சிறந்த சிவபக்தனான வரகுணபாண்டியன் ஒருநாள் வேட்டையாடிவிட்டு இரவு மதுரைக்குத் திரும்பும்போது அவனது குதிரையின் காலால் மதியுண்டு அந்தணன் ஒருவர் இறந்து விட்டான். எனவே பாண்டியனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்து வாட்டியது. தோஷம் நீங்க கோவிலை 1008 முறை வலம் வந்தான். அப்போது அவன் மீது படை எடுத்து வந்த சோழனைத் தோற்கடித்து துரத்திச்செல்லும்போது திருவிடைமருதூர் வந்தான்.
இறைவனை வணங்க விரும்பிய பாண்டியன் கிழக்குவாசல் வழியே கோவிலுக்குச் சென்றான். கோவிலுக்குள் செல்ல முடியாத பிரம்மஹத்தி கிழக்கு வாசலிலேயே தங்கிவிட்டது. இறைவனைத் தொழுதான் பாண்டியன். “உன்னைப் பிடித்த பிரம்மஹத்தி கிழக்கு வாசலில் நிற்கிறது. எனவே நீ மேற்கு வாசல் வழியே செல்!” என்ற தெய்வவாக்கு ஒலித்தது. மேற்கு வாசல் வழியே வெளியே வந்த பாண்டியன் தன் பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய மேற்கு வாசலில் கோபுரம் கட்டித் தன் நன்றிக்கடனை ஆற்றினான்.
வரகுணபாண்டியனுக்குச் சிவலோகத்திற்குச் சென்று அங்கே சிவபெருமான் வீற்றிருக்கும் அழகுக் காட்சியைக் காணவேண்டும் என்ற ஆசை பிறந்தது. பக்தனின் ஆசையை அறிந்த இறைவன் சிவலோகத்தை மதுரை நகரிலேயே வரவழைத்தார். நந்தியெம்பெருமானை அழைத்து பாண்டியனுக்குச் சிவலோகம் முழுதும் காட்டச் செய்தார். பாண்டியன் சிவலோகத்தைச் சுற்றிப் பார்த்து சிவபெருமானின் தரிசனம் பெற்றதும் மீண்டும் அது மறைந்தது. எனவே, மதுரை நகர் அன்று தொட்டு “பூலோகச் சிவலோகம்” என்னும் சிறப்பு பெறலாயிற்று.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »