துரைக்கில் கேடே யாகும்
இருஞ்சுமுனை மேலுரைக்கில் அலியே யாகும்;

நாட்டுமொழி சூனியம்பூ ரணத்தே யாகி
நடுக்கமுடன் மகவுயிர்க்கக் கிடைக்கும் அன்றே.

(இ-ள்) ஒருவன் கருப்பத்தைக் குறித்துக் கேட்குங்காலத்தில் வந்தவன் ஒரு சிவன் மேல் ஏறிக்கொண்டிருந்தானானாலும் உயிருள்ள யாதொன்றைக் கைப்பிடித்துக் கொண்டிருந்தான் ஆனாலும் ஒரு சீவனைத் தொட்டு நின்றானானாலும் அவன் நின்ற பக்கம் வலமாகில், அதிலும் பூரணமானாற்றான் ஆண்பிள்ளை பிறக்குமென்க இடமாகில் பூரணமானாற்றான் பெண்ணென்க. அப்படிப் பூரண பக்கமல்லாமல் சூனிய பக்கமாயிருந்து எதனைத்தொட்டு நின்றாலும் வலமாகில் ஆண்தான்; இடமாகில் பெண்தான். ஆனால் பிறக்கிற பிள்ளை சாகும். அப்போது சரம் பார்க்கிறவனுக்குச் சுழுமுனையாயிருந்தால், பிள்ளை ஆணுருவினதல்லாமலும், பெண்ணுருவினதல்லாமலும், அலியாகுமென்க, இப்படியாக வந்தவன் முன் வலத்தில் நின்று அவன் வந்த காரியத்தைச் சொல்லிக்கொண்ட பின் இடத்தில் வந்து நிற்கில் , தாய்
வயிற்றிலிருக்கிற பிள்ளை, வருத்தப்பட்டுப் பின்பு பிறக்குமென்க. அன்றே அசை.

கர்ப்பக்குறியும் போர் வெல்லும் குறியும்:

14. கிடக்கின்ற மைந்தனுஞ்சூ னியத்திற் கேடாம்;
கெடாதிருவர் பொருவதுசூ னியத்தி லோது:

வடுக்கின்ற மொழியின்முதற் சொன்னோன் தோற்பன்;
மருவியபூ ரணத்தின் பின்பு சொன்னோன் தோற்பன்;

நடக்கின்ற சுழுமுனையில் வேட்ட பேர்கள்
நட்பாகும் வலத்தியங்க நடப்போன் வெல்வன்;

இடத்தியங்கி லைந்தடிபோ யெதிர்த்தோன் வெல்வன்;
இருஞ்சுழுனை நிற்கிலிரிடல்லை பாரே.

(இ-ள்) முன் கவியில் சூனியத்திற்கேட்ட பிள்ளை மரிக்குமென்றாலும் போர் வழக்கு வாதைக் குறித்து ஒருவன் வந்து இன்னவன்இன்னவன் எவன் வெல்வானென்றால் வந்தவன் சூனிய பக்ஷத்திலிருந்து சொன்னானாகில், முன் சொல்லப்பட்ட பெயரையுடையவன் தோற்பன், பூரணமாகில் பின்பு சொல்லப்பட்ட பெயரையுடையவன் தோற்பன். அப்போது சரம் பார்க்கிறவனுக்குச் சுழுமுனை நடந்தால், அவ்விருவரும் ஒருமித்துப் போவார். இதல்லாமலும் சண்டை வாது வழக்கு நேர்கிறவனுக்கு அப்போது சூரியகலையாய் இருந்தால் வெல்வன்; சந்திரகலையாயிருக்கிறவன் தோற்பன். சுழுமுனையாகில் ஒருமித்துப் போவர். அப்படிச் சந்திரகலை நடக்க பெற்றவன் முன் 11 ஆங் கவியிற் சொல்லியபடி சரத்தை உள்ளிழுத்துப் பூரணமாக்கி அச்சரம் நடக்கிற காலையே முன்னிட்டு ஐந்தடி போய்ப் பின்பு நேர் நடந்தால் வெல்வன்.

சரத்தின் ஸ்பரிசம்:

15. பார்க்குங்கா லிடமெனினும் வலமு மொக்கும்
பஞ்சபூ தந்தியக்கம் பகருங் காலை

சாற்றியதண் டுடன்சேரிற் பிருதிவி யாகும்.
தப்பாமல் அப்பினுக்குத் தாழ வோடும்.

மேற்றிசையை நோக்கியெழும் அங்கி வாயு
மெய்யுணர்ந்தோர் புறத்தோடும் மேன்மை குன்றா
நீர்த்துறையா நாற்றிசையுஞ் சிதறி யோடில்
நெடுவானென் றுரைத்திடுநீ நிலத்து ளோர்க்கே.

(இ-ள்) (இடைகலை பிங்கலை சுழுமுனை என்று சொல்லப்பட்ட இம்மூன்று கலைகளையும் இவற்றின் பயன்களனுபவத்தையும் பரீக்ஷித்துப்) பார்க்குங் காலத்தில் ஒத்துவரும் அந்தந்த நாடிகளுக்குள் பஞ்ச பூதியங்கள் நடப்பதுண்டு. அவற்றைத் தேர்ந்தறிந்து அனுவிப்பதே அரியதாகும். யாதெனில் மூக்கிலிருந்து வருகிற சரம்  அம்மூக்குத் தண்டைச் சார்ந்து வந்தால், பிருதிவியின் கூறென்றறிக; கீழ் நோக்கியோடில் அப்புவின் கூறென்றறிக; மேலாகப் பாய்ந்தால் தேயுவின் கூறென்றறிக; அத்தண்டிற்கு நேராகிய மற்றொரு புறத்தைச் சார்ந்து வீசினால் வாயுவின் கூறென்றறிக. இப்படி நான்கு பக்கங்களுள் ஒரு பக்கமல்லாமல் அந்நான்கு பக்கமும் கலைந்து நடந்தால் அஃது ஆகாயத்தின் கூறென்றறிந்து உலகத்துள்ளவர்களுக்குச் சொல்க. (இப்பஞ்ச பூதியம் இடத்திற்கும் வலத்திற்கும் ஒன்றுதான்)

சரத்தின் வடிவமும் நிறமும் இரகசியமும்:

16. நிலம்பொன்மை யிரதநெடுங் கோண நான்காம்
நீளம்பன் னிருவிரலாம் நீர்தான் வெண்மை

இலகுபிறை வடிவுகண்டந் துவர்த்தி ருக்கும்
எட்டிரண்டு விரலோடு மெரிதான் செம்மை

நலங்கொண்ட முக்கோணம் அழற்சி மேலாய்
நாலிரண்டு விரலோடு நளிர்கா னீலம்

துலங்குபுளி யறுகோண மொருபக் கத்தில்
துய்யநால் விரலோடுஞ் சொல்லுங் காலே.

(இ-ள்) பஞ்ச பூதிய சரம் நடப்பதை இன்னமெப்படிக் கண்டு தெளியலாமெனில் பிருதிவி சரம் பொன்மை; அப்புசரம் வெண்மை; தேயுச்சரம் செம்மை; வாயுச்சரம் கருமையாயிருக்கும். அப்போது கண்டத்தில் எவ்வித உணர்ச்சியாகுமெனில் பிருதிவிக்குக் கண்டந் தித்திக்கும்; அப்புவிற்கும் துவர்க்கும்; தேயுவுக்க உவர்க்கும் அல்லது அழற்சியாயிருக்கும்; வாயுவுக்குப் புளிக்கும். எவ்வடிவாயிருக்குமெனில் பிருதிவி எண்கோணம் அப்பு எட்டு நாள் பிறை போல இருக்கும். தேயு முக்கோணம்; வாயு அறுகோணம், அன்றியும், அவை ஓடுகின்ற நீட்சியைச் சொல்லுங்கால், பிருதிவி 12 அங்குலம்; அப்பு 16 அங்குலம் தேயு 8 அங்குலம் வாயு 4 அங்குலமென்றறிக. இதல்லாமலும் இக்கவியில் இரதமென்று தனியே போட்டபடியினால், முதல் இரசமாகவே வைத்துக் கொள்ளலாயிற்று. உலகத்தவருக்குச் சொல்லுங் காலத்தில் இப்பேதங்களை அவர்களறிவது அறியதென்று ஒரு பூதியத்திற்கு நான்கு குறி சொல்லி இருக்கின்றார். ஒன்றில்லாவிட்டாலும் மற்றொன்றிலாவது தெரிய வேண்டும்.

அப்பூதியம் நடக்கையில் செய்கருமங்களின் குணாகுணம்:

17. சொல்லியவான் வடிவதுதான் வட்ட மாகும்
துய்யதொரு விரனாசி யெல்லாஞ் சுற்றும்;

ஒல்லைநிறம் படிகம்கைப் பிரதம் வாயும்
ஓடிவரும் பூதங்கட் குளதோ சொல்க

மல்லல்நில நீர்க்குமிகு பயனாஞ் செந்தீ
மத்திமமாம் பகர்காலும் வானுந் தீதாம்;

பல்வளையாய்! சரம்பார்ப்போன் தன்னைப் போற்றிப்
பாசிலையென் றோதிட்டுப் பணிந்து பாரே.

(இ-ள்) பல வளையங்களைத் தரித்த கரத்தையுடைய பெண்ணே ஆகாய பூதியம் நடக்கும்போது நிறம் படிகம் இரசம் கண்டங்கசக்கும்; வடிவு வட்டம்; நீட்சி ஓரங்குலம் இப்படியாகப் பூதியங்களின் குணாகுணங்களைச் சொல்லவெனில் பிரதிவிக்கும் அப்புவிக்கும் உத்தமம்; தேயு, மத்திமம் வாயுவும் ஆகாசமும் தீதாம் சரம் பார்த்துக் குறி சொல்லுகிறவனுக்குத் தாம்பூலம் முதலானவைகள் கொடுத்து உபசாராதிகள் செய்து பின்பு கேள்.

இஃது இங்ஙனம் நிற்க. முன் 7, 8 -ஆம் கவியிற் சொல்லியபடி சூரிய சந்திரகலையிற் செய்யவேண்டிய கருமங்களுக்கும் இக்கவியை அனுசரிக்க வேண்டும். 48, 49 ஆங் கவியைப் பார்க்க வேண்டும். அதிலும் சரம் பார்க்கிறவன் தாம்பூலந் தரித்துக் கொள்ளுகையில் வினவிக் கேட்கிறவனுக்குஞ் சொல்லுகிறவனுக்கும் நன்கு ஒருவன் பேரைக் குறித்து வினவில் அவனுக்குரியவைகளைக் கூறுகின்றார்.

18. பாராகும் முதுகுநீர் கால தாகும்;
பைந்தழல்மா ரனிலங்கை படர்வான் சென்னி;

பேராமல் வினவினபோ துதித்த பூதம்
பேர்படைத்த இடங்களிலே பிழையில் லாமல்

ஏராகும் பூரணமாம் பக்கந் தன்னில்
ஏறிவெட்டுங் கோல்படுத்த லிசைந்த தெல்லாம்

கூராழி மால் வந்து விலக்கி னாலும்
குறையாமல் வடுப்படுங்காண் குறிக்குங் காலே.

(இ-ள்) முன் 15 ஆங் கவியிற் சொல்லியபடி இருவரைச் சுட்டிக் காட்டாமலும் சூனிய பக்கத்திலிராமலும், பூரண பக்கமாயிருந்து சண்டைக்குப் போகிறவன் என்னாவானெனில் ஆயுதங்களினால் காயம்பட்டு வருவானென்று சொல்க; அதிலும் அப்போது பிரதிவி நடந்தால், முதுகில் படுமென்க அப்புவாகில், காலில், தேயு ,மார்பு, வாயு, கை; ஆகாயமாகில், தலையில் படுமெனச் சொல்க. விஷ்ணுதேவன் வந்து விலக்கினாலும் தப்பித்துக் கொண்டு வரமாட்டானென்க.

19. இந்த இந்தப் பூதியத்துக்கு இந்த இந்த ஆயுதம் எடுத்துப்
போக இவ்விடத்தில் நிற்கவென்பது;

கால்மூலை தொடங்கியழல் மூலை யேறக்
கயிறெனவே கீறிமதி கதிரோ னாகிக்

கோல்மேற்குந் தெற்குமாய் நிலமாக் கொள்க
கொழுங்கதிரோன் கிழக்குவடக் காகக் கொள்க;

சேல்போலும் நெடுங்கண்ணாய்! புவிக்குக் கத்தி:
சேர்ந்தசலம் வான அழற்குச் சிலை; காலுக்கு

மேற்றண்டாம் வானுக்கா யுதங்கல் அந்த
அந்தநிலத் திற்பொருதல் வெற்றி யாமே.

(இ-ள்) சேல் மீன் போலும் கண்களையுடைய பெண்ணே, மேற்கூறியபடி சமர் செய்ய வேண்டிய வாயுமூலை தொடங்கி அக்கினி மூலையளவாக ஒரு கயிறு பிடித்தாற்போலச் சரியாய்ப் பாவனை செய்து, அதன் மேற்கையும் தெற்கையும் சந்திரன் கூறாகவும், வடக்கையும், கிழக்கையும் சூரியன் கூறாகவுங் கொண்டு, போர் செய்கிறவனுக்கு அப்போது சூரியகலை இயங்கில் தான் அச்சூரியன் திசையிற்றானே நின்று எதிரியைச் சந்திரன்றிசையில் நிறுத்திச் சமர்செய்ய வேண்டும். அப்படிச் செய்கையில் சந்திரனானாலுஞ்சரி. சூரியனானாலுஞ் சரி எடுத்தெறியும் ஆயுதங்கள் எவையெனில், பிருதிவியாகில் கத்தி; அப்புவாகில் வாள், தேயுவாகில் தண்டு, ஆகாயமாகில், கல் இப்படியாக அந்த ஆயுதங்களேந்தி. விதிப்படி அந்தந்த நிலத்தில் நின்று சண்டை செய்தால் வெற்றியடைவேன்.

நோய்க் குறி:

20. ஆகியநோய் புருடர்க்குப் புருடர் கேட்கில்
ஆறுமென்க மாதருக்கு மாதர் கேட்கில்;

சோகமிலிம் முறைதப்பிற் பொல்லா தென்க;
தொலையாது நாட்சென்று மீளு மென்க:

தோகை சில நாட்செலுநீர் கடுகு மீளும்;
சுடுதழல்நாள் மூன்று தப்பிற் றுஞ்சப் பண்ணும்

ஏகிடுங்கா னாளிரண்டின் மிகுந்தாற் கொல்லும்;
எழில்வான மன்றுதப்பி லிறக்கும் பின்னே.

(இ-ள்) புருடன் கொண்ட பிணிக்காகப் புருடனே வந்து சரம் பார்க்கிறவனைக் கண்டு இந்நோய் இலகுவாகுமா? என் வினவிலும் அந்நோய் இலகுவாகும். சரம் பார்க்கிறவனுக்கு வலப் பக்கத்தில் நின்று கேட்கிலும் நிவர்த்தியாகும். ஐயமில்லை, ஸ்திரீ கொண்ட நலிக்காக ஸ்திரீயே வந்து வினவினாலுங் குணமாகும். வந்தவள் அவனுக்கு இடப் பக்கத்தில் நின்று கேட்கில் மீளும் சந்தேகமில்லை ( முன் பதின் மூன்றாங்கவியிற் சொல்லியபடி சூனிய பக்கமாகவே இருந்தாலுமுத்தமம்) இப்படியல்லாமல், ஆணுக்குப் பெண் வந்தாலும் பெண்ணுக்கு ஆண் வந்தாலும் அவ்வியாதி  தீர்வது துர்லபம், அன்றியும், ஒருவன் வலப்பக்கத்தினின்று குறி கேட்டுக் கொண்டே இடப்பக்கத்தில் வந்து நின்றாலும் ஒருத்தி இடப் பக்கத்தினின்று குறி கேட்டுக் கொண்டே வலப்பக்கத்தில் வந்து நின்றாலும் நோய் போக்குக் கடினம் ஆயினும் மெல்லென நாட்சென்று சொஸ்தப்படும். அப்படியப்படியே சரியாய் வந்து கேட்கில் அவன் நோய் நீங்குமென்க அதிலும் எப்போது தீரும்? எனில் அந்நேரம் பூதியம் பிருதிவியாகில் சில நாட்செல்லுமென்க; அப்புவாகில், விரைவிலென்க அக்கினியாகில் மூன்று நாட்களில் விமோசனமென்க மிகுந்தாற் கொல்லும் வானமாகில் அன்றைக்கே நோய் பிரிந்து காணும் மிஞ்சில் மறுநாள் மரிக்குமென்க

(இதன் முன் கவியிற் சொல்லிய இயல்பும் அதன் மேற்கவிகளிற் செப்பிய பூதியங்களின் குணமும் முன் 9 ஆம் கவியிற் கூறியபடி சரம் பார்க்கிறவன் ஓரிடத்துக்குப் போக வேண்டுவது இத்தருணமென்பதும் பேச வேண்டுவது இத்தருணமென்பதுங் கூறுகின்றார்.)

21 இறக்குமுப யந்தனக் கைந்து நாளில்
ஏகினக்காற் சாவில்லை யிதுவுண் மையே;

பிறக்குமொரு பூதத்தி லைந்து பூதம்
பிரிந்தோடு மதுவுடனே பேசக் கேட்டுச்

சிறப்புடைய பயனறிவ தெல்லாம் நூலின்
செயலதனால் தேவர்களுந் தெரிய மாட்டார்;

நிறக்கு மதிக் கிருந்தழைத்தால் வந்து கேட்டால்
நீள்வெயிலாச் செல்சொல்க நினைந்து கேளே:

(இ-ள்) இதற்கு முன் கவியிற் கூறிய பூதியங்களின் இயற்கையாகிய குணங்களுக்குரியவை சொல்லக் கூடாது. அதற்கு முன் 10-ஆங் கவியிற் சொல்லியபடி, சுழுமுனை நடக்கில், ஆகுமென்பது ஆகாது, ஆகாதென்பது ஆகும். அதுபோல இப்போதும் ஒருவன் நோயைக் குறித்துக் கேட்கும் போது சுழுமுனை நடந்தால்; அந்நோயாளி ஐந்து தினங்களுள் மரிப்பன். அப்படி மரிக்காமல் தப்பினால், அவனுக்கினி ஒரு விபத்து வருமளவுஞ் சாகான் இது மெய்ம்மை அன்றியும். முன் 4 ஆங் கவியிற் சொல்லிய வண்ணம் ஒரு பக்கமோடுகிற சரத்தில் ஐந்து வகைப்பட்ட பூதியங்களுண்டு அப்பூதியம் ஒவ்வொன்றிற்குள் ஐந்து பிரிந்து நடப்பனவுண்டு. அவை எவையெனில், பிருதிவியிற் பிருதிவி, பிருதிவியிலப்பு, பிருதிவியிற்றேயு. பிருதிவியில் வாயு பிருதிவியில் ஆகாயம் இப்படி இவ்வைந்துக்குள் ஐந்தாயோடும். இதனையும் மற்றிந்நூற்பயன் யாவையும் குரு முகாந்தரத்திலறிந்து கொள்வதல்லால் தேவர்களேயானாலும் தனியே சுருதியைக் கொண்டு குருவைத் தள்ளிச் சுயானுபவத்தால் இந்நூலைக் கொண்டே  அறிவது கூடாது. அல்லாமலும் சரம் பார்க்கிறவனை ஒருவன் வந்தழைத்தால். அவன் சூரியகலை இயங்கும் போதே போக வேண்டும். பேசுவதானாலும் சூரியன் இயங்கும்போதே பேச வேண்டும். மற்றபடி கூடாது. மிஞ்சி நடக்கில் மத்திமமென்றறிக: இன்னமுஞ் சொல்லுகிறேன்; மனம் உவந்து கேள்.

முன் 16-ஆம் கவியில் சொல்லிய பூதிய சரங்களின் இயல்பு:

22. கேளிதனை நிலநீருங் குணமே யாகும்;
கெர்ப்பமெனி லாணாகுங் கிளர்ந்தா ராயின்

நாளின்மிகு லாபங்கள் சாந்தி போக்கு
நன்றாகு மங்கிதனி லரங்கம் வெல்லும்;

வாளமரிற் பொல்லாது; கெர்ப்பங் கேடாம்:
வாயுவெனிற் பெண்ணாகும் மற்போர் தோற்கும்:

நீள்வி சும்பில் தனுவித்தை யோகந் தானும்
நீடுமிக கெர்ப்பமெனில் அலியாய் வீயும்.

(இ-ள்) பெண்ணே கருத்துற்றக் கேட்பாயாக; முன் 6-ஆங் கவியிற் சொல்லிய பூதிய சரங்களினியல்பு கூறுமிடத்தில் பிருதிவியும் அப்புவும் நன்மைகளே தருவன. இதன்பின்  33-ஆங் கவியிற் சொல்லியபடி ஐந்து நாழிகைக்கு மிஞ்சி நடக்கையில் இவ்விரண்டு பூதியங்கள் அதிகமாக நடந்தால் இலாபமுண்டு வேண்டில் 18ஆங் கவியையும் பார்க்க ஈதிங்ஙனம் நிற்க. 14-ஆங் கவியிற் சொல்லியபடி ஒரு பிராணியைக் கைப்பற்றாமலும் அதன் மேலூர்ந்து நில்லாமலுந் தனியே வந்து சூனியத்தில் நில்லாமல் பூரணத்தில் நின்று கெர்ப்பக்குறி கேட்டால், அப்போது சரம் பிருதிவியாவது அப்புவாவது நடந்தால் ஆண்பிள்ளை பிறக்குமென்க 6- ஆம் கவியிற் சொல்லியபடிசாந்தி பண்ணுதல் போக்குக் கழித்தல் செய்ய வேண்டும். அங்ஙனஞ் சொல்லிய கலையில் இவ்விரண்டு பூதியங்களில் ஏதாவது நடக்கும்போது செய்தால். பலிக்கும் இதன்றித் தேயு பூதியம் நடக்கையில் போரரங்கம் புரியில் வெல்லும் அப்போரில் வாளெடுத்தால் மத்திமமாம். அப்போது கெர்ப்பத்தைக் கேட்டால் அஃது அழிந்து போகும். வாயு நடக்கையிற் கெர்ப்பம் பெண்ணாமென்க. மற்போர் தோல்வியடையும் ஆகாயமாகில் விற்சமா ஜெயிக்கும். இப்போரிலக்கணஞ் செப்பிய 20-ஆங் கவியையும்  18ஆங் கவியையும் 10ஆங் கவியையும் பார்க்க, 9ஆங் கவியிற் சொல்லிய யோகம் புரிய நன்மை ஆகாயச்சரம் நடக்கையில் கெர்ப்பங் கேட்டால் அலியாய்ப் பிறக்கும் பிறந்துமிறக்கும் என்க.

(திதி வார நட்சத்திர காலசர பலன் முன் 4-ஆங் கவியிலும் 35-ஆங் கலியிலுஞ் சொல்லியபடி பிராதக் காலத்தில் சரம் பார்க்க வேண்டிய கிரமத்தில் விசேஷமாயப் பார்க்க வேண்டுவது:)

23. வீயாத பிரதமை முன் விளங்கும் பக்கம்
விரவிவரும் முப்பதினாம் மும்மூன் றாக

மாயாது வருஞ்சோமன் இடம் தாக
வருகின்ற அருக்கனுக்கும் வலம் தாகச்

சாயாது புதன்வெள்ளி திங்கள் மூன்றுந்
தப்பாது சந்திரனாஞ் சாற்றுங் காலை;

தேயாது கதிர்செவ்வாய் சனிவி யாழஞ்
செங்கதிரோன் தினமென்று தேறு நியே.

(இ-ள்) முன் 4- ஆங் கவியிலும் பின் 35-ஆங் கவியிலுஞ் சொல்லியபடி பிராதக்காலத்தில் சரம் பார்க்க வேண்டிய கிரமத்திலும் விசேடமாய்ப் பார்க்க வேண்டுவதெதுவெனில், பொழுது விடிய 5 நாழிகை இருக்கையில் எழுந்து, மேல்4-ஆங் கவியிற் சொல்லியபடி சரம் பார்க்கும்போது வளர்ப்பிறைப் பிரதமைக்கும் துவிதியைக்குந் திரிதியைக்கும் சந்திர கலையுதித்து நடக்க வேண்டும். இப்படி இம்முந்நான்கு பன்னிரண்டும் போக தேய் பிறையில் பிரதமைக்குந் துவிதியைக்குந் திரிதியைக்குஞ் சூரியகலை உதித்து நடக்கவேண்டும். பொழுது விடிய 5 நாழிகை இருக்கையிலுதித்த சரம் மற்ற ஐந்து நாழிகையுங் கலங்காது. ஓட வேண்டும். திதி யோகவாரங்களிலெவை நிகழவேண்டும் எனில் ஞாயிற்றுக்குஞ் செவ்வாய்க்குஞ் சனிக்கும் வியாழத்திற்கும் சூரியகலை, உதித்தோட வேண்டும். திங்களுக்கும் புதனுக்கும், வெள்ளிக்குஞ், சந்திரனுதித்தோட வேண்டும். இப்படி உதிக்கஞ்சரம் எந்தப் பூதியத்தில் உதிக்க வேண்டுமெனில், பின் 45-ஆங் கவியைப் பார்க்க வேண்டும். இதில் பூதியங்கள் அதிகமாய்க் கதித்தோடில் பயன்கள் என்னவாமெனில் முன் 23-ஆங் கவியிற்றெரியும் அன்றியும் இதன் விவரம் 33-ஆங் கவியிற் காண்க.

(நட்சத்திரங்களுக்கு நடக்க வேண்டிய காலசரம் இதன் மேற் கவியிற் கூறிய வாரங்களுக்குரியனவாகிச் சரிவரில் இடரில்லை. பிழைக்கில் இன்ன இன்ன நிகழும் என்பது)

24. தேறிடுநீ யொன்பது நாள் பூரமாகி
சிறந்தரோ கிணிசதய முத்திரட் டாதி

கூறிடுஞ்செங் கதிரோனா ளாகக் கொள்க:
கூறாநாள் அடையமதிக் கென்று கொள்க:

வீறிடுஞ்செங் கதிர் பிழைக்கி னோய்கா ரிக்கு
மிடித்திடுமண்டலஞ் செய்யும் வெம்போர் சாவாய்

பாறிடும்பொன் பிழைக்கின் மன்னர் கேடாம் புந்தி
பதிக்கதிபன் கெடுமிந்து கிளைஞர் போக்கே.

(இ-ள்) பெண்ணே திதி வாரமென்று இரண்டு வேறுபாடாய்க் கூறினோமென்று தயங்க வேண்டுவதில்லை விவரம் மேற்கவிகளிற்றானே சொல்லியிருப்பதனைக் காண்க. இவ்விரண்டினுள் கீழ்வரும் நட்சத்திர பலனாகிய மூன்றனுள்ளும் ஏதேது கஷ்டமோ அதிலும் ஏதேது இஷ்டமோ அதிலும் தெரிந்து வீக்கந்தூக்கம் நோக்கிப் பார்ப்பதென்று காண்க. கண்டுதேறியிரு. அந்நட்சத்திரங்களுக்கு நடக்க வேண்டிய காலசரம் ஏதெனில், பூரம் உத்திரம், அஸ்தம், சித்திரை, ஸ்வாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், உரோகிணி, சதயம், உத்திரட்டாதி இப்பன்னிரண்டிலுஞ் சூரியன் நடக்கவேண்டுமெனக் கொள்க. மற்றும் பதினைந்திலுஞ் சந்திரன் நடக்க வேண்டும். அல்லாமலும் மேற்கவியிற் கூறிய வாரங்களுக்குரியனவாகிய காலசரங்களில் ஞாயிறு தப்பினால் வியாதி; சனி வறுமை; செவ்வாய் சண்டை சாவு; வியாழன் , தன் மன்னனுக்குக் கேடாம் புதன் அவ்வூரதிகாரிக்குக் கேடு, திங்கள் கற்றுத்தாருக்குக் கேடு வரும். (தன் மன்னனென்பதும் அவ்வூரென்பதும் சரம் பார்ப்பவனுக்குரியனவாம்), வெள்ளியின் பலன் கவியிற் காண்க. சனி வறுமையுடன் தன் கையிலிருப்பதும் போகும். பொன் பிழைக்கில் மன்னர் கேடாம என்பதில் தன் தாதாவிற்கு வருத்தம்வரில் தனக்கு எப்படிப் பொருள் வரும்? வராது, பதிக்கதிபன் கெடுமென்பதில், அவனிவனால் பறிகொடுக்கப்பட்டானென வரும்.

(இதில் மேற்கவியிற் கூறாத வெள்ளி பிழைக்கில் நிகழ்வன இவையெனவும் மற்றதன் மேற்கூறிய திதி பிழைக்கில் நிகழ்வன இவையெனவுங் கூறுகின்றார்:)

25. போக்கரிய புகர் பிழைக்கில் ஊர்விட்டேகல்
பொருந்தியதோர் மெய்ந்நோதல் புணர்ந்தோர் சாதல்

ஆக்கமதி லிடராம்முற் பக்கந் தன்னில்
அருங்கலகம் இரண்டாகில் அர்த்த நாசம்:

ஊக்கமுடன் மூன்றதனிற் போக்குண் டாகும்
உரைத்தநான் கிற்கிளை ஞாக் குறுநோ யுண்டாம்;

தேக்கியவைந் திற்றேச மலையும் ஆறிற்
செகத்தரசன் கெடும்ஏழிற் சேரும் நோவே.

(இ-ள்) வெள்ளி தப்பில் தான் வசிக்கும் பதியை விட்டு ஒழிந்து போதலாகவேனும் அவ்வெல்லையை விட்டு மற்றோரெல்லையைப் போய் மிதிப்பதாக வேணும் வரும். தேக நலி வரும். தன் மனைவிக்குச் சாவு வரும். (சாவென்பதில் சண்டை பிணக்கு நோய் முதலிய வருத்தமாதலையும் சதிபதிகளுக்குப் பொருந்தும் போதலையுங் காண்க.) நூலாசிரியர் புணர்ந்தோர் காதலென்றும் சாமுடி வரைக்கும் வருத்தம் வருமென்றுந் துணிந்து கூறினமையால், நன்மையே தவறாக அட்டமாசித்து மட்டும் பெருகுமென்ற கருத்துக்கண்டு இதன் மேற்கவியில் கூறியது காண்க. மற்றதனிற் சொல்லியபடி ஊருக்கும் மன்னனுக்கும் அதிகாரிக்கும் வந்தாலும் வரும் இதன்றி, வளர்பிறைக் காலத்தில் பிரதமை தப்பில், யாதேனுமிடர் வருவது துவிதியை கலகம், திரிதியை பொருட்சேதம் சதுர்த்தி, போக்குண்டாகும் (சகலவித நஷ்டத்துக்குங் காண்க.) பஞ்சமி பந்துக்களுக்கு வியாதி சஷ்டி, அத்தேசத்தாருக்கும் அரசனுக்கும் வருத்தம், சப்தமி, நலி அரசனுக்குந் தேசத்தாருக்குமேயுண்டு. தனக்கில்லையென்று ஏமாறியிருத்தல் கூடாது. தன்னாலே அவர்களுக்குருயு வருத்தம் வந்ததென்று அவதூறான பொச்சாப்பினாலாவது தான் வருத்தப்பட வருமென்ற விவரம் மேற்கவியிற்றானே செப்பியருப்பதனைக் காண்க.

திதி பிழைக்கில் நிகழ்வன இவையென்பதும் சந்திர சூரியர் இயல்பும்:

26. நோவுடனே சாவாமெட்டாகில்; மற்றை
நுவலாத பக்கமுமிம் முறையே கொள்க:

தாவில்வெங் கதிரதனின் மதிய முண்டாஞ்
சந்திரனுள் வெங்கிதிருந் தப்பா துண்டாம்;

ஓவரிய இவர்களையே உணரும் போதில்
உற்றசரங் குருமுகத்தா லுணர்ந்து கொள்க;

தேவர்பிரா னுரைத்தருள உமையாள் கேட்ட
செவ்வியிதன் முறைமைதனைத் தெளிந்து தேறே.

(இ-ள்) அஷ்டமி பிழைக்கில், நோவுஞ் சாவும் வரும் வளர்பிறை. இங்ஙனமிருக்கத் தேய் பிறைக்கும் இம்முறையே கொள்வது இதல்லாமலும் சூரியனுக்குள் சந்திரனும் சந்திரனுக்குள் சூரியனும்  ஒன்றுக்குளொன்று கரந்து தோன்றுவதுமுண்டாம். உமையவளே தன் சுய வல்லமையினால் தெரிந்து கொள்ள வல்லமையற்றவளாய் பின் சங்கரனருளினால் தெரிந்து கொள்ளத் தக்க சிறப்பினதாகில் இந்நூலை யார்தான் தம் மாற்றாமே தெரிந்து கொள்வா? தெரிந்து கொள்ளமாட்டார். ஆதலால் குருவருளினாற்றெளிக.

(மேற்கவிகளிற் கூறிய சரம் பிழைக்கில், இடர் வரும் வந்தாலும், அதற்கு உபசாந்தம் கூறுகின்றார்:)

28. தெளிகதிர்செய் மூன்றடியாந் தெற்கு மந்தன்
செம்பொன் மூன் றடி மேற்குத் திங்கள் வெள்ளி

இளகியநா லடிவடக்குப் புந்தி முன்போல்
இரட்டையடி கிழக்கிரவி யெழுதல் முன்னே

வளமுடனே பூரணபக் கத்திற் சென்று
வந்திருந்து நமைநினைந்து வழுத்தல் செய்தே

உளமகிழ்ந்து போகிலெல்லாம் பலிக்குந் துன்பம்
உண்டாகா  தவையனைத்தும் உணர்ந்து தேறே.

(இ-ள்) பெண்ணே, மேற்கவியிற் சொல்லியபடி காலசரஞ் சரிப்பட்டு வருமோ, வராதோ ! ஊழ்வினைப்படிக்கல்லவோ நடக்கும்! அதை நம்முடைய வசமாக்கல் இலேசோ ! எனத் தளர்வுற்றிருக்க வேண்டுவதில்லை. சரம் பார்க்கிறவன் முன் கவிகளிற் சொல்லியபடி பிராதக் காலத்தில் அருணோதயத்திற்றான் முன்னெழுந்து, ஞாயிறு செவ்வாய்க் கிழமைகளுக்குத் தென்புறமாய் மூன்றடி மண் 11-ஆங் கவியிற் சொல்லியபடி சரத்தைப்  பூரணமாக்கி அக்காலையே முன்னிட்டுக் கொண்டு போகவும்; திங்கள், வெள்ளிக்கு நாலடி வடக்கே போகவும், புதனுக்கு இரண்டடி கிழக்கே போகவும் இப்படியாகப் போய் வந்து, ஒரு திவ்வியமாகிய ஆதனத்திலிருந்து, என்னை நினைத்துத் துதி செய்து, பின்னெழுந்து எங்கே சென்றாலும் அல்லது எங்கேயிருந்தாலும்; முன்கவிகளிற் கூறிய துன்பங்களுள் யாதும் அடராது.

(இதில் மேற்கவிகளிற் கூரிய ஒரு வாரத்திற்குச் சரந்தப்பில் இன்னவை யாமெனவும், ஏழு நாட்களுஞ் சரிவரில் இன்னவையாம் எனவும் கூறுகின்றார்;)

29. தேறுநீ யிவையெலாஞ் செவ்வி தாகச்
செங்கதிரோன் தன்னாளிற் றிங்க ளோடி

மாறிவருங் கதிரவனுஞ் சோம நாளில்
மறிந்தோடி வருங்கிழமை யேழு மாறிற்

கூறுபட வுடலுயிர்விட்டேகு மென்க:
குணமாகு மிக்கிழமை கோணா தோடில்;

சீறிவருங் காலனையும் செயிப்பர் மற்றச்
சித்தயோ கத்துநிலை சித்தி யாமே!

(இ-ள்) இவையெல்லாந் தேர்ந்தறி, சூரியன் நடக்க வேண்டிய நாளிற் சந்திரன் நடந்து, சந்திரன் நடக்க வேண்டிய நாளிற் சூரியன் நடந்து. இப்படியாக மாறுபட்டு, ஒரு வாரம் முழுதும் நடந்தால், மரித்துப் போவன், அப்படியல்லாம், கிழமை ஏழுந்தவறாமல், மேற்கண்ட நாழிகையுங் கோணாமல், திக்கு நோக்கிச் செல்வதுடன் பிராணாயாமமும் மாறாமல் நிகழ்ந்து வருமாகில், இயமன் அடரான்; பிராணனுக்கழிவில்லை; சீவன் முத்தனாய் வாழ்ந்திருப்பன்; அஷ்டமாசித்தியும் அவனுக்குச் சித்திக்கும்.

குறி சொல்லும் மார்க்கம்:

29. சித்தமுட னிரேசகத்தில் வந்து கேட்டாற்
செப்பியவப் பொருள்களெல்லாந் தீதே யாகும்;

உத்தமமாம் பூரகத்தில் வந்து கேட்டால்
உரைத்தபொருள் அத்தனையும் உண்மையாகும்;

மெய்த்தியகும் பகத்துரைக்கில் நன்றேயாகும்
வேண்டாரை ரேசகத்தில் விளியப் பார்க்க.

வைத்தமலம் வாயுநீர் கழிபோ தென்ளின்
மாற்றலர்தாங் கெடுவரிது மாறி லாதே.

(இ-ள்) சரம்பார்க்கிறவன் ரேசகஞ் செய்போதில் வந்து கேட்டால், கெட்ட காரியஞ் சித்தியாது; பூரகத்திலென்னில், நன்மை; அவன் சொல்லுகிறது முண்மையாயிருக்கும் கும்பகஞ் செய் காலத்திலாகில், நற்காரியம் சித்திக்கும் மலம். சலம், வாயு கழியும் போதானால், பகைவர் கெட்டுப் போவர். இன்னம் இதற்கு விவரம் குரு முகாந்தரத்திற்றெரிந்து  கொள்ள வேண்டும். அல்லாமற்றெரியாது.

சனி வியாழன் பலன்:

30. மாறிவள ரும்பக்கங் குறையும் பக்கம்
மதிநாடி கதிர்நாடி வளர்பொன் னோடிற்

பேறுமிக வுண்டாகும் பிராண னிற்கும்
பின்புரைத்த காரியங்க ளெல்லா மேழாய்க்

கூறுகின்ற சனிநாளிற் பகலி ராவிற்
குலவுசரம் வலமிடத்திற் கோணா தோடின்

நாறுமலர்ப் பெருந்திருவே! சொன்னோ மிந்த
ஞாலமெங்கும் புகழ்பெறவே நடக்கு மென்றே.

(இ-ள்) மணமலரைச் சூடிய பெருந்திருவனையவளே, வளர்பிறை வியாழத்திற்குச் சந்திரனும், தேய்பிறை வியாழனுக்குச் சூரியனும் தப்பாமல் நடந்து கொண்டே வந்தால், சிறந்த பேறுண்டாகும். ஜீவன் முத்தனாய்த் தளர்வின்றி வாழ்வான். இதல்லாமல், சனிக்கிழமைக்கு இரவிலும் பகலிலும் சந்திர சூரிய சரங்கள் மாறுபாடில்லாமல், நடக்க வேண்டும். நடந்தால் இவ்வுலகமெங்கும் மெச்சத்தக்க கீர்த்தி வந்துறும். மற்றும் முன் கால சரஞ் சொல்லிய கவியை நோக்க வேண்டும்.

குறி சொல்லும் மார்க்கம்

31. நடப்புடைய ஒருவனெங்கென் றொருவன் கேட்கில்
நானிலத்தில் அகத்திருப்பன்: நன்னீர் முற்றம்:

அடக்குமழு வாகிலுள்ளுர்: வாயு வேற்றூர்:
அம்பரமேல் மலையேறற் றுயில லாகும்:

விடப்போனான் புவிக்குநிலை: நீர்க்கு மீண்டான்:
வெவ்வழற்கு வருகின்றான்: வெயில்கா லுக்கு

மடற்குழலாய் ஊர்வந்தான்: வான மாகில்
வருவனொரு நாழிகையில் மாறி லாளே!

(இ-ள்) மடற்குழலாய் மாறுபாடில்லாதவளே, ஒருவன் வந்து இன்னானெங்கேயிருக்கான்? எனில் அப்போது சரம் பிருதிவியாகில் வீட்டுக்குள்ளிருக்கிறான்: அப்புவாகில் முற்றத்திலிருக்கிறான்: தேயுவாகில், அக்கிராமத்தெல்லைக்குள்ளே தானேயிருக்கிறான்: வாயுவாகில், எல்லைக்கப் புறப்பட்டான்; ஆகாயமாகில் மலையேறுகிறான் அல்லது தூங்குகின்றான் என்று சொல்ல வேண்டும். இது விடப் புறத்தேசம் போனவனைக் குறித்துக் கேட்டபோது பூதியமைந்தில் முதலாகில், அவ்வூரிலேதானே நிலையாயிருக்கிறான். இரண்டாகில் திரும்பி வருகிறான்; மூன்றாகில் திரும்பினவன் நில்லாமல் நடந்து வருகிறான்; நான்காகில், அவனிருக்குமூருக்குள் வந்தான்; ஐந்தாகில் ஒரு நாழிகைக்குள் வந்து வீடு சேர்வானென்று சொல்ல வேண்டும்.

இச்சரம் மனத்துடன் லயப்பட்டால் இன்னவையாமென்பது:

மாறிவரு வாயுமனோ வலயந் தன்னில்
மயக்கவுயிர் சித்திநிற்க அதுதா னிற்கும்:

கூறுசம யங்கூற்றாற் பயமு மில்லை:
குறித்திருமண் ஒன்றரைநா ழிகையாகக் கொள்க:

தேறுபுனற் கொன்றேகால்: வன்னிக் கொன்று:
சீவன் முக்கால் வானமரை சிறந்த நாடி

பாறுமைந்து நாழிகைக்குள் வரினற் குன்றில்
பழுதுபடு முடம்பிலிது பற்றிப் பாரே.

(இ-ள்) இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் ஒன்றை விட்டொன்று மாறிமாறி நடக்கும். இச்சரமானது தேகத்தினூடே லயப்பட்டுப் போகுமேயானால், பிராணனுக்கழிவில்லை. அப்படி லயப்பட்டு நிற்கில், மன முதலிய அந்தக் கரணங்களுக்கும் வேலையில்லை. அவை அசைவற்றிருப்பனவாகும். பின்பு மற்றெச்சமயத்தாராலும் பயமில்லை; யமனாலும் பயமில்லை; முன் சொன்னபடி இடப்பக்கமும் வலப்பக்கமும் மாறியோடுஞ்சரம் ஒவ்வொரு பக்கத்தில் எந்நேரந்தரித்து நடக்குமென்னில், ஐந்து நாழிகையாம் அதிலும் பூதியங்களின் கூறுக்கெவ்வாறு பகுப்பதெனில், மண்ணில் ஒன்றரை நாழிகையும், நீரில் ஒன்றேகாலும், நெருப்பில் ஒன்றும், காற்றில் முக்காலும், வெளியில் அரையும் ஆக நிறைந்தோடும். இப்படியாகிய பூதியங்கள் கூறுகொண்ட ஐந்து கடிகைகளும் ஒவ்வொரு பக்கத்திற்குச் சரியாய்ச் சிதையாதோடவேண்டும் இதைவிடக் குறைந்தாலும் வளர்ந்தாலும் தேகநலியாம் சரம் வயப்படும் வழி தேட வேண்டும். தேடில், முன் கண்ட பயனுண்டாம் இல்லையேல் நாடியொன்றுக்கு ஐந்து நாழிகை பூதியங்களினளவே சிதறாமல் நடப்பிக்க வேண்டும் அதுவுமின்றெனில் தேக நலியே வரும்.

தத்தம் வாழ்நாட் பிரமாணமறியும் அயன் சங்கற்பம்:

33. பற்றினாஞ் சொன்னபடி அயனம் முன்னாட
பாலொருபோ துண்டுபரி சுத்தனாகி

மற்றைநா ளுத்தரமாம் அயனந் தன்னில்
மாறியிடந் தனிலோடும் வலந்தெற் காகும்

பெற்றதொரு நாழிகைதா னைந்து நூறாம்
பெறுங்கடிகை தனிற்குறையிற் பிராண நாசம்:

உற்றொருமா நாழிகைக்கோ ராண்டு தாழும்
உமையே! நான் சொன்ன கணக் குண்மை தானே.

(இ-ள்) சரம் பார்க்கிறவனுக்குச் சென்ற நாட்கள் போக மற்றும் நின்ற நாட்கள் எவ்வளவோ என்னும் கருத்துக்கொண்டு பார்த்துத் தெளியுமாறு யாதெனில், அயன சரமாம். அதனைப் பார்ப்பது எவ்வாறெனில் தைம்மாத முதற்றேதியில் உத்திராயணகாலம்: ஆடிமாத முதற்றேதியில் தக்ஷிணாயன காலம்: இவ்வயன காலத்திற்கு முன்னாள் பகலில் ஒரு பொழுதன்னமுண்டு தத்துவங்களைப் பரிசுத்தமாக்கித் தேகம் மெலிவதனால் மனத்துக்கும் மற்ற வாயுவாதி காரணங்களுக்கும் வருமிடையூற்றினை ஒருவி, தைம்மாதமுதற்றேதியில் பொழுதுவிடிய ஐந்து நாழிகையிருக்கையில் பார்க்கும்போது சரம் வாரம். திதி நட்சத்திரங்களைத் தள்ளி இடப் பக்கத்திலுதித்த முன் கவிகளிற் சொல்லியபடி ஐந்து நாழிகைகளுஞ் சிதறாமல் ஓடுவதனைப் பார்க்க வேண்டும். இது போக ஆடி மாத முதற்றேதியில் இது பிரகாரமாய்ப் பார்க்க வேண்டும். அப்போது சரம் வலப் பக்கத்திலோடும். அப்படியோடிய சரம் முற்கூறிய வண்ணம் ஐந்து நாழிகைகளுஞ் சிதறாமலோடினால் சரம் பார்க்கிறவன் தான் செய்யும் பிராணாயாமவுதவியினால் அன்று தொட்டு வரும் நூறு வருஷ காலம் வாழ்ந்திருப்பான். இதுவன்றிக் குறைந்தால், அவ்வைந்து நாழிகையை நூற்றொருமா ஐந்தாக நூறாக்கிக் குறைந்த நாழிகை ஒரு மாவோ, இரண்டு மாவோ, அல்லது அதன் மேற்றோகைப்பட்டவையோ, அதற்கு ஒவ்வொரு வருஷத்தைக் கூட்டிப்பார்த்து, குறைந்த ஒவ்வொரு மாநாழிகையின்மேல் கணக்காக்கிக் கொள்ளவேண்டும். முழுவதுமே தப்பிச் சரம் இடத்திற்கு வலமாகவும் வலத்திற்கு இடமாகவும் ஓடினால். அவனுக்கு க்ஷீணகாலமென்றறிக.

போசன விதி:

34. உண்பவனுக் கப்புவிட மதிக்கு வெய்ய
உவர்த்தல்நகைத் தல்நகர்த்த லுண்க முன்னே

பண்பயில்செங் கதிர்க்கு நெய்பால் புளித்தல் கன்னல்
பாகுடனே துவர்த்தனமு னுண்டு பார்க்க

நண்பனம வயிற்க்குச் சோறு பாதி
நன்னீர்கால காற்றுக்கா லாக நல்கிக்

கண்பயினா டிகள்சுத்தி பண்ணித் தூபங்
காட்டிமலர் சூட்டியருள் கழியுங் காலே.

(இ-ள்) முன் கவியியிற்சொல்லியபடி சரம் பார்க்கிறவன் சூரியகலையியங்கி வருகிற மட்டும் போஜனமில்லாமல் மற்றதனுக்காகக் காக்க வேண்டுவதில்லை. சந்திரன் நடக்கும் போதுஞ் சாப்பிடலாம். எப்படியெனில் உஷ்ணமான பண்டங்களும், உப்பு, கசப்பு, காரமாகிய பண்டங்களும் வைத்துக்கொண்டு தாகபானத்தை நிறுத்தியுண்ண வேண்டும். சொல்லியபடியே சூரியன், நடக்கில் நெய், பால், புளித்தல், தித்தித்தல், துவர்த்தலாகிய பண்டங்களுடனே சாப்பிடலாம். தாகபானம் அப்போதே செய்யலாம். சந்திரனுக்கு அப்போது கூடாதாயினும், பின்பு சூரியன் நடக்கில் சாப்பிட வேண்டும். இது மாறினாலும், ஆத்திரத்தினாலும் அவாவினாலுஞ் சூரியனுக்காகக் காத்திராமல் அடுத்தடுத்துச் சந்திரனிற்றானே தின்று கொண்டு வந்தாலும் நலியாம் இப்படியாகச் சாப்பிடுகிறதாயினும், அவ்வுணவு வயிற்றிற்குப் பாதிதானாகும்; மிஞ்சலாகாது மற்றபாதிக்குச் சலம் காலாகக் கொள்ள வேண்டும்; கொண்டு தசநாடிகளையும் பிராணாயாம முன்னிலையில் சுத்தி செய்து ஏகாக்கிர சித்தனாய்ச் சரம் பார்க்க வேண்டும்.

சரத்தை ஏறவொட்டாமலும் குறையவொட்டாமலும் தன் வசப்படுத்திக்கொள்ளும் மார்க்கம்:

35. கால்கொண்டு கணக்கறியவார்க் கியாதுந் தப்பா:
கருதியவெல் லாமுடியுங் காண்போர்க் கெல்லாம்:

மேல்கொண்ட புவியுடனே அப்பு வன்னி
விளங்கியகால் வானமுடன் வினவு வார்க்குப்

பால்கொண்ட மொழியாளே! பவனங் கட்டிப்
பற்றியவா றாதாரம் பரிசு பார்த்துச்

சால்கின்ற முதல்நாடி தன்னுள் நின்ற
தபனன்மதி செந்தழலாந் தன்மை பாரே.

(இ-ள்) பால் போலும் இனிய சொல்லையுடைய பெண்ணே சரம் பார்க்கிறவனுக்கு அனுபவம் இந்நூற் சொல்லியபடி வருமோ? மற்றவ் விதிப்படி பிறழாது போஜன முறைமையும் வந்தொத்துக் கொள்ளுமா? மிகினுங் குறைவாயினும் நோய் செய்யுமோ? எளிதிற் சரிப்பட வாராதோ? வாராதெனில், தானெப்படி நன்கடைவன்? என வினவுவார்களுக்கு எவ்வாறாய் நன்றெனவுந் தீதெனவும் ஊழறிந்தெடுத்தோதுவன் என்று ஐயமுற வேண்டுவதில்லை. சரம் பார்ப்பான் பரம்பார்ப்பானென்பது போலச் சரத்தைக் கணக்கின்படி யறிந்து பார்க்கிறவனுக்கு எந்தக் காரியமானாலுந் தப்பிப்போகாது அவனைக் கண்ட பேர்களுக்கும் நினைத்த காரியமெல்லாம் முடியும் அதெப்படியெனில், பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயமாகிய பஞ்ச பூதியங்களின் கூறு கூடிய வாயுவினைப் பாழ்போகாமல் மனவறிவுடனே கட்டி ஆறாதாரத்திலுள்ள பரிசினையறிந்து, தசநாடிகளுக்கும் முதல் நாடியாகிய பிராண நாடியினின்று மற்றங்கிருந்து உதித்தோடுஞ் சந்திரன் சூரியன் அக்கினி என்னும் இம்மூன்றினுடைய குணங்களையும் பார்த்தால், கைக்கனி போல இலேசிற்றெரிய வரும்.

(சரம் பார்கிறவனுக்கு நன்மை தீமை மரண காலமறியும்படி சாயா புருஷ தரிசனம் கூறுகின்றார்:)

பாரிலொத்த நிலத்தகல்வான் களங்க மற்றால்
பத்தடிக்கு ளைந்தடியாம் பருவந் தன்னிற்

சீரியமெய் நிழல்கழுத்துக் கைகால் சென்னி
சிமிட்டிப்பார்த் திமையாமற் றிகழ்வான் பார்க்கில்

கூருருவம் பொன்கண்டாற் செல்வம் வெள்ளை
குறைவிலுயிர்: செம்மையுயி ரிளைக்கும் குற்றம்:

காருருநோய் ஆறுபிறை கைகால் குன்றின்:
கம்குறையின் முப்பிறையிற் காட்டுஞ் சாவே:

(இ-ள்) பூமியிலே மேடுபள்ளமில்லாத இடத்தில் ஆகாயத்தில் மேகமறைவில்லாமல் வெயில் காயும்போது தன்னிழல் ஐந்து நீளமுதல் பத்தடிக்குட்பட்ட தருணத்தில் தான் அந்நிழல் முகமாய் நின்று கைகளிரண்டையுந் தொங்கவிட்டுக் கண்களிமையாமல் அந்நிழலைக் கழுத்து கைகள், கால்கள் இவ்வுறுப்புகளுளொன்றைப் பார்த்து அப்படியே இமையாமல் ஆகாயத்தைப் பார்த்தால் அங்கே அவனுருவம் தோன்றும் அவனுருவம் பொன்னிறமாயிருத்தால், அவனுக்குச் செல்வம் வரும். வெண்மையெனில், பிராண பயமில்லை. ஆயுள் வளரும். செம்மையாகில் ஆயுள் தேயும். அதற்கொரு குறைவு வரும். கருமையேல், நலி, இதுவிட அவ்வுருவில் கைகளாவது கால்களாவது தோன்றாமலிருந்தால் ஆறு மாதங்களுள் மரணம் இதுவன்றித் தலையே காணாமல் கவந்தமாய்த் தோன்றினால் மூன்று மாதத்தில் மரணம் அல்லாமலுஞ் சந்திரனிலுமிப்படியே பார்ப்பதுமுண்டு இந்தச் சாயா புருஷ தெரிசனத்தை விடாமல் பன்னிரண்டு வருஷம் பார்த்துக் கொண்டே வந்தால், தன் முன்னிற்கும் அந்நிழல் தன்னுடன் பேசும், பேசினால் அதன் முகாந்தரமாய் அஷ்டமா சித்தியையும் பெறலாகும்; பெறுவதன்றிப் பின்னுஞ் சில நாட்களில் அந்நிழல் ஓராளுருவாகித் தன்னுடனே திரியும். படுத்தால் தானும் படுக்கும் எழுந்தால் உடன் எழும். இவனுக்கு வரும் நன்மை தீமைகளை முன்னதாகவே உணர்த்தும், இன்னமும் இப்படிப்பட்ட அனேக அற்புதங்கள் விளைக்குமென்று பெரியவர்கள் சொல்வார்கள்.

மரண இலக்கணம் வில்லுருவின் வயன்

37. காட்டியகால் நிழல்தனக்கு முன்பின் னாகக்
கடிபுனலவாய் கொண்டகலவான் களங்க மாற்றால

பூட்டியநீர் துகள்பிறக்க உமிழ்ந்தால் வானில்
பொருத்தியவில் ஐந்துருவாய்ப் பொலிந்து தோன்றும்:

ஈட்டியவில் லுருவுளதேல் ஆண்டு வாழ்வன்:
இதுமுறியில் அவ்வாண்டி னிறந்து போவன்:

கோட்டியவில் லுருமுறிய அணங்கு தோன்றிற்
கொண்டு போம பிறையாறிற் குறித்துக் கூறே.

(இ-ள்) வானிற் களங்கமில்லாமல் சூரியன் எரிக்கையில் மரநிழல், வீட்டுத் தாழ்வார நிழல் இப்படிப்பட்டதொரு நிழல் தனக்கு முன்னிருக்கச் சரம் பார்க்கிறவன் பின்னின்று வாய் நிறைய நீர் கொண்டு அந்த நிழலருகில் துகள் பரந்து அணுப்போலப் பறக்க ஒரே சரமாய் உமிழ்ந்து அத்துகளைப் பார்த்தால் அதில் இந்திர தனுசு அமைந்து வர்ணங்களுடனே தோன்றும். தோன்றினால், பார்க்கிறவனுக்கு அன்று முதல் ஒரு வருஷ மட்டுஞ் சாவில்லை, இல்லையேல், அது வரும் வருவதிலும், அவ்வில் நிறமாறி அங்ஙனே ஒரு பெண்ணுருத் தோன்றினால் ஆறு மாதங்களிலிறப்பன்.

சந்திரசூரியரைப் பார்க்கும் இலக்கணம்:

38. குறிகொள் நிறை மதியங்குறை மதியந் தன்னிற்
குலவிய தோர் செப்பகலில் கோநெய் யைவிட்

டெரிகின்ற மதிக்கதிரைப் பகலைப் பார்த்தால்
இயல்வெண் செம் பொன்பசுமை கருமை யென்னின்

நெறிகொண்ட வுயிர்வாழ்வு கெடல்நோய் சாவு
நிரல்நிரையே யறியிதனிற் றெற்கும் மேற்கும்

அறியும்வடக் குடன்கிழக்கு நடுக்கு றைந்தால்
அறுதிங்கள் மூன்றொன்று நாட்பத் தாமே.

(இ-ள்) ஒரு செம்பு அகலில் பசுவின் நெய்யை உருக்கிவிட்டு, அதிற் பூரண சந்திரனை அல்லது அமாவாசையின்போது சூரியனைப் பார்த்தால், அதிற்றோன்றுகிற சந்திரன் அல்லது சூரியன், வெண்மை, செம்மையெனில், வாழ்வுண்டாம் பொன்மையாகில், கேடு, பசுமையானால், நோய்; கருமையோ சாவு வரும்; அப்படிச் சாகிறவனுக்குக் காலமெப்போதெனில் தென்புற வட்டங்குன்றந்தால் ஆறு மாதம் வடப்புறம் மூன்று மாதம், கீழ்ப்புறம் ஒரு மாதம்; நடுவே கொள்ளையாயிருந்தால், பத்துநாள்:

(நிறைமதியம் -பவுரனை: குறைமதியம் - அமாவாசை)

சரீரப்பழுது முதலான மரண இலக்கணம்:

39. அழிந்திடுங்கை கால்நெற்றி கன்னந் தம்மில்
அடர்ந்துடிப் புறவாண்டு திங்க ளாறு;

மொழிந்ததிங்கள் மூன்றுநாள் பத்தி லாவி
முடிந்துவிடும் இதுவொழியச் செவியி லோசை

ஒழிந்திடினா ளேழுகண்ணி லொளிதா னைந்தாம்;
உயர்ந்த மணம் மூன்றிரண்டில் உரைவே றானால்

கழிந்திடுநல் லுயிரென்று கருதி யீசன்
கழலிணையைப் போற்றில்வினை கழிந்து போமே.

(இ-ள்) கை, கால், நெற்றி, கன்னம், இவை அடர்ந்து துடித்தால் மரணகாலம் வந்ததென்றறிக. அதிலும் கை துடிக்கில் ஒரு வருஷம் கால் ஆறு மாதம் நெற்றி மூன்று மாதம்; கன்னம் பத்து நாள் என்று கொள்ள வேண்டும். இதுவொழியக் காது கேளாவிட்டால் ஏழு நாளில் மரணம் கண் பார்வை மங்கினால் ஐந்து நாள்; மூக்கில் கந்தம் போனால் மூன்றுநாள்; வாய் குழறிப் பேச்சழிந்தால் இரண்டுநாள், இதையறிந்து கடவுளுடைய பாதங்களை நினைத்துப் போற்றி செய்தால், வினையென்பதிராது அங்ஙனே கலந்து போதலுமாகும்.

உகவாச நிகவாசங்களின் பயன்:

40. போம்வாயு சிவம் உள்ளே புகுதற் சத்தி:
போகில்விடம்: புகிலமுதம்: புகன்ற வெல்லாம்

ஆம்வாயு புகிற்போகி லல்ல வாகும்:
அடங்கில்விடங் கெடும்: போகி லகலு மப்பால்:

தேமேவு சத்தியிரண் டொற்றை யீசன்:
செவியிற்போ வார்வருவர் சரமீள் வாகில்

ஓவேவு முயிர்போகில் நோயாம் மற்ற
துட்புகினோ யாகாமெய் யுரைத்தோம் நாமே.

(இ-ள்) உசுவாசம் நிசுவாசம் அல்லது ரேசக பூரக கால பலனைச் சொல்லுமிடத்தில் உடலை விட்டுப் போகிற வாயுவே சிவம்! உட்புகுவது சத்தி, சரம் வெளிப்பட்டுப் போவதெல்லாம் விடமுண்பதற்குச் சரி: சரம் உட்பட்டுப் போவதெல்லாம் அமுதமுண்பதற்குச் சரி சரம் உள்ளே போகும் போது ஒருவன் சொன்னது அல்லது நினைத்த காரியம் ஆகும். வெளிக் கொள்ளுவகையில் ஆகாது. அந்த வாயு கும்பகத்தடங்கினால், உண்டவிடம் கெடுமெனச்சரி: அடங்கியது நடு நாடிவழிப் போமாகில்பாவமென்பதில்லை: இதன்றி, ஒருவன் வந்து குறி கேட்கையில் அவன் முதற்சொன்ன சொல்லின் எழுத்தை எண்ணிப்பார்க்கில் ஒற்றையாகில் சிவன் கூறென்றும் இரட்டையாகில் சத்தி கூறென்றுங் கொள்ள வேண்டும். சரம் வெளியே போகும்போது ஒருவன் வந்து, இன்னான் போவானோ? எனில் போவான் வாரான்; உட்புகையில் வருவான் சரம்போகும் போது வருவானோ வென்றும் புகும்போது போவானோ என்றும் மாறுபட்டு வினவில் சரிப்படாது; போகும்போது போவானேயல்லது வாரான்; புகும்போது வருவானேயல்லது போகான். சரம் போகும் போது நோய் தீருமோ என்னில் தீராது; புகும் போது திருமென்க.

குறி சொல்லவும் போர் புரியவும் மார்க்கம்:

41. உரைத் தொருவன் நிறைகுறைவி லுறத்தீ தாகும்
உயிரில்புறத் துறைந்துநிறை யுறமத் திமமாம்!

நிறைத்துநிறை பக்கத்தினின் றிடினன் மையாம்
நிறைமதியந் தனிலேகில் நேர்ந்தி டும்போர்

வரைத்தசெழுங் களம்வேட்ட வலவன் தோற்பன்;
வாகான சந்திரனேல் வெல்ல மாட்டான்.

விரித்தகதி ரினிலேவெங் களத்தில் வெட்ட
மேனியிலும் வடுப்படான் வெல்வான் றானே.

(இ-ள்) குறி கேட்க, வந்த ஒருவன், தன் காரியத்தைச் சொல்லிக் கொண்டே முன்னர்ப் பூரணத்தில் வந்தாலும் பின்னர்ச் சூனியத்தில் வந்துவிடுவானாகில்அக்காரியம் தீதாம். முன்பு சூனியத்தில் நின்று பின்பு பூரணத்தில் வருவானெனில் மத்திமம் இவ்விரண்டு மாறுபாடுமில்லாமல் வந்தவன் கதழாமல் பூரண பக்கத்திற்றானே இருந்து தான் வந்த காரியத்தைச் சொல்லி முடித்துவிடுவானெனில் அக்கருமம் நன்கினிதாம் என்றறிக. போர்க்குறியைச் சொல்லுமிடத்து சந்திரகலை இயங்கும்போது சென்று சூரியன் இயங்கும்போது களத்தினேறில் எதிரி எப்படிப்பட்டவனானாலும் தோற்பன். இப்படியல்லாமல், சந்திரனியங்கும்போது புறப்பட்டுச் சந்திரனிற்றானே போர் களத்தில் தோற்பவன். இது நிற்க. சூரியனிற்றானே புறப்பட்டு அச்சூரியனிற்றானே போரில் வெல்வதனாலும் தன் மேலொரு படை படாமல் வென்று வருவான்.

போர் வெல்லும் மார்க்கம்:

43. வெல்வனமர் இருவர்பே ரெழுத்து மெண்ணின்
மிகுமெழுத்துள் அ இ உ எ ஒ என்னும்

நல்லெழுத்துள் ஆ ஈ ஊ ஏ ஓ கூட்டி
நலந்திகழ்பா லன்குமரன் அரசன் விருத்தன்

சொல்லும்பேர் முதலெழுத்தி லுயிரெ ழுத்தைத்
துலங்கியவத் தானந்துக ளறவே கூட்டில்

எல்லைமுதற் றானவெழுத் துடையோன் வெல்வன்;
இறுவனவ ராலிரட்டை யெழுத்தோன் றானே;

(இ-ள்) அ, ஆ, இ ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ, இவற்றுள் முதலாவது பாலன் கூறெனவும், இரண்டாவது குமரன் கூறெனவும், மூன்றாவது அரசன் கூறெனவும், மற்ற இரண்டும் விருத்தன் கூறெனவும் கொள்ள வேண்டும். இதில் சண்டைக்காரனுடைய பேரில் முதலெழுத்தைப் பார்க்கும்போது ஆவோலியேல் ஆவுடனேயும் ஈயொலியேல் ஈயு னேயும் ஊ ஒலியேல் ஊவுடனேயும் ஏயொலியேல் ஏயுடனேயும் ஒவொலியேல் ஒவுடனேயுங் கூட்டிக் கொண்டு அவர்களை இவ்வெழுத்துக்களின்படி பாலன் குமரன், அரசன், விருத்தனாக்கி; பாலன், குமரனையும் அரசனையும் வெல்வானெனவும்; விருத்தன் மற்றவர்களால் படுவானெனவுஞ் சொல்ல வேண்டும். அதிலும் எ ஏ ஒ ஓ விருத்தன் கூறு; இவ்விரண்டெழுத்துக் கொண்டவன் அவர்களாற்படுவான்.

கருப்பக் குறியின் முறை:

44. இரட்டையாம் உபயத்திற் கேட்ட பிள்ளை;
இனியபூ ரணத்திலாண்; சூனி யம்பெண்

மருக்குழலா ளிடத்துயிரை விடியற் காலம்
மகணன்வலத் துயிரதனால் வாங்க நட்பாம்;

தரிக்குநிலம் புதன்; வெய்யோன் அப்பு; மந்தன்
சந்திரன்தீ: வியாழஞ்சேய் தண் கால்; வெள்ளி

நெருக்கியவம் பரம்பூ: தங் கிழமை யிந்த
நெறிநிற்கின் நன்மைமிக நிகழுந் தானே;

(இ-ள்) முன் சொன்ன கருப்பக்குறிகளுமல்லாமல், இதுவுமொன்றெனக் காண்க; யாதெனில், உபய சரங்கள் நடக்கும்போது கேட்கப் பெற்ற பிள்ளை இரட்டைப் பேறெனலாம். எப்பக்கமாயிருக்கினும் பூரண பக்கம் ஆண்; சூனிய பக்கம் பெண், ஆனாலும் மேற்கவிகளிற் சொல்லிய பயன்றானாகுமெனக் கொள்க. இது நிற்க. வைகறைப் பொழுதில் மனைவிக்குச் சரம் இடப் பக்கத்தில் நடந்து, ஆணுக்கு வலத்தில் நடந்தால், அதை அம்மகிணன் அவ்வலச்சரத்தாற்றானே, வாங்கி உட்கொள்ளும் அப்பியாசஞ் செய்து கொண்டு வருவானெனில் மனைவி அவன் வயமாவள். அப்படி வாங்குவது பன்னிரண்டு தரம் வாங்கியுட் கொள்க. என்றுஞ் சொல்லுவார்கள். அதல்லாமலும் வார சரங்கள் எந்தெந்தப் பூதியங்களில் உதிக்க வேண்டுமெனில், புதன் பிருதிவியில் ஞாயிறு அப்புவில், சனியுந் திங்களும், தேயுவில், வியாழனுஞ் செவ்வாயும் வாயுவில், வெள்ளி ஆகாயத்தில் உதிக்க வேண்டும். உதிக்கில் அவ்வாரஞ் சரியாய் நடந்து, அதனால் வரும் நன்மைகள் மிகு பலனை விளைவிக்கும்.

இன்னதற்கு மூலம் இன்னதென்பது:

45. நிகழ்புவிக்கு மூலம்நீர் வாயு சீவன்
நெறிதாது கனல்விண்ணாம் நினைக்குங் காலை:

புகழுடனே பூதத்திற் குளவே சொல்க
பொருவில்சர ராசிவெய்யோன் புதுவெண் டிங்கள்

மகிழ்கொள்திர ராசியாம் உபய ராசி
மறங்கிளருஞ் சுழுமுனையாம் வாரந்தோறும்

பகுதல் படர் துயர்பலிக்கு நிலைமை தன்னைப்
பங்கயவா தனத்திருந்து பரிந்து பாரே.

(இ-ள்) பிருதிவிக்கு மூலம் அவவா, சீவன் க; ஆ-தாது. இப்படி நிரல் நிறையே ஒன்றுக்கொன்று ஆதாரமாய் வரும். அவை விளங்க இங்ஙனம் விவரமாய்ச் சொல்லவில்லையாயினும் இதனையும் சர ராசியெனப்பட்ட சூரியனையும் திரராசியாகிய சந்திரனையும் உபயராசியாகிய சுழுமுனையையும் மற்றவற்றின் பயன் முதலிய கூறுபாட்டையும் பங்கயாசனத்திலிருந்து பரிவுற்றுச் சிவயோகஞ் செய்தாலல்லது நன்குணர்தலரிது. உயிர் பாழ் போகாது சீவன் முக்தானதலுக்கு அது மார்க்கம் இல்லையேல், அவம் போகுமென்றறிக.

மூன்று நாடிகளின் முறைமை:

46. பாரிதனைக் கதிர்மதிதான் வாழ்வு கேடு
பண்டைநிலை யிம்மூன்றும் பரிந்து கேட்கில்

மேரடருஞ் செல்வம்வரும் வெய்யோ னாகில்;
வெண்மதியங் கேடாகும்; விரைந்து வாயு

தீரமிகு சுழுமுனைதா னாகில் முன்பிற்
சிறுகாலும் பெருகாது தே ரானோர்

போரருகில் வருமெனினு மதியில் வாரார்;
பொங்கியசெங் கதிர்வருவர் புகன்றோம் நாமே.

(இ-ள்) நாம் சொன்ன இச்சர நூலைப் பரிவுடன் பார்ப்பாயாக, சூரியன் சந்திரன் சுழுமுனை என்னுமிம்  மூன்று நாடிகளுள்ளும் வாழ்வு கேடு, நிலைமையென்கிற் மூன்று கரும நிதானப் பலன்களைத் கேட்குமிடத்தில் சூரியனாகில் நன்மையும் மிகுந்த செல்வத்தையுமடைவார்கள்; சந்திரனாகில் கேடு முதலிய கண்ணியக் குறைவாகும்; சுழுமுனையாகில், முன் உள்ளபடி ஏறாமல் குறையாமல் நிறைவாகும். அன்றியும் தேவாதி தேவர்களாலே வசீகரிக்கப்பட்டவனாகிலும், ஜெயர்பஜெயத்தின் முன்னிலையில் வருவோமென்று உறுதியாகச் சொல்லினுஞ் சந்திரனே அதிகமாக இயங்கிடில் வாரார்; சூரியனே அதிகப்படில் வருவாரென்று காண்க.

உப சாந்தம்:

47.நாமுரைத்த தொகையளவுஞ் சூர்ய னோடாம்;
நன்மதிய மேல்வாயு நடக்கு மாகில்;

தாமிளைத்தல் கிளையிளைத்தில் பொருள்கே டாதல்
சத்துருவுண் டாதலிவை தப்பா வாகும்;

போமிடத்தில் மதியாகில் சரத்தைப் போக்கிப்
பொருந்துமடி யிரட்டித்துப் போக நன்றாம்;

தேமருவு கதிராகில் உயிருள் வாங்கித்
திகழும்வலக் காலொற்றிச் செல்ல நன்றே.

(இ-ள்) முன் சொன்னபடி சந்திரனே அதிகமாய் நடந்தால், நமக்குக் கேடு வருவதல்லாமலும் பந்துக்களுக்குமதுவே வரும். சத்துருக்கள் தோன்றி வருவது தப்பாது சந்திரனிற் போகவேண்டிய காரியமல்லாத காரியார்த்தமாய்ப் போகும்போது சந்திரன் நடந்தால் சரத்தை நீளவெளி விட்டு அப்பக்கக் காலையே இரண்டு மூன்றடி முந்தி வைத்துக் கொண்டு போக வேண்டும். சூரியனிற் போகவேண்டிய காரியமல்லாத காரியார்த்தமாய்ப் போகும்போது சூரியன் நடந்தால், அச்சரத்தை ஏறவுள்ள வாங்கி, அவ்வலக்காலை முன்னிட்டுக்கொண்டு போகவேண்டும். அப்படிப்போனால் போங்காரியம் நன்று.

சந்திரகலையில் நடக்கும் பூதியங்கள்

48. செல்லுமதி தனிலேதே சஞ்ச ரிக்கச்
சிவாலயங்கள் மதிற்செய்தல் இல்லங் கட்டல்

நல்லமுடி சூட்டல்குடி புகுதல் போக்கு
நயந்துமரம் வைத்தனன்று: நளிர்நீத தன்னில்

ஒல்லைநறு வாவிகுளஞ் சோலை வைக்க
உழவிரைக்க மணமுளதே லுவக்க லாகும்;

நல்லழலில் தீப்பிணியாம் காற்றி லானை
நிற்பரிதே ரோட்டாகும் நாவா யோட்டே.

(இ-ள்) சந்திர கலையில் பிருதிவி நடந்தால் சிவாலயம் மதிள், வீடு கட்டல், குடி புகுதல் போக்கு சாந்தி கழித்தல், மரம் வைத்தல், இவை நன்றாம் அப்புவாகில், குளம் முதலிய எடுத்தல், சோலை வைத்தல், நிலத்தை உழுதல், விதைத்தல்,விவாகம் செய்தல் நன்றாம், தேயுவாகில் பிணி தீர்த்தலாம் வாயுவாகில், குதிரை, தேர், கப்பல் ஓட்டலாம்.

இதுவுமது:

49. ஒட்டியவா னிற்செபிக்க விற்போர் செய்ய
உள்ளபிங் கலைக்குமொக்கும் ஈதே செல்க;

நாட்டுமதி வெங்கதிரோ னிற்கி லந்த
நாடிகளிற் பூரணச்சேர் நன்றே யாகும்;

ஈட்டுதிசை பிடித்தவைகள் செயல்கள் ஆண்பெண்
இயங்கிடலுஞ் சூனிய ரணமெ ழுத்தும்

வாட்டமற மதித்தெண்ணி நிருமித் தற்கு
வல்லவனே சரம்பார்க்க வல்லன் நன்றே.

(இ-ள்) ஆகாயத்தில் மந்திரஞ் செபிக்க விற்போர் செய்ய நன்று. இது சூரிய கலைக்கு மொக்கும் இது நிற்க. சந்திரன் திசையானாலும் அல்லது சந்திரனேயானாலும் சூரியனேயானாலும். வந்தவன் பூரண பட்சத்தில் நின்றால் அவன் வந்த காரியம் நன்றாம், இது போக திசை, ஆண், பெண், சூனியம், பூரணம், எழுத்து இவை முதலாயச் சொல்லப்பட்ட இச்சர நூலின் நுட்பப் பொருள்களைக் கண்டு, இஃது  இன்னதென்றும் அஃது இன்னதென்றும் நிரூபிக்க வல்லவன். சரம் பார்க்க வல்லவன் அல்லாதவனென்றறிக.

சரம் பார்ப்பார் இயல்பு:

50. நன்றான மறைவல்லோர் குலமா னாலென்?
நாமுரைத்த சரநூலின் நடைதப் பாமல்

என்றாரும் பார்ப்பவரே பூமி தேவர்
இசைந்தமா னிடப்பிறவி னின்பங் கொள்வர்;

குன்றாத மாபறவை யெறும்பு தாரு
கொடி மருந்தி னளவறிந்து கொண்டு வாழ்ந்து

பொன்றாத தெய்வீகம் பொருந்து வார்கள்;
புகுதுவார் புன்பிறப்பிற் புகலா தாரே.

(இ-ள்) நல்ல பிராமண குலத்தவராய்ப் பிறந்தாலும், என்னாம்? அல்லது இழிந்த குலத்தவராய்ப் பிறந்துமென்னாம் இச்சர நூலுணர்ந்து இதன் நடைதப்பாமல் பார்ப்பவரே பிராமணராவர். சராசரங்களினுடைய தன்மைகளை அறிந்தவராக இப்பூமியின் கண் இவரே. தேவரென யாவராலும் பூசிக்கப்பட்டு வாழ்ந்து பரம்பொருளிற் சாயுச்சியமடைவர். பார்க்கமாட்டாதவர் இழிந்த குலத்தினராய் புன்பிறப்புப் பிறந்து கொண்டிருப்பார்கள்.

51. புன்பிறப்பிற் பிறக்கினுஞ்சற் குருமு கத்தாற்
பொருந்தியவிச் சரநூலைப் புகலக் கேட்டு

நன்குணர்ந்து நெறிநடப்பான் யாவ னேனும்
நாமவனென் றிரண்டில்லை நன்றாய்க் கேட்கின்

மின்பிறக்குஞ் செந்தழலை அடுத்த வெல்லாம்
மிக்கதழல் வடிவான விதமே போலத்

தன்பிறப்பி லினிப் பிறவான் அவமே சாகான்
சடைமேனாம் அணிந்தசந் திரனொப் பானே.

(இ-ள்) இழிந்த குலத்திற் பிறந்தவனானாலும், குரு முகாந்தரமாய் இச்சர நூலைச் சொல்லக் கேட்டு இதனை உணர்ந்து இவ்வழி நடப்பவன் யாவனானாலும். அவன் யாமேயாவான்; வேற்றுமையில்லை. நெருப்புத் தன்னை அடைந்தவற்றையுந் தன்னுருவாக்கிக் கொள்ளும் இயல்புபோல; அவன் யாமே; அவன் அவமாய்ப் பிறந்திறவான்; இன்னம் விசேஷமாய்ச் சொல்லுகையில், சடாபாரத்தில் நாமணிந்திரானின்ற சந்திரன் போன்று எம் முடி மேல் வீற்றிருப்பான்.

நூல்: முப்பத்தொன்று

 
மேலும் பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு »
temple news
நினைமின் மனனே! நினைமின் மனனேசிவபெரு மானைச் செம்பொனம் பலவனைநினைமின் மனனே! நினைமின் மனனே!அலகைத் தேரின் ... மேலும்
 
5. திருமால் பயந்த திசைமுகன் அமைத்துவரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்துமலைமகள் கோமான் மலர் அடி ... மேலும்
 

திரு ஏகம்ப மாலை நவம்பர் 06,2015

(திருக்கச்சி ஏகாம்பரநாதரைத் துதித்துப் பாடிய மாலை)1. அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் ... மேலும்
 

திருத் தில்லை நவம்பர் 06,2015

1. காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் ... மேலும்
 
temple news
1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar