பதிவு செய்த நாள்
11
அக்
2011
02:10
நெல்லியில் மகாவிஷ்ணு நித்யவாசம் செய்கிறார். எனவே நெல்லியமுதம் அவருக்கு மிகவும் பிடித்தமானது. ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான். சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம் அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர்.
ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது. கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகி விடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும்,இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். இரவில் நெல்லிக்காய் சாப்பிட கூடாது. சாப்பிட்டால் புத்தி, வீர்யம், தேஜஸ் குறைந்து விடும்.