பதிவு செய்த நாள்
09
அக்
2019
03:10
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள், செவ்வாய் தோஷம் உள்ள பெண்களைத்தான் மணம் செய்ய வேண்டுமா?
மற்ற கிரகங்களை விட செவ்வாய் கிரகத்துக்கு ஜோதிடத்தில் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. குறிப்பாக, ஆண்-பெண் இருவரது ஜாதகத்தையும் இணைத்து வைத்து திருமணத்துக்காக பொருத்தம் பார்ப்பதில் செவ்வாய் கிரகத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. ஏனென்றால், செவ்வாய் கிரகம் மூலம் ஒருவரின் உடலில் ஓடும் ரத்தத்தைப் பற்றிய விபரங்களை துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம். மேலும், அதிக வெப்பமுடைய கிரகமான பூமிக்கு அதிபதியான செவ்வாய் கிரகம் மூலம் ஒருவர் இந்த பூமியில் எவ்வாறு வாழக்கையை நடத்துவார், எங்கு வாழ்வார், எப்படி வாழ்வார்? என்பதையும், மன வலிமை, உடல் வலிமை உண்டா? இல்லையா? என்பதையும் துல்லியமாகக் கணக்கிட்டு அறிந்து கொள்ள முடியும். ஆகவே, ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தை பரிசீலித்து திருமணப் பொருத்தம் பார்ப்பது முக்கியமானது.
இவ்வாறு பரிசீலிக்கப்பட்ட ஜாதகத்தில் செவ்வாய் கடக ராசியில் நீசம், லக்னத்திலிருந்து 8, 12 ஆமிடத்தில் மறைதல் போன்றவற்றால் தோஷமுள்ளதாக இருந்தால் - பொதுவாக, அது செவ்வாய் தோஷம் எனப்படும். இவ்வாறு செவ்வாய் தோஷ முள்ளவர்கள் அதற்கான பரிகாரத்தை செய்தாலும்கூட மிகக் குறைவான அளவாவது செவ்வாய் தோஷம் இருக்கத்தான் செய்யும். ஆகவே, அதேபோல் செவ்வாய் தோஷமுடைய மற்றொரு ஜாதகத்துடன் இணைத்து திருமணம் நடத்தினால் அந்த செவ்வாய் தோஷம் விலகி நன்மை கிட்டும். இது செவ்வாய் தோஷத்துக்கு மட்டுமல்ல; குழந்தை பாக்கியத்தைத் தரும் குரு, ஆயுளைத் தரும் சனி முதலான அனைத்து கிரகத்துக்கும்தான்.
நெகடிவ்+ நெகடிவ் - பாஸிட்டிவ் என்னும் ஃ பார்முலாவுக்கு ஏற்ப, ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரகம் தோஷமுள்ளதாக இருந்தால் அதே கிரகதோஷமுள்ள ஜாதகத்துடன் இணைத்து திருமணம் செய்து வைத்தால் கருத்தொற்றுமை ஏற்பட்டு வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.