பதிவு செய்த நாள்
15
மார்
2018
04:03
இன்று பங்குனி மாதப்பிறப்பு, மாத சிவராத்திரி, ‘சிவம் ’ என்ற சொல்லுக்கு ‘மங்கலம் ’ என்பது பொருள். அதன்படி சிவராத்திரி என்பதற்கு, மங்கலங்களை அருளும் இரவு என்பது பொருள். நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மங்கலம் வளர்ந்து நிறைவதற்காக, சிவபெருமானின் மங்கலகரமான நிகழ்வுகளைப் பற்றிய சிந்தனைகளைப் படிப்பதும் தியானிப்பதும் சிறப்பு. அவ்வகையில், முதலில் சுபமுகூர்த்தம் ஒன்றை, அபூர்வமான கல்யாணம் ஒன்றை தரிசிப்போமா? ஆதிசங்கரர் திருக்கயிலை சங்கரரை தரிசித்தார். “பரம்பொருளே, சகல உலகங்களையும் நீங்கள் சிருஷ்டி செய்கிறீர்கள். சகல உலகங்களிலும் இருக்கும் சகலருக்கும் நெருங்கிய உறவினரான நீங்கள், தூய்மையான ஞானாந்தக் கடலும் கூட இத்தகு மகிமை வாய்ந்த தாங்கள் அடியேனின் வேண்டுகோளை ஏற்க வேண்டும் ” என்று கயிலைநாதரிடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தார். என்ன வேண்டுகோள் தெரியுமா?
“பார்வதி தேவியுடன் நீங்கள் எழுந்தருளும் இந்த சன்னிதானத்தில் தங்கியிருந்து உங்கள் இருவருக்கும் பணிவிடை செய்வதற்காக, என் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்றார். இவ்வாறு சொன்னதோடு நிறுத்தவில்லை, “ என் பெண் நற்குணங்களால் உருவானவள்” என்றும் சொல்கிறார். அதுமட்டுமா? அவளைத் திருமணம் செய்துகொண்டு, வீட்டோடு மாப்பிள்ளையாக வரும்படியும் சிவபெருமானிடம் வேண்டுகோள் வைக்கிறார். ‘உலகம் போற்றும் உத்தமத் துறவியான ஆதிசங்கரருக்கு ஏது பெண் குழந்தை? என்ன இது, அபத்தமாக இருக்கிறதே?!’ என எண்ண வேண்டாம். இதற்கு ஆதிசங்கரரே விளக்கம் தருகிறார். கீழ்க்காணும் பாடலின் மூலமாக
சிவ தவ பரிசர்யா ஸன்னிதானாய கௌர்யா
பவ மம குண துர்யாம் புத்தி கன்யாம் ப்ரதாஸ்யே
ஸகல புவனபந்தோ ஸச்சிதானந்த ஸிந்தோ
ஸதய ஹ்ருதய கேஹே ஸர்வதா ஸம்வஸ த்வம்
ஆதிசங்கரர் எழுதிய ‘சிவானந்த லஹரி’யில் உள்ள அற்புதமான பாடல் இது. இதில்தான் தன் பெண்ணைப் பற்றியும் தன் வீட்டைப் பற்றியும் கூறுகிறார் ஆதிசங்கரர். மம குணதுர்யாம் புத்தி கன்யாம்: அதாவது, ‘நற்குணங்களை வகிக்கும், என் புத்தி எனும் கன்னியை உனக்கு அளிக்கின்றேன். அவளை மணம்செய்து கொண்டு, என் மனம் எனும் அந்தப்புரத்தில் எப்போதும் வசித்துக்கொண்டு இருக்கவேண்டும்’ என வேண்டுகிறார் ஆதிசங்கரர்! ஆக புத்தி நற்குணங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். அதை ஈசனிடம் சமர்ப்பிக்க வேண்டும். அம்பிகையும் ஈசனும் எப்போதும் நம்மனதில் இருக்கவேண்டும். இதுதான் அந்தப் பாடல் நமக்குத் தரும் கருத்தும் படிப்பினையும்.
இறைவனும் இறைவியுமாக நம் உள்ளத்தில் குடியேற வரும்போது, அவருக்குப் பூர்ணகும்பம் வைத்து வரவேற்க வேண்டாமா? அதன்படி, பூர்ணகும்பமும் வைத்து அழைக்கிறார் ஆதிசங்கரர். அந்தப் பூர்ணகும்பம் என்பது வழக்கமாக நாம் செய்யும் பூர்ண கும்பமல்ல. அது வேறுவிதமானது. நாம் செய்ய வேண்டிய பூர்ணகும்பத்துக்கு - கலசம், அதன் மேலே சுற்றி வைக்க வேண்டிய நூல், நிரப்ப வேண்டிய நீர், மாவிலைத் தளிர்கள், அவற்றின் மீது வைக்கவேண்டிய தேங்காய், சொல்லவேண்டிய மந்திரம் ஆகியவை அவசியம். இதை மனதில் வைத்துக்கொண்டு வாருங்கள்! ஆதிசங்கரர் தனது பாடல் மூலம் சொல்ல வருவது எளிமையாக நமக்குப் புரியும். “மனதாகிய குடத்தில், பக்தி என்ற நூலைச் சுற்றி வைத்திருக்கிறேன். அந்தக் குடத்தில் ஆனந்தம் என்ற நீரை நிரப்பி, மேலே உமது (சிவனார்) திருவடிகளையே மாவிலைகளாக வைத்திருக்கிறேன். அவற்றின் மேலே ஞானம் என்னும் தேங்காயை வைத்திருக்கிறேன். பின்னர், மந்திரமாக நமசிவாய மந்திரத்தைச் சொல்கிறேன். இந்தப் பூர்ணகும்பத்தை ஏற்று, எனக்கு அருள்செய்வீர்!” என்று பிரார்த்திக்கிறார் ஆதிசங்கரர். இப்படிப்பட்ட பூர்ணகும்பத்தை வைத்து அழைத்தால், சிவனார் ஓடோடி வந்து அருள்செய்ய மாட்டாரா என்ன?
ஆதிசங்கரர் பாடல் இதோ...
பக்தோ பக்தி குணாவ்ருதே முதம்ருதா
பூர்ணே ப்ரஸன்னே மன:
கும்பே ஸாம்ப தவாங்கிக்ர பல்லவயுகம்
ஸம்ஸ்தாப்ய ஸம்வித் பலம்
ஸத்வம் மந்த்ரம் உதீரயன் நிஜ
சரீராகார சுத்திம் வஹன்
புண்யாஹம் ப்ரகடீ கரோமி
ருசிரம் கல்யாணம் ஆபாதயன்
ஆதிசங்கரரின் வழியில் நம் மனதையே பூர்ண கும்பமாக்கி சிவனாரை வரவேற்று, அவரின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறுவோம்!