கொல்லம் – எர்ணாகுளம் வழியில் திருவல்லா உள்ளது. 108 திவ்ய தேசங்களில் இது ஒன்று. நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களில் திருவல்லவாழ் என்று இவ்வூர் குறிப்பிடப்படுகிறது. சங்கரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒவ்வொரு ஏகாதசியும் விரதமிருந்து, துவாதசியன்று ஒரு பிரம்மச்சாரிக்கு அன்னமிடுவாள். ஒருமுறை பெருமாளே பிரம்மச்சாரியாக வந்தார். அவருக்கு பாக்கு மரத்தின் பாளையில் அன்னமும், உப்பு மாங்காயும் இட்டாள் அப்பெண். அவளுக்கு காட்சி கொடுத்தார் பெருமாள். இன்றும் அப்பெண்ணின் நினைவாக துவாதசி நாளில் பெருமாளுக்கு பாக்குமர பாளையில் அன்னமும், மாவடுவும் நைவேத்யம் செய்யப்படுகிறது. எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய என்பதைத் தவிர வேறு எதுவும் காதில் விழக்கூடாது என்பதற்காக தங்கத்தால் செய்யப்பட்ட மணிகளை காதில் அணிந்து வாழ்ந்த கண்டாகர்ணன் தவம் செய்த தலம் இது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பிள்ளைச் செல்வம் வேண்டி கதகளி நடனநிகழ்ச்சியை நேர்ச்சையாகச் செய்து, அதை ரசிக்கும் வழக்கம் இக்கோவிலில் உள்ளது.