கிருஷ்ணருக்கு விருந்தளித்து உபசரித்ததால் துரியோதனப் பரிவாரத்தின் இகழ்ச்சிக்கு ஆளானான் விதுரன். கோபம் தாளாமல் வில்லை முறிந்து எறிந்து விட்டு வெளியேறினான். தன்னைச் சந்தித்த கண்ணனிடம் ஆதங்கத்தைக் கொட்டினான் விதுரன். ஒரு தலைமை எப்படி இருக்கக்கூடாது என்பதை அவன் விளக்குவதாக பாரதம் சொல்கிறது. தகுதியற்ற தலைவன் (துரியோதனன்) ஒரு செயலைச் செய்வதால் ஏற்படும் விளைவுகளைக் கருதமாட்டான். அமைச்சர்களின் அறிவுரைகளையும் கேட்க மாட்டான். யார் யாருக்கு எது உரியதோ, அதை அவன் கொடுக்க மாட்டான். வருங்கால நிகழ்வு பற்றிய உணர்வு அவனிடம் இருக்காது. அவன் நாக்கு கண்டபடி பேசும். நிதானம் காக்காது. செல்வம் வந்து விட்டபிறகு தெய்வத்தைத் தொழ மாட்டான். எதைப் பேசுகிறோம் என்ற தெளிவு இன்றியே பேசுவான். தம் எதிராளியின் வலிமையைக் குறைத்து எடை போடுவான். வெற்றி ஒன்றே, அது எப்படி வந்தாலும் அவனது குறிக்கோளாக இருக்கும். அடாவடியாகச் செயல்படுவான். அதனால் வரும் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்க மாட்டான். இவை அனைத்தும் கெட்ட அரசனின் குணங்கள். இப்படிப்பட்டோரிடம் பணிபுரிய தமக்கு விருப்பமில்லை என்றான் விதுரன்.