பதிவு செய்த நாள்
13
டிச
2024
01:12
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்.. சாதுர்யமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். சனி பகவான் ஆட்சியாக சஞ்சரித்து வருவதால் செய்து வரும் தொழிலில் அதிக அக்கறை தேவை. அரசு ஊழியர்களின் செயல்பாட்டிற்கேற்ப பலன் உண்டு. எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு மெமோவும் கிடைக்கும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள் வேலையில் கவனமாக இருப்பதும், பிறரை அனுசரித்துச் செல்வதும் நல்லது. ஒரு சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். சனி பகவானின் பார்வை உண்டாவதால் செலவு அதிகரிக்கும். நண்பர்களுடன் மனஸ்தாபம், வாழ்க்கைத் துணையிடம் பிரச்னை ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். சூரியனால் அரசு வழி முயற்சியில் கவனம் வேண்டும். அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். வியாபாரிகள் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் சட்ட சிக்கல்களுக்கு ஆளாவீர்கள். வழக்கு விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். சுக்ரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பண வரவிற்கு குறைவிருக்காது. நினைத்த வேலைகளை நடத்தி காண்பீர்கள். புதனால் புதிய முயற்சி வெற்றியாகும். சிலருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: டிச. 30.
அதிர்ஷ்ட நாள்: டிச. 19, 24, 28. ஜன. 1, 6, 10.
பரிகாரம்: பைரவரை வழிபட நன்மை உண்டாகும்.
ரோகிணி: வாழ்வின் யதார்த்தத்தை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் அலைச்சல் குறையும். சனி பகவான், அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
புதிய முயற்சிகளில் இறங்குவதற்கு முன் அது பற்றி நன்றாக தெரிந்து கொண்டு முடிவிற்கு வரவும். வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. ராகுவினால் எதிர்பார்த்த வரவு வரும், அதே நேரத்தில் செலவுகளும் ஏதாகிலும் ஒரு வகையில் உங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். வேலையின் காரணமாக அலைச்சல் கூடும். வெளியூர் பயணம் ஏற்படும், வேலையின் நிலை இருக்கும். உங்களைப் புரிந்து கொள்ள முடியாத காலமாக இந்த மாதம் இருக்கும். இருந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்திடக்கூடிய சக்தியினை டிச. 30 வரை சுக்ரனும், ஜன. 1 முதல் புதனும் உங்களுக்கு வழங்குவர். நெருக்கடி வந்தாலும் அவை வந்த வழி தெரியாமல் போகும். எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர் மட்டும் கவனமாக செயல்படுவது அவசியம். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்னை எழுந்தாலும் அதனைத் தள்ளி வைப்பது நல்லது. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், நண்பர்களுடனும், உடன் பணிபுரிபவர்களுடனும் விட்டுக் கொடுத்துச் செயல்படுவதும் நன்மையை உண்டாக்கும். ஆசிரியர்களின் அறிவுரையின்படி மாணவர்கள் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: டிச. 31.
அதிர்ஷ்ட நாள்: டிச. 20, 24, 29. ஜன. 2, 6, 11.
பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட்டால் வெற்றி உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த வேலைகளை நடத்தி முடிக்கும் ஆற்றல் பெற்ற உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோசித்து செயல்பட வேண்டிய மாதம். குரு, செவ்வாய், சூரியன், சனி சஞ்சரிப்பதால் செயல்களில் குழப்பமும் தடுமாற்றமும் ஏற்படும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் வருமானத்திற்கு வழிகாட்டுவார். வெளிநாட்டு தொடர்புகளில் லாபத்தை உண்டாக்குவார். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் லாபம் கூடும். பங்கு மார்க்கெட்டில் வருமானம் அதிகரிக்கும். திடீர் வாய்ப்புகளால் அதிர்ஷ்டம் உண்டாகும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்கு முன் நன்றாக யோசிப்பதும், சூழ்நிலை அறிந்து செயல்படுவதும் நல்லது. பணியாளர்கள் மேலதிகாரிகள், முதலாளிகள் வழிகாட்டுதல்படி செயல்படுவதால் சங்கடம் ஏற்படாமல் போகும். முடிந்தவரை உடன் பணிபுரிபவர்கள், வாழ்க்கைத்துணை, நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய தொழில் தொடங்கும் முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அதிக கவனம் செலுத்துவதும், பூர்வீக சொத்து விவகாரத்தில் விட்டுக்கொடுத்து செயல்படுவதும் நல்லது. சுக்ரனும், புதபகவானும் வழிகாட்டுவார்கள். எதிர்பார்த்த வருவாய் வரும். உங்கள் புத்தி சாதுரியம் வெளிப்படும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: டிச. 31, ஜன. 1.
அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 24, 27. ஜன. 6, 9.
பரிகாரம்: வராகியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.