பதிவு செய்த நாள்
08
செப்
2016
03:09
பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் கரத்தில் திகழும் சுதர்ஸனர் என்ற சக்கரத்தாழ்வாருக்கு தனிச் சிறப்பு உண்டு. சகல ஆயுதங்களுக்கும் அரசன் போல முதன்மை நிலையில் இருப்பதால், ஹேதிராஜர் என்று இவர் போற்றப்படுகிறார். உலகமும், காலமும் எப்போதும் சுழன்று கொண்டே இயங்கும் இருபெரும் தத்துவங்கள். வினாடி, நாழிகை, நாள், மாதம், ஆண்டுகள் என்ற முறையில் சுழலும் காலச்சக்கரம்கூட, சுதர்ஸனரின் ஆணைக்கு உட்பட்டதே. கூர நாராயண ஜீயர் என்னும் வைணவ ஆசார்யர், சுதர்ஸனரைத் துதித்து நூற்றி இரண்டு சுலோகங்களில் சுதர்ஸன சதகம் என்னும் நூலைச் செய்தார். அந்த சுலோகத்தை நாற்பது நாட்கள் சொல்லி ஆராதிப்பவர்கள், சகல வியாதிகளும் நீங்கப்பெற்று ஆரோக்கியம் அடைகிறார்கள். இதில் சுதர்ஸனரின் நிறங்களும், ஆயுதங்களும், செயல்களும், குணங்களும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
சுதர்ஸன ஆழ்வாருக்குப் பதினாறு ஆயுதங்கள் உள்ளன. அவை:
1. சக்கரம் 2.மழு 3. ஈட்டி 4. தண்டு 5. அங்குசம் 6. அக்னி 7. கத்தி 8. வேல் 9. சங்கம் 10. வில் 11.பாசம் 12. கலப்பை 13. வஜ்ரம் 14. கதை 15. உலக்கை 16. சூலம். இந்தப் பதினாறு ஆயுதங்களில் முதல் எட்டை வலப்புறத்திலும் கடைசி எட்டை இடப்புறத்திலும் சுதர்ஸனர் ஏந்தியிருக்கிறார். சுதர்ஸனர், தம் ஈட்டியால் அசுரர்களை விரட்டி, அடியார்களைக் காக்கிறார். தவறு செய்பவர்களை, தம் தண்டத்தால் திருத்துகிறார்.
யானையை அடக்க உதவும் அங்குசம் போல, தம் அங்குசத்தைப் பிரயோகித்து அவர் நம் ஆசைகளை அடக்குகிறார். நூறு வாய்கள் கொண்ட சதமுகாந்தி என்னும் ஓர் ஆயுதத்தை ஏந்திய சுதர்ஸனர். தீக்கொழுந்துகளை உமிழச் செய்து அடியார்களின் பாவங்களைப் பொசுக்குகிறார். பகவான் தரித்துள்ள கத்தி, சேதனர்களுக்கு ஞானத்தைத் தருகிறது.
சுதர்ஸனரின் ஆயுதமான பாஞ்சஜன்யம் பிரணவ வடிவில் அமைந்தது. அதன் முழக்கத்தால் எதிரிகள் நடுங்குவர். பாரத யுத்தத்தில் கண்ணன் இந்தப் பாஞ்சஜன்யத்தை ஊதியே பேரொலியை உண்டாக்கினான். தம்முடைய பாசம் என்னும் ஆயுதத்தால் சுதர்ஸனர் உலகங்களைப் படைக்கிறார். அவர் கையில் வைத்துள்ள கலப்பை பக்தர்களாகிய பயிர் நிலத்தைத் திருத்தி வளம்பெறச் செய்கிறது.
வஜ்ராயுதம், பக்தர்களைத் தீமைகளிலிருந்து காக்கிறது. கதாயுகம் மகத் என்ற தத்துவத்தைச் சுட்டுவதாக அமைந்துள்ளது. உலக்கை தமது அறியாமையைத் தவிடுபொடியாக்குகிறது. வேலாயுதமோ பக்தர்களின் எதிரிகளைத் தாக்கி அவர்கள் நோயை அகற்றுகிறது. இவ்வாறு சுதர்ஸனரின் இந்தப் பதினாறு ஆயுதங்களும் பக்தர்களைக் காப்பதாக வேதாந்த தேசிகர் கூறுகிறார்.
சக்கரத்தாழ்வார் என்று, பூஜிக்கப்படும் திருமாலின் இந்த சேனாதிபதியை சக்கரம், பகுதி, நேமி, சுதர்ஸனம், எஃகம், வளை, ஆழி, திகிரி எனப் பலவாறு அழைப்பார்கள். எண்கோணம், அறுகோணம், நாற்கோணம் எனப் பல்வேறு வகைகளை யஜுர் வேதத்தில் காணப்படும் ஜமதக்கினி சக்கர சம்வாதம் எடுத்துரைக்கிறது.
காக்கும் நிலை கொண்ட தெய்வத்திடம் தீமையை அழிக்க வல்ல ஆயுதமாக இருப்பது அவசியம்தானே. உக்கிர வடிவிலே உள்ள பரம்பொருளைத் தீவிர உபாசனையின் மூலம் அணுகுவதே மகாசுதர்ஸன உபாசனை. சுதர்ஸனர் பிரத்யட்ச தெய்வம். தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவதாக நூல்கள் பலவும் கூறுகின்றன.
கோகுலத்தில் கண்ணன் பாலகனாக தளர் நடையிட்ட காலத்தில் கண்ணனின் காலடி பட்ட இடங்களில் சங்கும், சக்கரமும் காணப்பட்டதாகக் கூறி, ஆன்றோர் பெருமைப்படுவர். திருமால் கோயிலுக்கென மானியமாக விடப்படும் நிலம் வைஷ்ணவ ரட்சை எனப்படும். அவை ஆழிக்கல் அடையாளம் இடப்பட்டன. அதாவது, இது வைணக் கோயிலுக்கு உரியதென சக்கர அடையாளம் அமைக்கப்பட்டது.
பலவித உபாசனைகளில் யந்திர உபாசனை மிகவும் சிறப்பு வாய்ந்தது. சுதர்ஸன யந்திரம், சுதர்ஸன மகா யந்திரம் -இரண்டும் முறையே சக்ரரூபி விஷ்ணு, நவகிரகங்களின் நடு நாயக்கர், பஞ்ச பூதங்களுக்குச் சக்தியூட்டும் பரம்பொருள் சூரிய பகவான் உடன் மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. யந்திரங்களுடன்கூடிய படத்தை கண்ணாடி போட்டு பூஜையில் வைத்து ஸ்நானம் செய்து மிகவும் ஆசாரத்துடன் வழிபாடு செய்து வர வேண்டும். எண்ணிய காரியங்கள் யாவற்றிலும் வெற்றிபெறலாம்.
பயங்கரமான துர்ஸ்வப்னங்கள் சித்தப்பிரமை, மனோபயம், பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் இவைகளால் உண்டாகிற சகலவித துன்பங்களையும் சுதர்ஸன மகா யந்திரம் நிவர்த்திக்கும். சிலருக்கு ஜாதகத்தில் கேந்திராதிபத்ய தோஷம் ஏற்பட்டு சுபயோகங்கள் தடைப்பட்டு, தரித்திரம் ஏற்படும். ராஜயோகங்கள் பங்கப்படும். சரீர பலம், மனோ பலம், தைரியம் இவை குறைபட்டு எதிலும் தெளிவில்லாது கோழையாக இருப்பார்கள். இவை போன்ற கஷ்டங்களை சுதர்ஸன மூல மந்திரத்தை பெற்றோர் அல்லது குருவிடம் உபதேசம் பெற்று தினசரி ஜபம் செய்து யந்திர ஆராதனை செய்தால் நல்ல பலன் ஏற்படுவதைக் கண்கூடாகக் காணலாம்.
கும்பகோணம் சக்ர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில்தான் பிரம்மா அவப்ருத ஸ்னானம் செய்து யாகம் செய்தார். உடனே பாதாளத்திலிருந்து சக்கரம் வெளிக் கிளம்பி மேலே வந்தது. அதன் நடுவில் பிரம்மனுக்கு அன்று காட்சி தந்த ஸ்ரீமத் நாராயணன்தான் இன்று நமக்கு சக்ரபாணியாகக் காட்சி தருகிறார்.
ஸாளக்ராமங்களில் சுதர்சன சாளக்ராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்ரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்ராமம் சுதர்சனமாகும். திருமாலின் சக்ராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு என்பர். சுதர்ஸனம் என்பது மகா சக்கரம். இவரை வழிபட வழிபட, வாழ்க்கைச் சக்கரம் சீராக அமையும். புத்திரப்பேறு கிடைக்கும். எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் தீரும். வெற்றிகள் நாடிவரும். சன்னிதியில் தினமும் சில நிமிடங்களாவது தியானம் செய்துவர, 41 நாட்களில் பலன் கிட்டும்.
நெய் விளக்கிட்டு பூஜிப்பதால் செல்வம் நிறையும். கன்னியர் திருமண வரம் பெறுவர். இன்பமும் வெற்றிகளும் இணைந்து வரும். சுதர்ஸன ஹோமம் மிகப் பெரும் சக்திகளை அளிக்க வல்லது.