பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
01:04
மீனம்: பூரட்டாதி 4 ம் பாதம்.. அனைவருக்கும் முன்னோடியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, சித்திரை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். குரு பகவான் மே 11 வரை மூன்றாம் இடத்தில் சஞ்சரித்து உங்கள் ராசிக்கு 7, 9, 11 ம் இடங்களைப் பார்ப்பதால் நண்பரால் அனுகூலம், குடும்பத்தில் நிம்மதி, கூட்டுத்தொழிலில் ஆதாயம், பெரியோரின் ஆதரவு, இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியடைதல், வியாபாரத்தில் லாபம் என்பதுடன், திருமண வயதினருக்கு தகுதியான வரன். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், கணவரைப் பிரிந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்புகளை வழங்குவார். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். மாதம் முழுவதும் சுக்கிரன் ராசிக்குள் உச்சம் அடைந்திருப்பதால் பொருளாதாரம் உயரும். பொன், பொருள் சேர்க்கை இருக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். தன, குடும்ப வாக்கு ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சூரியன் உச்சமாக சஞ்சரிக்கும் நிலையில், விரய சனியின் பார்வையும் குடும்ப ஸ்தானத்திற்கு உண்டாவதால் முடிந்தவரை குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். வார்த்தைகளில் நிதானம் தேவை. யாரிடமும் உங்கள் கோபத்தை இக்காலத்தில் வெளிப்படுத்த வேண்டாம். மாணவர்கள் உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். பணியாளர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவதும், உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வதும் அவசியம்.
சந்திராஷ்டமம்: மே10.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.21,30, மே3,12
பரிகாரம்: நடராஜரை வழிபட நன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி: நினைத்ததை சாதிக்க விரும்பும் உங்களுக்கு, சித்திரை மாதம் முயற்சியால் முன்னேற்றம் காணும் மாதமாக அமையும். விரய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரித்து பல வழியிலும் செலவுகளை அதிகரித்து வரும் நிலையில், தன, குடும்பாதிபதியான செவ்வாய் ஐந்தாம் இடத்தில் நீச்சம் அடைவதால் பிள்ளைகள் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பூர்வீக சொத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். மனதில் புதிய சிந்தனை அரும்பும். உங்கள் விருப்பம் எதுவோ அதைத் தேடி மனம் இயங்கும். கடந்த ஒன்றரை வருடமாக உங்கள் ராசிக்குள் சஞ்சரித்த ராகு பகவான் ஏப்.26 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது ஒரு வகையில் உங்களுக்கு நன்மையாகும். அதே நாளில் கேது ஏழாம் இடத்தை விட்டு ஆறாம் இடத்திற்கு செல்வதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்னை, அவமானம், நெருக்கடி எல்லாம் உங்களை விட்டுச் செல்லும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகி ஆரோக்கியமாக நடமாடும் நிலையுண்டாகும். வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். வெளிவட்டாரத்தில் மீண்டும் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவர். போட்டியாளர்கள் பலம் இழப்பர். வியாபாரம் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும் என்றாலும் செலவுகள் பலவழியில் உண்டாகிக் கொண்டே இருக்கும். கையில் உள்ள பணத்தை நிரந்தர வைப்பு, இடத்தில் முதலீடு செய்வது நல்லது. இல்லையெனில் வீண் செலவு ஏற்பட்டு பணம் கரையும். என்னதான் பிரச்னைகள் வந்தாலும் ஜென்ம ராசிக்குள் உச்சமாக சஞ்சரிக்கும் சுக்கிரன் நன்மை வழங்குவார். வரவிற்கு வழிகாட்டுவார். சந்தோஷத்திற்கு வாய்ப்பளிப்பார். உங்களுடைய சுய வாழ்க்கை என்பது நீங்கள் நினைத்தபடி இருக்கும் என்றாலும், முடிந்தவரை குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானம் காப்பதும் நல்லது. மாணவர்கள் உயர்கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். விவசாயிகள் கவனமுடன் செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஏப்.14, மே11
அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,21,26,30,மே3,8,12
பரிகாரம்: குச்சனூர் சனிபகவானை வழிபட நன்மை உண்டாகும்.
ரேவதி: திட்டமிட்டு செயல்பட்டு முன்னேற்றம் காணும் உங்களுக்கு, சித்திரை மாதம் யோகமான மாதமாகும். புதபகவான் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தெளிவாக சிந்தித்து லாபம் வரும் என தெரிந்தால் மட்டுமே எந்த வேலையிலும் ஈடுபடுவீர்கள். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் வரும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள். குரு பகவானின் பார்வையால் பாக்கிய ஸ்தானம் பலம் பெறுவதால் வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து மனதில் நிறையவே ஆசைகளை உண்டாக்கி வந்த ராகு ஏப். 26 முதல் விரய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதால் உங்கள் செயல்பாட்டில் மாற்றம் இருக்கும். குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவீர்கள். தவறான நண்பர்களை விட்டு விலகுவீர்கள். திருமண வயதினருக்கு வரன் அமையும். வேலைக்கான முயற்சியில் எதிர்பார்த்த தகவல் வரும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நல்லது. ராசிக்குள் சஞ்சரிக்கும் சுக்கிரனால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும் என்றாலும், விரய செலவு தொடரும். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. கையில் இருக்கும் பணத்தை இக்காலத்தில் பத்திரப்படுத்த வேண்டும். நகை, இடத்தில் முதலீடு செய்தால் இழப்பை தவிர்க்கலாம். மாணவர்கள் பெரியோரின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நன்மை தரும்.
சந்திராஷ்டமம்: ஏப்.14,15,மே12
அதிர்ஷ்ட நாள்: ஏப்.21,23,30,மே3,5,14
பரிகாரம்: திருப்பதி வேங்கடவனை வழிபட்டால் நன்மை சேரும்.