பதிவு செய்த நாள்
21
பிப்
2017
05:02
வள்ளலார் ராமலிங்க அடிகளாரால் புகழ்பெற்ற வடலூர் திருத்தலத்தில், கி.பி. 1872 ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ந் தேதி தைப்பூசத் திருநாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. வள்ளலார் ஞான பீடத்தில் தீபம் ஏற்றியதும், பக்தர்கள் இரண்டு கைகளையும் கன்னத்தில் போட்டுக் கொண்டு தீபத்தை தரிசித்துக் கும்பிட்டார்கள். மறுபுறம் வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இன்னொரு புறம் ஒருசிலர் அதிர்வேட்டுகள் போட்டு சந்தோஷத்துடன் கொண்டாடினர். அமைதியாக வழிபாட்டில் கலந்துகொள்ள வேண்டியவர்கள் இப்படி வெடிகள் வெடித்துக் கொண்டாடுவதைப் பார்த்துச் சகிக்க முடியாத சிலர், வள்ளலாரிடம் இதுபற்றி முறையிட்டனர். அவர்களிடம் வள்ளலார், காலம் காலமாக நடந்து வரும் வழக்கமான நிகழ்ச்சிதானே இந்த வாணவேடிக்கையும், வெடிகள் வெடிப்பதும். அது அவ்வளவு சீக்கிரத்தில் மாறி விடாது. அவர்கள் விருப்பப்படி நடத்தட்டும். விரைவில் நல்ல வழி பிறக்கும் என்றார்.
அப்பொழுது, வெடி வெடிக்கும் இடத்தில் கூன்முதுகுடைய ஒருவன், ஒரு பெரிய வெடிக்கு தீ வைத்தான். அது நெடுநேரம் வெடிக்கவில்லை. திரியில் பற்ற வைத்த தீ அணைந்து போயிருக்குமோ? என்று நினைத்த அவன், மீண்டும் திரியில் தீ வைக்க அதன் அருகே சென்று, தீ பற்றவைக்க முயன்றபோது அந்த வெடி திடீரென்று பலத்த சப்தத்துடன் வெடித்தது. கூன் முதுகுடைய அவன் உடம்பெல்லாம் தீப்பற்றி தூக்கி வீசப்பட்டான். இந்த தகவல், வள்ளலாருக்கு உடனே தெரிவிக்கப்பட்டது. வள்ளலாரும் ஞான சபை தரிசனத்துக்கு வந்தவர்களும், முதல் நாளன்றே அசம்பாவிதம் நடந்து விட்டதே என்று வருந்தினார்கள். வள்ளலார், கூன் முதுகுடைய அவனது உடல் கருகிய இடத்துக்கு வந்து அவனை கருணையுடன் பார்த்தார். பிறகு, உடல் கூனாகிப் போனாலும், உள் மனம் கூனற்றது. எளிய வாழ்வு. உயர்ந்த சிந்தனை என்ற நெறியில் வாழ்ந்தவன் நீ. எழுந்திடுவாய்... உடனே எழுந்திடுவாய் என்று அவனை ஆசீர்வதித்துத் தொட்டு எழுப்பினார். என்ன ஆச்சர்யம்? உறங்கி எழுந்தவன்போல் எழுந்தான் கூன்முதுகுடைய அந்த பக்தன். அவனது உடலில் புத்தொளி பரவி இருந்தது. அதுவரை கூனாகி இருந்த அவன் முதுகும் நிமிர்ந்தது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் வள்ளலாரை வணங்கித் தொழுதனர்.