மதுரைக்கு அருகில் உள்ள திருப்புவனத்தில் பொன்னனையாள் என்னும் கணிகை இருந்தாள். திருப்புவன நாதரின் கோவில் பணியாற்றிய அவள் அழகு மிகுந்தவள். சிறந்த சிவபக்தி கொண்டவள். அவளது பக்திப் பெருக்கை உலகத்தவருக்கு உணர்த்தத் திருஉளம் கொண்டார் சிவபெருமான்.
பொன்னனையாள் தினந்தோறும் தம் வீட்டில் சிவனடியார் பலருக்கு திருவமுது படைத்து வந்தாள். ஒருநாள் சிவபெருமான் சித்தர் வேடம் தாங்கி அவளது வீட்டிற்கு வந்தார். ஆனால் மற்ற அடியார்களுடன் திருவமுது செய்யாது திண்ணையில் தனியே அமர்ந்திருந்தார். அதுகண்ட வேலைக்காரி சாப்பிட அழைத்தாள். அவளிடம் “உங்கள் தலைவியை இங்கே அனுப்பு” என்றார் சித்தமூர்த்தி. தலைவியிடம் தெரிவித்தாள் பனிப்பெண். விரைந்து வந்தாள் பொன்னனையாள். ‘உன் உடல் ஏன் மெலிந்துள்ளது? என்றார். அதற்குப் பொன்னனையாள் பெருமானே சிவபெருமானின் திருவுருவத்தைப் பொன்னால் முடிக்க ஆசை! என்னிடம் அவ்வளவுப் பொன் இல்லை. இதுவே என்மனக்குறை. இம்மனக்குறையே என் உடல் மெலிவிற்குக் காரணம்!” என்றாள். உடனே சித்தமூர்த்தி அவளது வீட்டில் உள்ள பித்தளை, ஈய பாத்திரங்களைக் கொண்டு வரச்சொல்லி அவற்றின் மீது திருநீற்றினைத்தூவினார்” இன்றிரவு இவற்றை நெருப்பில் இட்டால் எல்லாமே பொன்னாகி விடும்” என்று கூறி மறைந்தார்.
உடனே பொன்னனையாள் வந்தவர் மதுரையில் கோவில் கொண்டுள்ள சோமசுந்தரக் கடவுளே என்பதை அறிந்து ஆனந்தப் பரவசத்துடன் மெய்மறந்து நின்றாள். அன்றிரவே ஈய, பித்தளைப் பாத்திரங்களை நெருப்பில் இட்டு தங்கம் ஆக்கி இறைவனின் திருஉருவத்தைப் பொன்னால் சமைத்தாள். பொன்னனையாளின் மனக்குறை இறைவனின் ரசவாதத் திருவிளையாட்டால் நீங்கியது.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »