காஞ்சி நகரை ஆண்ட காடு வெட்டிய சோழன் என்பவன் சிறந்த சிவபக்தன். அவன் மதுரையில் எழுந்தருளி உள்ள சோமசுந்தரக் கடவுளைத் தரிசிக்க வேண்டும் என்று பெரு விருப்பம் கொண்டிருந்தான். ஒருநாள் கனவில் சிவபெருமான் சித்தர் வேடத்தில் தோன்றி ‘நீ மட்டும் தனியாய் இன்றே புறப்பட்டு மதுரைக்கு வா. மாறுவேடத்தில் வந்து என்னை தரிசித்துச் செல்!” என்று கூறி அருளினார்.
அவ்வாறே சோழன் யாரும் அறியாமல் மாறுவேடத்தில் நடந்தே மதுரைக்குப் புறப்பட்டான். வைகைக்கரையை அடைந்தான். வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைக் கண்டு கடக்கும் வழி அறியாது திகைத்தான். அப்போது இறைவன் சித்தர் வேடத்தில் தோன்றி ஆற்று நீரை வற்றச் செய்தார். வடக்கு மதிலின் வாசலைத் திறந்து உள்ளே அழைத்துச் சென்றார். குளத்தில் சோழனை நீராடச் செய்தார். தம்மையும், மீனாக்ஷி அம்மையையும் மனம் குளிர வணங்குவித்தார். தரிசனம் முடிந்த பின் சோழனை அதே வடக்கு வாசல் வழியே அழைத்துச் சென்று வைகை வடகரை வரை துணை வந்து வழி அனுப்பி வைத்தார். இறைவன் திரும்பித் தன் ஆலயம் செல்லும்போது வடக்கு மதில் கதவை மூடி இடபமுத்திரை இட்டார்.
மறுநாள் காவலர், எல்லா வாசல்களிலும் தாம் வைத்த மீன் முத்திரை இருக்க வடக்கு வாசலில் மட்டும் இடப முத்திரை இருந்தது கண்டு, உடனே பாண்டியனுக்குத் தெரிவித்தனர். பாண்டியனும் முத்திரை மாறியதன் காரணம் அறியாது திகைத்தான். அன்றிரவு அவனது கனவில் தோன்றிய இறைவன் நடந்ததைத் தெரிவித்து - தாமே இடப முத்திரை பொறித்ததையும் உணர்த்தி மறைந்தார். விழித்தெழுந்த குலபூஷணப் பாண்டியன் சிவபெருமானின் திருவிளையாடலை கருணைத் திறத்தை எண்ணி வியந்தான்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »