உலகில் தனித்து சாதனை படைப்பது சிரமமான ஒன்று. அப்படியே சாதித்தாலும் அதனால் பயனேதும் இல்லை. ஒரு செயல் நடக்க இரண்டின் சேர்க்கை அவசியம் என்பதே திருக்கல்யாண தத்துவம். மின்சாரத்தில் பாசிடிவ், நெகடிவ் என்னும் இரு பிரிவுகள் உள்ளன. இவை இரண்டும் இணைந்தே ஒளியோ, சக்தியோ உண்டாகிறது. இதுபோலவே, சக்தி, சிவம் இரண்டும் இணைந்தே உயிர்கள் உருவாகின்றன. தேவி இறைவனை விட்டு என்றும் நீங்காத தன்மை கொண்டவள். பாலில் சுவைபோலவும், தீயில் உஷ்ணம் போலவும், மணியில் (நவரத்தினம்) ஒளி போலவும் கடவுளுடன் இணைந்திருப்பவள். அர்த்தநாரீஸ்வரராக தோன்றி, கடவுளில் சரிபாதி பெற்ற பெருமை படைத்தவள். மலையத்துவஜ பாண்டியனின் மகளாக மீனாட்சி என்ற பெயரில் அவதரித்து அந்த பரமனையே கணவராக அடைந்தவள். இந்த இரு சக்திகளும் இணைந்திருப்பதையே நாம் திருக்கல்யாணம் என்ற பெயரில், மானிட வாழ்வுக்கேற்ப திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.