ஐப்பசி மாதப் பவுர்ணமியன்று அனைத்து சிவன்கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். இறைவன் உயிர்களுக்கு உணவளிக்கும் உயர்வைப் பிரதிபலிக்கும் வகையில், இறைவனின் அருவுருவமான லிங்கமூர்த்திக்கு அன்னம் சாற்றுவார்கள். இதை தரிசித்தால் கோடி சிவலிங்க தரிசனம் செய்ததற்கு சமம் என்பர். சிவலிங்கத்தில் சாற்றப்பட்டிருக்கும் ஒவ்வொரு அன்னமும் சிவரூபம் என்று வேதங்கள் கூறுகின்றன. லிங்கம் என்பது ஆகாயம்; ஆவுடையார் என்பது பூமி. இந்த ஆகாய லிங்கத்திற்கு மேகங்கள் கடலிலிருந்து தண்ணீரை எடுத்துச் சென்று மழையாய்ப் பொழிந்து அபிஷேகம் செய்கின்றன. நட்சத்திரங்கள் ஆகாய லிங்கத்திற்கு மாலையாகவும், திசைகளே ஆடையாகவும் இருக்கின்றன என்று திருமூலரின் திருமந்திரம் கூறுகிறது.
நாம் அனைவரும் ஆண்டவன் என்னும் ஆகாயத்தின் ஒரே கூரையின் கீழ்தான் வசிக்கிறோம். அதனால் ஆண்டவனுக்கு அன்னாபிஷேகம் செய்து அதை எந்தவிதமான பேதமும் பார்க்காமல் அனைவருக்கும் அளித்தல் வேண்டும். ஒருவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், தானதர்மங்கள் பல செய்திருந்தாலும், அவையனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நம் முன்னோர் வாக்கு. இதை உணர்த்தவே அனைவருக்கும் அன்னப் பிரசாதம் வழங்கப்படுகிறது. தில்லை நடராஜர் கோயிலிலுள்ள ஸ்படிகலிங்கத்திற்கு தினமும் அன்னாபிஷேகம் நடைபெறும். அதைச் செய்பவர்களும், தரிசிப்பவர்களும் அன்னத்திற்கு கஷ்டப்படமாட்டார்கள் என்பது மரபு. அந்தத் திருத்தலத்திற்கு அன்னம் பாலிக்கும் ஊர் என்றே பெயர் வழங்கப்படுகிறது.
சிவபெருமான் பிம்ப வடிவினர். அவரது பக்தர்கள் பிரதிபிம்ப வடிவினர். பிம்பம் திருப்தியடைந்தால் பிரதிபிம்பமும் திருப்திபெறும். அனைவருக்கும் அன்னம்பாலிக்கும் அன்னபூரணியை தன் இடப்பாகத்தில் கொண்ட சிவபெருமானை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவது உணவு பஞ்சத்தைப் போக்கும். பொதுவாக பலருக்கு செல்வம் நிறைந்திருக்கும். ஆனால் உணவைக்கண்டால் வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிடப் பிடிக்காது. இதை அன்ன துவேஷம் என்பார்கள். இத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து அந்த அன்னத்தை எந்தவித சுயவிளம்பரமும் இல்லாமல் ஏழை எளியவர்களுக்கு தானம் செய்துவந்தால் அன்ன துவேஷம் விலகும் என்று சாஸ்திரம் கூறுகிறது. தினமும் அன்னாபிஷேகம் நடைபெறும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இதனை மேற்கொள்ளலாம். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை ராஜராஜ சோழனும், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலை அவன் மைந்தன் ராஜேந்திர சோழனும் கட்டி வழிபட்டனர். இங்கு நடைபெறும் அன்னாபிஷேகம் மிகவும் பிரபலம். இதேபோல் திருவண்ணாமலையில் அருள்புரியும் அண்ணாமலையாருக்கும் மலையைச் சுற்றியுள்ள அஷ்ட லிங்கங்களுக்கும் அன்னாபிஷேகம் நடைபெறும். அன்று கிரிவலம் வரும் பக்தர்கள் இதனை தரிசித்து இரட்டைப் பலன்களைப் பெறுவார்கள். சிதம்பரம், திருவானைக்காவல், திருவாரூர், காஞ்சிபுரம் மற்றும் பல புகழ்பெற்ற கோவில்களில் அன்னாபிஷேகம் ஒரு விழாவாக நடைபெறும். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் அன்னம் மூலமாக செயல்படுத்துபவன் ஈசன். எனவே, ஐப்பசிப் பவுர்ணமி நாளில் சிவன்கோயில்களில் நடைபெறும் அன்னாபிஷேக வைபவத்திற்கு தங்களால் இயன்ற பொருளுதவி அளித்து இறைத்தொண்டில் ஈடுபடலாம். வழிபாடுகள் முடிந்து தரப்படும் பிரசாதம் பெற்றால் வாழ்வில் என்றும் வசந்தம் வீசும்.
பெருமாள் கோயிலில் அன்னாபிஷேகம்: சென்னை அருகேயுள்ள நன்மங்கலம் திருத்தலத்தில் நீலவண்ணப் பெருமாள் கோயில்கொண்டுள்ளார். இக்கோயிலில் மூன்று ஆஞ்சனேயர் சன்னிதிகள் உள்ளன. முகமண்டபத்தில் மூலவர் சன்னிதிக்கு வெளிப்புறத்தில் வலப்பக்கமாகவும், இடப்பக்கமாகவும் வாயிற்காவலர்போல் இரண்டு ஆஞ்சனேயர் உள்ளனர். மூலவருக்கு எதிராக கருட பகவானுக்குப் பின்புறமுள்ள கல்லாலான தீப ஸ்தம்பத்தில் கைகளைக் கூம்பியவண்ணம் ஓர் ஆஞ்சனேயரும் காட்சி கொடுக்கிறார். இத்திருக்கோயிலில் ஐப்பசிப் பவுர்ணமியன்று சிவாலயங்களில் நடைபெறுவதுபோலவே, அன்னாபிஷேக வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. மூலவர் நீலவண்ணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் கிழக்குநோக்கி அருள்புரிகிறார். பெருமாளின் மார்பில் சாளக்கிராமங்களைக் கொண்ட மாலை அழகாகக் காட்சிதருகிறது. தம்பதி சமேதரான இவர்களை தரிசிக்க வாழ்வில் என்றும் சுகம் காணலாம் என்பது ஐதீகம். அன்னாபிஷேகத்தின்போது தரிசித்தால் இல்லத்தில் உணவுக்குத் தேவையான பொருட்கள் நிறைந்திருக்கும் என்பதும் ஐதீகம். சென்னை பரங்கிமலை - மேடவாக்கம் நெடுஞ்சாலையில் பயணித்து கோவிலம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மேற்கே சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம். மேலும் குரோம்பேட்டையிலிருந்து நெமிலிச்சேரி வழியாகவும் செல்லலாம். வாகன வசதிகள் உள்ளன. காலை 7.00 மணியிலிருந்து பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். விசேஷ நாட்களில் காலை 6.30 மணியிலிருந்து இரவு 9.00 மணிவரை தொடர்ந்து தரிசனம் காணலாம்.