தம் திருவிளையாடலால் இறைவன் பாணபத்திரனை ஆட்கொண்ட நாள்முதல் பாணபத்திரன் சோமசுந்தரக் கடவுளைப் பாடுவதே தன் தொழிலாய்க் கொண்டான். பிற வேலைகளை விட்டான். எனவே வருமானம் இன்றி அவனது வீட்டில் வறுமை தலை விரித்தாடத் தொடங்கியது. அடியாரின் துன்பம் காணப் பொறுக்காத இறைவன், பாணபத்திரனின் கனவில் தோன்றி, ‘சேரமானிடம் செல், நான் எழுதித்தரும் திருமுகத்தைத் தா. அவன் உனக்கு வேண்டிய பொருள் தருவான்!” எனக் கூறி மறைந்தார். தூக்கம் நீங்கி விழித்த பாணபத்திரன் தன் தலைமாட்டில் இறைவன் சேர அரசனுக்கு எழுதிய திருமுகம் இருக்கக் கண்டு இறைவனின் திருவிளையாட்டை எண்ணி வியந்தான். மறுநாளே சேரநாட்டுக்குப் புறப்பட்டான்.
இறைவன் சேரமானின் கனவிலும் தோன்றி தன் திருமுகத்துடன் வரும் பாணபத்திரனுக்குப் பெரு நிதியம் அளிக்குமாறு ஆணையிட்டார். அவ்வாறே சேரமான் பாணபத்திரனை எதிர்கொண்டழைத்து இறைவன் திருமுகத்தைப் பெற்று மகிழ்ச்சியுடன் ஏராளமான பொருட்களைக் கொடுத்தனுப்பினான். குசேலனாய் மதுரையில் இருந்து புறப்பட்ட பாணபத்திரன் குபேரனாய் மதுரைக்கு வந்து சேர்ந்தான்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »