பதிவு செய்த நாள்
27
ஜன
2018
12:01
திருத்தணி : முருகன் கோவிலில், நேற்று நடந்த தை கிருத்திகை விழாவில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். ஏழு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலில், தை மாத கிருத்திகையை ஒட்டி, அதிகாலை, 4:45 மணிக்கு, நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சாய்ரட்சை பூஜை மற்றும் இரவு, 7:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில், மாட வீதியில் உலா வந்தார்.
இவ்விழாவில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், மலைக்கோவிலில் குவிந்தனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்து காவடிகள் எடுத்து வந்தும் வழிப்பட்டனர். நேற்று குடியரசு தினம், இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை என, தொடர்ச்சியாக மூன்று நாட்கள் அரசு விடுமுறை என்பதால், கடந்த ஆண்டு தைக்கிருத்திகையை விட, நான்கு மடங்கு பக்தர்கள் கூட்டம் மலைக்கோவிலில் அலைமோதியது. பொதுவழியில் மூலவரை தரிசிக்க, பக்தர்கள், ஏழு மணி நேரமும், சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், 25 ரூபாயில், ஐந்து மணி நேரமும், 100 ரூபாயில், மூன்று மணி நேரமும், 150 ரூபாய் டிக்கெட்டில் இரண்டு மணி நேரமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் முருகப்பெருமானை தரிசித்தனர். பெரும்பாலான பக்தர்கள் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மலைக்கோவிலுக்கு வந்ததால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மலைப்பாதையில், 3 கி.மீ., கடப்பதற்கு, ஒன்றரை மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.நேற்று மலைக்கோவிலில் முறையாக பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபடாததால், பக்தர்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கடும் சிரமத்துடன் தான் மூலவரை வழிபட்டு, சென்றனர்.