பதிவு செய்த நாள்
24
மே
2016
03:05
துர்கை துன்பத்தை போக்குபவள்; தீய சக்தியை அழிப்பவள்: தன்னை வழிபடும் பக்தர்களுக்கு வெற்றியையும் வளமான வாழ்வையும் தருபவள்.
துர்கை பல வடிவங்களிலும், பல பெயர்களிலும் போற்றப்படுகிறாள். நவராத்திரி காலங்களில் துர்கா தேவியை பல வித ரூபங்களில் அவரவர்கள் குலவழக்கப்படி வழிபடுவர். அந்த வகையில் துர்கா தேவியின் ஒன்பது நாமாக்கள் சிறப்பாகப் போற்றப்படுகின்றன.
தீபதுர்கா: வாழ்வில் ஒளிதருபவள். மனதில் எழும் காமத்தீ வஞ்சகத் தீ, குரோதத்தீ போன்ற தீயில் இருந்தும், எதிர் பாராத விதமாக தீ விபத்தில் சிக்குவோரையும், மழை பொழிந்தும் அல்லது மனித ரூபத்தில் காப்பாற்றியும், உயிர்களுக்கு அருள் புரிகிறாள். குண்டலிணி யோகிகளுக்கு ஒளியாய் நின்று உதவுபவள்.
வனதுர்கா: காட்டில் (வாழ்வில்) திக்குத் தெரியாமல் சிக்கித் தவிப்பவர்களையும், கொடிய மிருகங்களிலிருந்தும் காப்பவள். வனம் (இருள்) என்ற பயத்தால் உழல்வோரையும், பயம் நீக்கி தெளிவான பாதையைக் காட்டுபவள். பிறவியாகிய காட்டையும் அழிப்பவள் வனதுர்கா.
ஜலதுர்கா: நீரில் மூழ்கி உயிருக்குப் போராடுபவரைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பவள். வாழ்க்கை என்னும் நீர்ச்சுழலில் எப்பேர்ப்பட்டவனும் சிக்கித் தவிக்கும் வேளையில், என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையே. தேவியே நீ என்னைக் காப்பாற்று என்று குரல் கொடுத்தால் உடனே காப்பவள்.
ஸ்தூலதுர்கா: பக்தர்கள் உடல் நலக் குறைவால் அவதிப்படும்போது மருத்துவரின் உதவியை நாடி, தகுந்த மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் இறுதியில் உடல் பூரணமாகக் குணமடைய உதவுபவள்.
விஷ்ணுதுர்கா: இத்தேவியை வைஷ்ணவி, நாராயிணீ என்று அழைப்பர். சங்கு, சக்கரம் ஏந்திக் காட்சியளிக்கும் தேவியாவாள். சாந்தி துர்காவும் இத்தேவியே ஆவாள். மனதில் ஏற்படும் மயக்கம், குழப்பம், எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தவிக்கும் போது இத்தேவியிடம் முறையிட மனதில் ஏற்பட்ட துயரங்களையும், குழப்பத்தையும் நீக்கி, மன அமைதிக்கும் வழி வகுப்பதுடன் அனைத்துச் செல்வங்களையும் அளித்து மகிழ்விப்பவள்.
பிரம்ம துர்கா: மிகவும் சிக்கலான காரியங்களில் எந்த முடிவு எடுப்பது என்று அறிய முடியாமல் தவிக்கும்போது நல்ல தெளிவினையும் நல்ல சிந்தனையையும் ஊக்கத்தையும் அளிக்கும் சக்தியை வழங்குபவள் இத்தேவி ஆவாள். சகல கல்விகளுக்கும் மூல காரணமாக விளங்குபவள்.
ருத்ர துர்கா: எதிரிகளின் சதிச்செயலால் சிக்கித் தவிக்கும்போது இத்தேவியை வழிபட தனது கோபாக்னியால் பகைவர்களை அழித்து பக்தர்களின் இடையூறுகளை அகற்றிக் காப்பாற்றி நலம் தருபவள்.
மகா துர்கா: எல்லாமாகவும் இருப்பவள். காலத்தைக் கடந்து நல்ல பலன்களை வழங்குபவள் எந்த வித சூழ்நிலையிலும் பக்தர்களின் வாழ்வில் உயர்வுக்கு வழிகாட்டும் தேவி ஆவாள்.
சூலிணி துர்கா: பஞ்ச பூதங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தேவி ஆவாள். பக்தர்களின் பயத்தைப் போக்கி நல்வழி அருள்பவள்.
இப்படி ஒன்பது அன்னைகளின் சக்திகளையும் ஒவ்வொருவருக்கும் அளித்து நலமுடனும் வளமுடனும் வாழ வழிவகுக்கும் துர்கா தேவிக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும். விழாவே நவராத்திரி விழா.
மேலும், துர்கையானவள் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளைக் கொண்டவள். எனவே, நவராத்திரி ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் இச்சாசக்தியான துர்கா தேவியையும் அடுத்த மூன்று நாட்கள் கிரியா சக்தியான லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் ஞான சக்தியான சரஸ்வதியையும் வழிபடுவது வழக்கம்.
ஆற்றல் பல பெற்ற துர்கா தேவியானவள் கோயில்களில் வடக்கு திசை நோக்கி எழுந்தருளியிருப்பதைத் தரிசிக்கிறோம். இதில் சில தலங்களில் மாறுப்பட்ட கோலத்திலும் திசையிலும் எழுந்தருளியிருக்கின்றன.
ராகுவின் அதி தேவதையான துர்கை, பொதுவாக வடக்கு நோக்கியே காட்சி தருவாள். கதிராமங்கலத்தில் மட்டும் கிழக்கு நோக்கி லட்சுமியின் அம்சமாக தாமரை மலரில் எழுந்தருளியிருப்பது தனிச் சிறப்பு.
கங்கை கொண்ட சோழபுரத்தின் வடக்கு வாயிலில் துர்கைக்கு தனிக்கோயில் உள்ளது. இங்கு பதினெட்டு கரங்களுடன் தரிசனம் தரும் துர்கையைக் காணலாம்.
சிதம்பரம் வடக்கு கோஷ்டத்தில் உள்ள துர்கைக்கும் பதினெட்டு கரங்கள். சிதம்பரம் கீழ்தெரு மாரியம்மன் கோயில் வளாகத்தில் பதினாறு கரங்கள் கொண்ட துர்கா தேவியின் சுமார் பதினாறு அடி உயரமான சுதை வடிவினால் ஆன திரு உருவைத் தரிசிக்கலாம்.
செஞ்சிக்கும் வந்த வாசிக்கும் இடையில் உள்ளது தாதாபுரம். இங்குள்ள ரவிகுலமாணிக்கேஸ்வரர், கோயிலில், வடக்குக் கோஷ்டத்தில் எட்டு கரங்களுடன் காட்சி தரும் துர்கையின் ஒருகரத்தில் கிளி உள்ளது.
திருநெல்வேலி - கங்கை கொண்டான் என்ற ஊருக்கு அருகில் உள்ள பராஞ்சேரி என்ற தலத்தில் பள்ளி கொண்ட துர்கை சன்னிதி உள்ளது.
கும்பகோணத்திற்கு தென்மேற்கே சுமார் ஆறு கி.மீ. தூரத்தில் உள்ள பட்டீஸ்வரத்தில் மகிஷன் தலைமீது நின்ற கோலத்தில் சாந்த சொரூபியாகக் காட்சி தருகிறாள் துர்கை. இத்தேவி சிம்ம வாகனத்துடன் கூடிய திரிபங்க நிலையில் எட்டு திருக்கரங்களுடன் அருள்புரிகிறாள். மேலும் இக்கோயிலின் இதே கோயிலின் அர்த்த மண்டபத்தில் வடபுற கோஷ்டத்தில் ஆறு கரங்கள் கொண்ட துர்கை காட்சி தருகிறாள். இது ஓர் அபூர்வ தரிசனம் என்று போற்றுவர். இதே கோயிலில் திருச்சுற்று மண்டபத்தின் கிழக்கில் தாமரைப் பீடத்தின் மீது நிற்கும் துர்கைக்கு மூன்று கண்கள் உள்ளன.