இராஜேந்திர பாண்டியன் மதுரை ஆண்டு வந்த போது காடு வெட்டிய சோழன் தன் மகளை அவனுக்கு மணம் முடித்துத்தர இசைந்தான். இதைக் கேள்விப்பட்ட இராஜேந்திர பாண்டியனின் தம்பி அரசசிங்கன் யாரும் அறியாது காஞ்சி நகருக்கு சென்று சோழனைக் கண்டு பேசி அவனது மகளைத்தானே திருமணம் செய்து கொண்டான்.
எனவே தம் மருமகனை பாண்டிய நாட்டின் அரசனாக்கப் பெரும்சேனையும் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தான் காடு வெட்டிய சோழன். இதை அறிந்த பாண்டியன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்தான். இறைவனின் திருவருளால், ‘நீ சோழனுடன் போரிடு, வெற்றி உனக்கே’! என்ற அசரீரி எழுந்தது. இறையருளின் துணையுடனும் தன் சிறு படையுடனும் போர்க்களத்திற்கு வந்தான் பாண்டியன்.
பெரும்போர் தொடங்கியது. கூடவே வெயிற்காலம்! சூரியனின் வெம்மை வீரர்களை வாட்டியது. பாண்டிய வீரர்களைக் காக்கும் பொருட்டும் இறைவன் தவக்கோலம் பூண்டு பாண்டிய படை நடுவில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து வெயிலின் வெம்மையில் இருந்தும் பாண்டிய வீரர்களைக் காத்தார். இறைவனிடம் நீர் பெற்று பருகிய பாண்டிய வீரர் மிகுந்த பலம் பெற்றவராய் சோழப்படை மீது சாடி அழித்து வெற்றிக்கொடி நாட்டினர். கைது செய்யப்பட்ட காடு வெட்டிய சோழனையும், தம்பி அரசசிங்கப் பாண்டியனையும், இராஜேந்திர பாண்டியன் மன்னித்து அனுப்பினார். பகைவரையும் மன்னிக்கும் பண்பால் பெரும்புகழ் பெற்றான் இராஜேந்திரப் பாண்டியன்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »