கயிலை மலையில் புஷ்பதந்தன், மாலியவான் என்று சிவகணங்கள் இருந்தனர். இவர்களுக்குள் சிவத்தொண்டில் யார் சிறந்தவர் என்ற போட்டி ஏற்பட்டது. இந்த போட்டி பொறாமையாக மாறி, ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர். புஷ்பதந்தன் மாலியவானைச் சிலந்தியாகப் பிறக்கும்படியும், மாலியவான் புஷ்பதந்தனை யானையாகும்படியும் சபித்தனர். இருவரும் திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவலில் யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். அவை முன்பு செய்த தவப்பயனாக அங்கிருந்த நாவல் மரத்தினடியிலிருந்த சிவலிங்கத்தை வழிபட்டன. லிங்கத்தின் மீது சருகுகள், வெயில் விழாத வண்ணம் சிலந்தி நுõல்பந்தல் இட்டது. யானை சிவலிங்கத்தை வழிபட வரும் போது நுõல் பந்தலை சிதைத்து விட்டு இறைவனைப் பூஜித்துச் சென்றது. பொறுமை இழந்த சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. சிலந்தியால் துன்புற்ற யானை துதிக்கையை ஓங்கி வேகமாக நிலத்தில் அடித்தது. சிலந்தி இறந்தது. சிலந்தியின் விஷம் தாங்காது யானையும் இறந்து விட்டது. இறைவன் யானைக்கு சிவபதத்தை அளித்தார். சிலந்தியை கோச்செங்கட் சோழ மன்னனாக பிறக்க அருள்புரிந்தார். யானையைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சிலந்தி யானையைத் துன்புறுத்தியதால், அதற்கு மறுபிறவி ஏற்பட்டது. இம்மன்னன் 70 சிவாலயங்களுக்கும், மூன்று பெருமாள் கோவில்களுக்கும் திருப்பணி செய்துள்ளான்.