பதிவு செய்த நாள்
13
மே
2025
05:05
அசுவினி: நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பிரச்னை, பிள்ளைகளால் கவலை என்று ஏற்பட வாய்ப்பிருந்தாலும், லாப ஸ்தானத்தில் கர்மக்காரகன் சனியும், யோகக்காரகன் ராகுவும் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட தடை எல்லாம் விலக ஆரம்பிக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். மூடிக்கிடந்த தொழில்கள் மறுபடியும் இயங்க ஆரம்பிக்கும். வியபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளியூர் பயணத்தினால் லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குரு பகவானின் பார்வைகளால் திருமண வயதினருக்கு வரன் வரும். சொந்த வீடு வாங்குவதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னைகளில் முடிவு உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். உங்கள் செயல்களில் தெளிவு இருக்கும். விவசாயிகளுக்கு முன்னேற்றமாக இருக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 8, 9.
அதிர்ஷ்ட நாள்: மே. 16, 18, 25, 27. ஜூன். 7.
பரிகாரம்: விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.
பரணி
வாழ்வில் எப்போதும் முன்னேற்றத்தை நோக்கியே நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் சுக்கிரனின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் உங்களிடம் தெளிவு ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலக ஆரம்பிக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பொன் பொருள் சேரும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தொழிலை விரிவு செய்வதற்காக வங்கியில் கேட்டிருந்த பணம் கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சேமிப்பு உயரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் குடும்ப சொத்துகளில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்றாலும், அதைப் பேசித்தீர்ப்பீர்கள் குழந்தைகள் மீது அக்கறை எடுப்பீர்கள். அவர்கள் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். வீ்ண் பிரச்னைகளை சந்திப்பீர். லாப ராகுவால் வியாபாரத்தில் உங்கள் கவனம் அதிகரிக்கும். தனியாரில் பணியாற்றி வருபவர்கள் சிலர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி மேற்கொள்வீர்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். விவசாயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வு முடிவு சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். தொண்டர்கள் பலம் கூடும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 10, 11.
அதிர்ஷ்ட நாள்: மே 15, 18, 24, 27. ஜூன். 6, 9.
பரிகாரம்: துர்கையை வழிபட நன்மை உண்டாகும்.
கார்த்திகை 1 ம் பாதம்
எடுத்த வேலையை முடிப்பதில் முதலிடத்தில் இருக்கும் உங்களுக்கு எப்போதும் யோகப் பலன்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் கடந்த மாதத்தை விட நன்மையான மாதம். குடும்ப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. வரவு செலவில் எச்சரிக்கை அவசியம். இக்காலத்தில் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது உங்களுக்கு நல்லது. இந்த நேரத்தில் ராசி நாதனின் சஞ்சாரம் 4 ம் இடமான சுக ஸ்தானத்தில் ஜூன் 8 வரை இருந்தாலும் அவர் நீச்சமாகி இருப்பதால் பெரிய அளவில் உங்களுக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் போகும். உடல்நிலையில் தெளிவு இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அதன் பிறகு 5 ம் இடத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் கேதுவுடன் இணைவதால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். பிள்ளைகள் மேல் அக்கறை செலுத்த வேண்டிய அளவிற்கு அவர்களுடைய செயல்பாடு இருக்கும். பூர்வீக சொத்துகளில் பிரச்னை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் நெருக்கடி உண்டாகும் என்றாலும் அதற்கேற்ற வருமானம் வரும். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள் ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். தொழில், உத்யோகத்தில் இருந்த பிரச்னை விலகி முன்னேற்றமான நிலை உண்டாகும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் லாபம் உண்டாகும். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க முடியும். மாணவர்களுக்கு கல்லுாரி கனவு நனவாகும். ஆன்லைன் வர்த்தகம் லாபம் தரும். கலைஞர்கள், அரசியல்வாதிகள் நிலை உயரும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 11, மே.15.
அதிர்ஷ்ட நாள்: மே. 18, 19, 27, 28. ஜூன். 1, 9, 10.
பரிகாரம்: சூரிய வழிபாடு மேற்கொள்ள வளம் கூடும்.