சிவராத்திரி கொண்டாடுவதற்குரிய காரணங்கள் புராணங்களில் பலவாறாகக் கூறப்பட்டுள்ளது.
*பிரம்மா, விஷ்ணு இருவருக்கும் தன் விஸ்வரூபத்தைக் காட்ட விரும்பிய சிவன், வானுக்கும், பூமிக்குமாக வளர்ந்து நின்ற நாள். *சூரியனும், சந்திரனும் சிவனின் கண்களாக உள்ளனர். ஒருமுறை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலகமே இருளில் மூழ்கியது. மீண்டும் உலகம் ஒளி பெற தேவர்கள் சிவனை வழிபட்ட நாள். *ஒவ்வொரு யுக முடிவிலும் உலகம் அழியும். இந்த நாளில் பார்வதிதேவி தன் பிள்ளைகளான உலக உயிர்களை (மனிதர் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகள்) காக்க சிவனை இரவு முழுக்க கண்விழித்து வணங்கும் நாள். இதன்படியே உயிர்கள் மீண்டும் உலகத்தில் பிறக்கின்றன. *சாகா மருந்தான அமிர்தம் எடுப்பதற்கு தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது, ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதைக் குடித்த சிவனுக்கு தீங்கு நேராமல் இருக்க தேவர்கள் விரதமிருந்த நாளே சிவராத்திரி.