வரகுண பாண்டியனின் அரசவைக்கு ஏமநாதன் என்னும் பெயருடைய வடநாட்டு யாழ்பாணன் வந்தான். அவனது இசையைக் கேட்டு மகிழ்ந்த பாண்டியன் பெரும் பரிசில் வழங்கி கௌரவித்தான். பாணபத்திரனை அழைத்து “நாளை நீ ஏமநாதனுடன் இசைப்போட்டியிட வேண்டும்” என்று கட்டளையும் இட்டார். பாவம், பாணபத்திரன், ஏமநாதனின் இசைப்புலமையை உணர்ந்தவன். தன்னால் அவனுடன் போட்டியிட்டு வெல்ல முடியாது என்பதை அறிந்தவன். எனவே அனுதினமும் தான் பூஜிக்கும் சோமசுந்தரக் கடவுளிடம் சென்று முறையிட்டான். பக்தனைக் காக்கத் திருவுளம் கொண்டான் இறைவன்.
விறகு வெட்டியாய் வேடம் தாங்கினான். தெருத்தெருவாய் விறகு விற்று அலைந்தான். விலை கேட்போருக்கு வாங்க முடியாத அளவு அதிகவிலை கூறினான். மாலை மயங்கும் நேரத்தில் ஏமநாதன் தங்கி உள்ள வீட்டுத்திண்ணையில் வந்து அமர்ந்தான். சாதாரிப்பண்ணில் இனிய இசை பாடினான். ஆம், ஆடவல்லான் பக்தனுக்காக இசை பாடவும் வல்லானானான்! இசையில் மயங்கிய ஏமநாதன் விறகு வெட்டியிடம், ‘நீ யாரப்பா?’ என்று கேட்டான்.
“நான் பாணபத்திரனின் மாணவன் என்றாலும் இசைபாட தகுதிஇல்லை என்று என்னை ஒதுக்கி விட்டார்!” என்றதும் திகைத்தான் ஏமநாதன். தகுதி அற்ற மாணவனின் இசை அதை கற்பிக்கும் ஆசிரியர் பாணபத்திரனின் இசை நினைத்துப் பார்த்ததும் நடுங்கியது ஏமநாதனின் மனம். பாணபத்திரனுடன் இசைப்போட்டியில் கலந்து கொள்ளப் பயந்த ஏமநாதன் இரவோடிரவாக ஓடிவிட்டான். அன்றிரவே பாணபத்திரனின் கனவில் தோன்றிய இறைவன் நடந்ததைத் தெரிவித்தார். மறுநாள் பாணபத்திரன் இவ்வதிசயத்தை எம்பெருமானின் திருவிளையாடலை மன்னனிடம் தெரிவித்தான். ஈசனின் அருட்திறத்தை எண்ணி வியந்தனர்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »