வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய சிவ ஸ்தலம்..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2016 12:04
உலக சிறப்புமிக்க இந்த சிவனாலயம் குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க இந்த நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம்.
இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக... இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.
இந்த ஆலயத்தின் கல் கொடிமர் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும். பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்புவது இக்கோவிலின் தனிச்சிறப்பு.
இங்குள்ள விசேஷமே இந்தப் சிவன் தினம் தினம் கடலில் முழ்கி எழுவதுதான். கடல் அலைகள் ஏறுமுகமாக இருக்கும்போது அலைகள் சிறிது சிறிதாகக் கோயிலை மூழ்கடிக்கும். பிறகு கடல்நீர் காலையில் வடியத் தொடங்கும்போது கோயில் வெளியே காட்சி தரும். அமைதியையும், தனிமையையும் விரும்புபவர்களுக்கு இக்கோயில் ஒரு வரப்பிரசாதம். கோயில், சிற்ப வேலைப்பாடுகள் எதுவும் இல்லாமல் சாதாரணமாகக் காட்சி தருகிறது. கோயிலில் உட்கார்ந்து மனம் ஒருமைப்பட தியானப் பயிற்சியில் ஈடுபடலாம். சுற்றிலும் கடல் நீர் சூழ்ந்த அமைதியான சூழலில் மனம் கடவுளிடம் ஒன்றி மனத்துக்கு அமைதி கிட்டும். இக்கோயில் கடலில் மூழ்கி, பின் வெளிப்படுவதைப் பார்க்க இந்தியாவின் பல பாங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோயிலிலிருந்து சற்று தொலைவிலுள்ள நகரத்தில் சிற்றுண்டி சாலைகளும், தங்குவதற்கு வசதியும் உள்ளன. இரவுப் பொழுது நெருங்க நெருங்க, பகலில் சிவபெருமானுக்குச் சாற்றிய மலர்கள் கடல் நீரில் மிதந்து வருவது காணக் கொள்ளாக் காட்சி. இறைவனை தரிசிக்க வருபவர்கள் காலையில் தண்ணீர் வடிந்திருக்கும்போது கோயிலுக்குச் சென்று ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு, மாலை கடல் நீர் கோயிலை மூழ்கடிப்பதற்குள் திரும்பிவிட வேண்டும். (இதுபோன்ற திருத்தலம் நம் தமிழ் நாட்டிலும் நவபாஷாணம் என்னும் இடத்தில் உள்ளது.) கொஞ்சம் கொஞ்சமாக கடல்நீர் புகுந்து சன்னிதியை மூடி, தூண்களின் பெரும் பகுதியை மறைக்கும்போது, ஜிலீரென்று ஓர் உணர்வு பரவும். அந்தப் பகுதிக்குள் கொஞ்ச நேரத்துக்கு முன் நின்று சிவபிரானை தரிசித்துக் கொண்டிருந்தோமே என்று உணரும் போது ஆனந்தம் ஏற்படும்.