சுக்கிரன் நீசமடைந்தால் அந்த தோஷத்திற்கு சம்பந்தப்பட்டவரோ அல்லது குடும்பத்தாரோ கீழ்க்கண்ட பரிகாரத்தை செய்துகொள்ளலாம். வெள்ளிக்கிழமைதோறும் அஷ்டலட்சுமியை வழிபாடு செய்துவர வேண்டும். ஆறாவது வெள்ளிக்கிழமையில் ஏழை, எளிய, பெண்களுக்கு துணிமணிகளை தானம் செய்யலாம். அல்லது அவர்களின் திருமணத்திற்கு பண உதவி செய்யலாம். அல்லது ஏழைப்பெண்கள் இருவருக்கு மாங்கல்ய தானம் செய்யலாம். இதனால் சுக்கிரன் நீசத்தன்மை மாறும். (இந்தப் பரிகாரத்தை வசதியுள்ளவர்கள் மட்டுமே செய்துகொள்ள முடியும்.)
வசதி வாய்ப்பில்லாதவர்கள், சுக்கிரன், நீசம்பெற்றிருந்தால் 27 வெள்ளை மொச்சைப்பயிறு எடுத்து வெள்ளைத்துணியில் முடிந்து பூஜை அறையில் வைத்து நல்ல மனைவி அமையவேண்டுமென்று வேண்டிவர சுக்கிரனால் நற்பலன் ஏற்படும். நல்ல மனைவி அமைவார்.
சுக்கிரன் நீசம்பெற்று, திருமணம் செய்துகொண்டவர்கள் 27 வெள்ளை மொச்சைப் பயிறு எடுத்துக்கொண்டு வெள்ளைத் துணியில் முடிந்து கணவன்- மனைவி தலையணையில் வைத்து (தனித்தனியாக) தைக்க வேண்டும். மேலும் சுக்கிர தசை நடப்பவர்கள் 27 வெள்ளை மொச்சைப் பயிறு எடுத்து வெள்ளைத் துணியில் முடிந்து பூஜையறையில் வைத்து வணங்கி வர, சுக்கிர தசை லாபம் தரும்.