மதுரையை அழிக்கத்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததால் வருணன் கோபம் கொண்டான். இது சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடல் என்பதை அவன் உணரவில்லை. ஏழு மேகங்களையும் அழைத்தான். உலகில் உள்ள எல்லாக்கடல் நீர்களையும் குடித்து, மதுரையில் பேய் மழையாய்ப் பொழிந்து அந்நகரையே அழித்து வருமாறு கட்டளையிட்டான்.வருணனின் கட்டளையை மேகங்கள் நிறைவேற்றின. கடல்கள் அனைத்தும் வற்றுமாறு நீர் பருகி, உடல் கருத்து மதுரை நகரை மேகங்கள் முற்றுகை இட்டன. இடி முழக்கமிட்டன.
அபிஷேகப் பாண்டியனும் நகர மக்களும் பயந்து நடுங்கினர். சோமசுந்தரக் கடவுளிடம் ஓடினர். திருவடிதொழுது முறையிட்டனர். இறைவனும் தம் முடி மீதுள்ள நான்கு மேகங்களையும் அழைத்தார். "நீங்கள் நால்வரும் நான்கு திசைகளிலும் நான்கு மாடங்களாய் நின்று ஏழு மேகங்களையும் விலக்குவீர்! என ஆணையிட்டார். இறைவனின் ஆணை வழி நான்கு மேகங்களும் மதுரையைச் சூழ்ந்து, வளைத்துக் காத்து நின்றன. அவற்றின் மீது விழுந்த மழைத்துளிகள் உடைந்து சிதறின.
வருண தேவன் வெட்கமுற்றான். இதனை சிவனாரின் திருவிளையாடல் என்பது உணர்ந்தான். பெற்றாமரைக் குளத்திற்கு வந்தான். குளத்தை நெருங்கியதுமே நெடுநாட்கள் அவனை வாட்டிக்கொண்டிருந்த வயிற்றுவலி நீங்கியது. குளத்தில் நீராடி சோமசுந்தரக் கடவுளைத் தொழுது தன் அறியாமையாற் செய்த பிழையை மன்னிக்குமாறு வேண்டினான். வருணனின் மேகங்களைத் தடுப்பதற்காகச் சிவனார் அனுப்பிய நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாய்க் கூடி நின்றமையால் மதுரை நகர் நான்மாடக்கூடல் என்னும் பெயரையும் பெற்றது.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »