பதிவு செய்த நாள்
15
அக்
2024
05:10
கடகம்; புனர்பூசம் 4 ம் பாதம்.. தெளிவான சிந்தனையுடன் பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நன்மைகளை வழங்கி வந்த குரு பகவான், மாதம் முழுவதும் வக்ரம் அடைவதால் பொருளாதார நிலையில் தடையும், முயற்சியும், இழுபறியும் உண்டாகும். சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் உடல் நிலையில் கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது. பெண்கள் குடும்பத்தலைவர் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. சில வேலைகள் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கும். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேது பகவான் உங்களைக் கவசம்போல் பாதுகாப்பார்.எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். சுக்கிரனால் முன்னேற்றம் உண்டாக்கும். பொன் பொருள் சேர்க்கைக்கு வழி வகுப்பார். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகளை நீக்கி வைப்பார். பணியாளர்கள் சிலருக்கு உழைப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஏற்படும். எடுத்த வேலை சில நேரங்களில் இழுபறி ஆனாலும் வருமானம் தடையின்றி வரும். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். வரவு செலவில் இருந்த சங்கடம் விலகும். எடுக்கின்ற ஒவ்வொரு வேலையிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதும், முதலாளிகள் பேச்சைக் கேட்டு செயல்படுவதும் சங்கடங்களை அண்ட விடாமல் செய்யும். குடும்பத்திலும் பிறர் வார்த்தைக்கு மதிப்பளித்து செயல்படுவது இக்காலத்தில் அவசியம். உடல் நிலையில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
சந்திராஷ்டமம்: நவ 9.
அதிர்ஷ்ட நாள்: அக் 20, 21, 29, 30. நவ 2, 3, 11, 12.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.
பூசம் : நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு வாழும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். நவம்பர் 4 ம் தேதி முதல் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்கிடக் கூடிய சனிபகவான் சில நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உண்டு. உடல், மனரீதியாக சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும்.உங்களுக்கு குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் தெளிவில்லாமல் செயல்பட வேண்டிய நிலைக்கு ஆளாவீர். பதட்டம், பரபரப்பு எல்லாம் பற்றிக் கொள்ளும். தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைத்து அதனால் சங்கடங்களை சந்திக்க வேண்டிய நிலை வரும். உங்கள் முயற்சி எல்லாம் வெற்றியாகும். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் முயற்சிக்கேற்ப லாபம் காண முடியும். வரவில் எந்த ஒரு தடையும் இருக்காது. வார்த்தைகளில் நிதானம் தேவை. வரவு செலவில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்கள் எச்சரிக்கையாக இருப்பதும், வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை கொள்வதும் அவசியம். விட்டுக் கொடுத்து செயல்படுவது நன்மையை உண்டாக்கும். ஒரு சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். தொழிலை விருத்தி செய்வதற்கு மேற்கொண்ட முயற்சி லாபத்தை உண்டாக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: நவ 10
அதிர்ஷ்ட நாள்: அக் 17, 20, 26, 29.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானை வழிபட சங்கடம் தீரும்.
ஆயில்யம் : உலக அறிவும், செயல்களில் தெளிவும், நிதானமாக ஒவ்வொன்றையும் நடத்தி முடிக்கும் ஆற்றலும் பெற்ற உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் பிறரை அனுசரித்துச் சென்று ஆதாயம் காணும் மாதமாக இருக்கும். அக் 25 வரை புத பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்த்த வரவு இருக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். செய்து வரும் வியாபாரத்தை விரிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். நெருக்கடிகளை சமாளிக்கின்ற அளவிற்கு வருமானம் வரும். அதே நேரத்தில் வழக்கத்தைவிட வேலை பளு கூடுதலாகும். உத்யோகம் பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடி ஏற்படும். ஒரு சிலருக்கு வெளியூர் மாற்றம் ஏற்படும். சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் உடல்நலையில் கூடுதல் கவனம் செலுத்தி வருவது நல்லது. சூரியனால் அலைச்சலும் உழைப்பும் இருந்து கொண்டே இருக்கும். மூன்றாம் இடத்து கேது நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். வருமானத்திற்குரிய வழியை உண்டாக்குவார். வெற்றி அடைய வேண்டிய மாதம். எந்த ஒன்றையும் ஒரு முறைக்கு இருமுறை கவனமாக யோசித்து அதன் பிறகு செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் கவனம் கூடும். பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
சந்திராஷ்டமம்: நவ 11
அதிர்ஷ்ட நாள்: அக் 20, 23, 29, நவ 2, 5, 14.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.