கோயில் என்றால் ஆலயம். ஆழ்வார் என்றால் எம்பெருமானுக்கு அடியவர். ஆழ்வார்கள் தங்களுடைய இதயத்தில் பகவானை பிரதிஷ்டை செய்து வழிபடுவதைப் போல் கோயிலில் விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்து வழிபடுவதால் கோயிலும் கோயில் ஆழ்வார் எனப்பட்டது. திருமஞ்சனம் என்றால் மங்கள ஸ்னானம். கோயில் முழுவதும் சுத்தம் செய்தல் என்று பொருள்படும். திருமலையில் வருடத்திற்கு நான்கு முறை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. தெலுங்கு வருட பிறப்பு (யுகாதி) ஆனிவர ஆஸ்தானம், பிரம்மோத்ஸவம், வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷ நாட்களுக்கு முன்னர் வரும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும். கோயிலினை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியே கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்பெறும் இது ஒரு மஹாயக்ஞம் போல நடைபெறும். கர்ப்பாலயத்தில் உள்ள உத்ஸவ மூர்த்தி விக்ரஹங்கள் தங்க, வெள்ளி, பாத்திரங்களை தங்க வாயில் அருகே கொண்டு வருவர். கர்ப்பாலயம் சுவர்களையும் உள்ளே அமைந்துள்ள கோயில்களையும் அதன் சுவர்களையும் சுத்தமாக கழுவுவார்கள். பிறகு “பரிமளம்” என்ற வாசனை பூச்சினை சுவருக்குப் பூசுவர். நாமக்கட்டி, சூரணம், கற்பூரம், கந்தம் பொடி, குங்குமம், கிசிலி கட்டை போன்றவற்றின் அரைத்த கலவையையே பரிமளம் என்பர்.