பதிவு செய்த நாள்
24
மே
2016
03:05
ஆனந்தம் பெருக நடந்து கொண்டிருந்தான் ராவணன். இந்த ஆத்ம லிங்கம் உள்ளவரை நம்மை யாராலும் எதுவும் செய்ய இயலாது. ராவணன் நினைத்ததிலும் தவறில்லை. ஆத்ம லிங்த்தின் சக்தி அளப்பரியது. அதேசமயம், தேவர்கள் கலங்கித் தடுமாறிப் புலம்பினார்கள். ஏற்கெனவே அளவிட முடியாத வர பலத்துடன் திகழ்கிறான் ராவணன். எதிர்கொள்ள ஒருவரும் இல்லாத ஆற்றல்; உலகனைத்தும் அவனுடைய ஆளுகையில் இப்போது ஆத்மலிங்கத்தையும் அவனுக்குக் கொடுத்துவிட்டார். சிவபிரான். அதை தன்னுடைய இருப்பிடத்துக்குக் கொண்டு சென்று விட்டால், அவனை யாராலும் வீழ்த்தவோ வெற்றி கொள்ளவோ முடியாது. என்னசெய்வது? இந்த நிலையில்தான், அஞ்சாதீர்கள் என்று தேவர்களுக்கு அபயமளித்து அருளினார் ஆனைமுகப் பெருமான். என்ன நடக்கப் போகிறதோ எனறு கவலையுடன் காத்திருந்தார்கள் தேவர்கள்.
ஆனந்தம், அச்சம் என்று இருவிதமான நிலையில் இவர்கள் இருக்க, காலம் நகர்ந்தது. பொழுது சாயும்வேளை. அரக்கன் என்று பொதுவில் சொன்னாலும் தன்னுடைய நித்ய கர்மாக்களை சிறிதும் கைவிடாத ராவணன். மாலை சந்தியா வந்தனம் செய்ய வேண்டிய காலத்தை அறிந்தான். கையில் வைத்துள்ள ஆத்ம லிங்கத்தை என்ன செய்வது? கீழே வைத்தால் மீண்டும் எடுக்க முடியாது; என்று, ஏற்கெனவே சிவபிரான் எச்சரிக்கை செய்துவிட்டார். சந்தியா வந்தனத்தை செய்யாமல் விடவும் கூடாது. அதுவோ, பெரும் தோஷம் என்ன செய்யலாம் என்று யோசித்த வேளையில் தொலைவில் மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அவனை அழைத்துச் சொன்னான். நான் சந்தியாவந்தனம் முடித்துவிட்டு வரும்வரையில் இதைக் கையில் வைத்துக்கொள் தவறிப் போய்கூட தரையில் வைத்துவிடக்கூடாது.
அந்தச் சிறுவன் சொன்னான்; சரி; ஆனால், ஒரு நிபந்தனை என்னால் இதன் கனத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் போனால், உங்களை மூன்று முறை அழைப்பேன். அதற்குள் வந்து வாங்கிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தரையில் வைத்து விடுவேன். சரி என்று ஒப்புக்கொண்டான் ராவணன் வேறு வழி? ராவணன் சந்தியாவந்தனத்தை ஆரம்பித்தான். கரையில் அமர்ந்திருந்த சிறுவனோ, உடனேயே அழைத்தான். பாதியில் சந்தியாவந்தனத்தை நிறுத்த முடியாத நிலை, இரு வருகிறேன் என்றான் ராவணன். அடுத்தடுத்து மூன்று முறை அழைத்த அந்தச் சிறுவன். சட்டென்று ஆத்ம லிங்கத்தை தரையில் வைத்துவிட்டான். ராவணன் அதிர்ந்தான் அவசரமாக ஓடினான். தரையில் வைத்த லிங்கத்தை எடுக்க முயன்றான். லிங்கம் அவன் பிடிக்கு குழைந்து கொடுத்ததே தவிர, அசையவில்லை. பசுவின் காதுபோல் குழைந்த அந்த லிங்கத்தாலேயே அந்த இடத்துக்கு. கோ (பசு) கர்ணம் (காது) என்று பெயர் வந்தது. (கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ளது இந்தத் தலம். பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் இதுவும் ஒன்று.) அப்படி, சிறுவனாக வந்து ராவணன் கையிலிருந்த ஆத்ம லிங்கத்தை அங்கே பிரதிஷ்டை செய்தவர். விநாயகர்தான். இக்கட்டான தருணங்கள் எதுவென்றாலும் அவற்றில் இருந்து விடுபட சரியான வழியைக் காட்டி காப்பாற்றுபவர் வேழமுகன். அதனால்தான் எல்லாச் செயல்களிலும் விநாயகர் வழிபாடு முதன்மை பெறுகிறது.